பக்கங்கள்

12 மார்ச் 2013

கிளிநொச்சி மக்கள் அச்சத்தில்!

கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாலை வேளை படைகளின் சோதனைகளும் பதிவுகளும் இடம்பெற்று வருவதால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகப் பொதுமக்கள் விசனம் வெளி யிட்டுள்ளனர் கிளிநொச்சி ஏ9 வீதி, கனகபுரம் வீதி, பரந்தன் பூநகரி வீதி, ஏ35 வீதி அகியவற்றில் அதிகாலை 4.30 மணி முதல் காலை 6 மணி வரை வீதிகளில் பயணம் செய்வோர் இடைமறிக்கப்பட்டுச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் பயணிப்போரில் விவரங்களும் பதிவு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அதிகாலையில் பல்வேறு அதிகாலையில் அவசர தேவைகளுக்குச் செல்வோர் தினமும் பல்வேறு அசௌகரியங்ளை எதிர்கொள்வதுடன் அச்சத்துக் குள்ளாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்றுத் திங்கட்கிழமை அதிகாலை பரந்தன் முல்லைத்தீவு ஏ35 வீதியில் சிவபுரம் குடியிருப்புச் சந்திக்கு அண்மித்த பகுதியில் வீதியை வழிமறித்து படையினர் பதிவு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது அதிகாலை 4.55 மணியளவில் கடமையின் நிமித்தம் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரை படையினர் வழிமறித்துள்ளனர். அவரிடம் சாரதி அனுமதிப்பத்திரம், தேசிய அடையாள அட்டை ஆகிய இரண்டையும் படையினர் கோரியுள்ளனர். குறித்த இளைஞர் சாரதி அனுமதிப் பத்திரத்தைக் காண்பித்ததுடன் தான் மிக அவசரமாக செல்ல வேண்டியிருப்பதாகக் கூறியபோதும் அவரை 20 நிமிடங்கள் வரை தடுத்து வைத்து படையினர் பதிவுகளை மேற்கொண்ட பின்னரே விடுவித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பதிவுகளை மேற்கொள்ளும் படையினர் அவசர தேவைகளுக்காகச் செல்வோருக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வது குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். படையினரின் இந்த சோதனை நடவடிக்கைகளால் அதிகாலை வேளையில் பயணிப்பதற்குப் பலரும் அச்சப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.