பக்கங்கள்

17 மார்ச் 2013

தமிழக மாணவர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு கனேடியத் தமிழர்களின் வாழ்த்தும் ஆதரவும்

ncct_logo150[1]தொப்புள்கொடி உறவுகளான தமிழ்நாட்டு உறவுகளுக்கும் இன்று உலகப்பரப்பைத் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் உணர்வுபூர்வமாகவும் எழுச்சியாகவும் தமிழீழமே தமிழருக்கான தீர்வாக அமையும் என்று கூறிக் களம் இறங்கியுள்ள எம் தமிழக மாணவச் செல்வங்களே! உங்கள் அனைவருக்கும் கனடாவாழ் தமிழ் மக்கள் சார்பில் கனடியத் தமிழர் தேசிய அவை தனது வாழ்த்துக்களையும் ஆதரவினையும் தெரிவித்து நிற்கிறது. ஆரம்பகாலங்களில் இருந்த போராட்ட உணர்வுகளும் ஆதரவுகளும் இன்றும் தமிழக மாணவர்களாகிய உங்களிடம் காணப்படுவதானது இன்று புலம்பெயர் நாடுகளில் வாழக்கூடிய பத்து லட்சத்திற்கு மேற்பட்ட புலம்பெயர் தமிழ் மக்களையும் போராட உத்வேகமளிக்கிறது. இன்று தமிழக மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள போராட்டம் புலம்பெயர் தமிழர்கள் மனதில் நிறைவைத் தந்துள்ளது. எனவே இச்சிந்தனை ஓட்டத்திற்கு செயல்வடிவம் கொடுத்து ஒவ்வொருவரு தமிழரும் போராட்டக்களத்தில் இணைந்து கொள்ளவேண்டுமென்று கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டுகோள் விடுக்கிறது. மக்கள் போராட்டத்திற்கு முன் எந்த சக்தியும் தோற்றுவிடும். அதிலும் மாணவர் போராட்டத்திற்கு முன் எந்த எதிர்ச்சக்தியும் பொசிங்கிப் போய்விடும் என்பதையே வரலாறுகள் கூறி நிற்கின்றன. அந்த வகையில் மாணவர் போராட்டங்கள் உலகப்பரப்புகள் எங்கும் தொடரட்டும். நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் இதுவரை விலைமதிப்பற்ற எண்ணற்ற உயிர்களை விதைத்துள்ளோம். இருந்தும் உலகின் நீதி எமக்கு மறுக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகின்றது. அன்று முத்துக்குமார் ஏற்றிய விடுதலைத் தீயை இன்று தமிழக மாணவர்களாகிய உங்களிடத்தில் காணக்கூடியதாகவுள்ளது. தமிழரென்ற உணர்வுடன் குறிப்பாக எழுச்சிகர மாணவர்களென்ற உணர்வுடன் இத்தீயை அணையாமல் தொடர்ந்து தமிழீழம் மலரும்வரை பல கிராமங்களுக்கும் மாநிலங்களுக்கும் இந்திய தேசத்துக்கும் ஏன் உலகிற்கும் எங்கள் போராட்டத்தின் நியாயத்தை எடுத்துச்சென்று இனப்படுகொலை செய்த சிறிலங்கா அரசிற்கும் அதன் கூலிப் படைகளுக்கும் தண்டனையைப் பெற்றுக் கொடுத்துத் தமிழர்களிற்கான சுதந்திர தமிழீழம் அமையும் வரை போராட வழி செய்வோம்.

வாழ்க தமிழ்!
வெல்க மாணவர் போராட்டம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.