பக்கங்கள்

11 மார்ச் 2013

குற்றச்சாட்டுகளை நீர்த்துப் போகவைக்கும் முயற்சி – சாடுகிறது தினமணி ஆசிரியர் தலையங்கம்

dinamaniஐ.நா. மனித உரிமைகள் குழுமத்தில் இரு நாள்களுக்கு முன்பு அமெரிக்கா தாக்கல் செய்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் சொல்லிக் கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. குழுமத்தில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளுக்கும் வரைவுத் தீர்மானத்தின் நகல் வழங்கப்பட்டபோது, அதில் இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக முன்னிறுத்துவதற்கான எந்தத் தடயமும் அந்தத் தீர்மானத்தில் காணப்படவில்லை. இவை ஏற்கெனவே, சென்ற ஆண்டு கொண்டுவரப்பட்டபோது எவ்வாறு இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசினவோ, அதைப்போலவே இப்போதும் இலங்கையில் மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசுகிறது. இலங்கை ராணுவம் நடத்திய கடைசிநேர அழித்தொழிப்புப் போரில், சரணடைந்த, பிடிப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் சர்வதேச போர்நெறிமுறைக்கு உட்படுத்தப்படாமல் கொல்லப்பட்டதோ, அண்மையில் வெளியான பாலச்சந்திரன் கொல்லப்பட்ட ஆவணப்படங்களின் தாக்கமோகூட அந்தத் தீர்மானத்தில் அணுஅளவும் காணப்படவில்லை. மனிதஉரிமை மீறல் என்று சொல்வதன் மூலம் ராணுவம் – போராளிகள் சாராத மற்ற இலங்கைத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல், நடத்தப்பட்ட வன்முறைகள், கொலைகள் இவற்றை மட்டுமே விசாரிக்கவும், பரிந்துரைக்கவும் செய்வதான வரையறைக்குள் இந்தத் தீர்மானம் தன்னைத் தானே திணித்துக்கொள்கிறது என்பதே உண்மை. இலங்கை அரசு, தான் ஏற்படுத்திய போர்ப்படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளைப் “போதுமானதாக’ நிறைவேற்றியிருக்கவில்லை என்று கருத்துத் தெரிவிக்கும் இந்தத் தீர்மானம் இலங்கைத் தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்தியுள்ள மனிதஉரிமை மீறல், மற்றும் பேச்சுரிமை, வாழுரிமை, பத்திரிகைச் சுதந்திரம், நீதி ஆகியவற்றை நிலைநிறுத்த அங்கே “ஐ.நா.வின் சிறப்பு நடவடிக்கை அதிகாரக்குழு’ செல்ல வேண்டும் என்கிறது. ஆனால், இந்த சிறப்பு நடவடிக்கை அதிகாரக் குழு தனது ஆலோசனையை, பரிந்துரையைத் தாக்கல் செய்யும் முன்னால், இலங்கை அரசுடன் கலந்தாய்வு செய்து, இலங்கையின் ஒப்புதலுடன் ஏற்புடையவற்றை அமல்படுத்தச் சொல்ல வேண்டும் என்கிறது. இந்தத் தீர்மானத்தின் மீது நம்பிக்கையே இல்லாமல் ஆக்கிவிடுகிறது இந்தக் கோரிக்கை. இலங்கை அரசுடன் கலந்தாய்வு செய்து, அவர்கள் ஒப்புதலுடன் ஆலோசனைகளையும் செயல்திட்டங்களையும் வகுப்பதற்கு அங்கே செல்ல வேண்டும் என்கிற அவசியமே இல்லையே. இலங்கைத் தமிழர்கள் நியாயம் பெற வேண்டும் என்று பொதுவான ஒரு தீர்மானத்தை, ஒரு வேண்டுகோள்போல முன்வைப்பதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லையே! இந்தத் தீர்மானத்தின் அப்பட்டமான நோக்கம், சீனாவுக்கு நெருக்கமாகி வரும் இலங்கைக்கு தன் பலத்தையும் காட்ட விழையும் “அமெரிக்க பெரியண்ணன்’ மீசை முறுக்குவதுதானே தவிர வேறொன்றுமில்லை. தமிழர் நலனில் அக்கறையெல்லாம் அவர்களுக்குக் கிடையாது. ஆட்டுக்குச் சொந்தக்காரனே அக்கறை இல்லாமல் இருக்கிறபோது, கசாப்புக் கடைக்காரனிடம் கருணையை எதிர்பார்ப்பது போலத்தான் இதுவும். அமெரிக்கத் தீர்மானம் புஸ்வாணம் என்று தெரிந்தாலும்கூட இலங்கை அரசு எதிர்ப்புத்துள்ளல்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இலங்கை உள்விவகாரத்தில் “தலையிடுகிற, அரசியல்தனமான’ தீர்மானம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா விரும்பாமல் இருக்கத் காரணம், இந்தத் தீர்மானத்தை ஆதரித்தால், அடுத்து காஷ்மீர் பிரச்னையை மற்றவர்கள் எடுத்துக்கொள்வார்கள் என்ற அச்சம்தான். அதற்காக, இலங்கைத் தமிழர்களுக்காக இந்திய அரசு அளித்த பெருநிதியும், இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று இந்திய அரசுக்கு இலங்கை அளித்த வாக்குறுதியும் என்ன ஆயிற்று என்று கேள்விகூட கேட்காமல் இருக்க வேண்டுமா என்ன? இலங்கையின் வடகிழக்கு மாகாணத்துக்கு தன்னாட்சி அளிக்க மாட்டோம் என்று வெளிப்படையாக இலங்கை அதிபர் ராஜபட்ச அறிவிப்பு செய்த பிறகும்கூட, கேள்வி கேட்க இந்திய அரசு தயங்குவது ஏன் என்று தெரியவில்லை. தீர்மானம் என்னவென்று தெரியாமல் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று சொல்லிக்கொண்டிருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித், “எப்போதுமே பிற நாடுகளின் உள்விவகாரங்களில் மற்றவர்கள் தலையிடுவதை இந்தியா ஒருபோதும் ஆதரித்தது இல்லை’ என்று அரசின் நிலைப்பாட்டை மறைமுகமாக உணர்த்தவே செய்கிறார். இலங்கைத் தமிழர்களின் கண்ணியம், சுயமரியாதை குறித்து கவலை தெரிவிக்கும் பிரதமர், இந்தத் தீர்மானம் பற்றிப் பேசாமல் மெளனம் காக்கிறார். அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் வெளிநிகழ்வுகளில் பேசும்போது, “அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்’ என்று வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று எந்தப் பொறுப்புணர்வும் இல்லாமல் பேசிச் செல்கிறார்கள். இந்த இரட்டை நிலையை, “காங்கிரஸ் – மத்திய அரசு இடையே முரண்பாடு’ என்று “டெசோ’ அமைப்பு அறிக்கை வெளியிட்டு, திமுக – காங்கிரஸ் இடையே முரண்பாடு கிடையாது என்பதை அடிக்கோடிட்டுச் சொல்கிறது. தற்போது குழுமத்தின் 22-வது கூட்டத்தில் நிறைவேற்றப்படவிருக்கும் இத்தீர்மானத்தின் முடிவுகள் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டன என்பதை ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கூடும் 25-வது கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்கிறது இந்தத் தீர்மானம். அதிலிருந்தே, இந்தத் தீர்மானத்தால் எந்தவிதப் பயனும் ஏற்பட்டு விடப் போவதில்லை என்பதும், இது வெறும் கண்துடைப்பு என்பதும் தெரிகிறது. பிறகு எதற்கு இந்தத் தீர்மானத்தைப் பற்றிய சர்ச்சைகளும் விவாதங்களும் என்று கேட்கலாம். அதிபர் ராஜபட்சவின் அரசை மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்ற, பிரச்னைகளை இழுத்தடித்து, குற்றச்சாட்டுகளை நீர்த்துப்போக வைப்பதற்கான முயற்சி என்பதல்லாமல், வேறென்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.