பக்கங்கள்

06 மார்ச் 2013

யாழில் திருடர் தொல்லை அதிகரிப்பு!

newsகைதடி, கோப்பாய் தபாலகங்களிலும், கைதடிப் பிள்ளையார் கோயிலிலும் நேற்றுமுன்தினம் இரவு திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர். இதன் போது பல லட்சம் ரூபா பெறுமதியான முத்திரைகள், பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் நல்லூர் செட்டித்தெரு பகுதியிலும் நேற்றுமுன்தினம் இரவு நான்கு கடைகள் உடைத்து திருட்டு இடம்பெற்றுள்ளது. கைதடித் தபாலகத்தில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய முத்திரைகள் மற்றும் 75 ஆயிரம் ரூபா பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கோப்பாய் தபாலகத்துக்குள் புகுந்த திருடர்கள் பாதுகாப்புப் பெட்டகத்தை உடைக்க முயற்சி செய்துள்ளனர். அது பயனளிக்காமையால் தூக்கிச் செல்ல முற்பட்டுள்ளனர். அதுவும் பயனளிக்காத நிலையில் தேடுதல் நடத்தி மேசையில் வைக்கப்பட்டிருந்த ஆயிரம் ரூபா பணத்தைத் திருடிச்சென்றுள்ளனர். கைதடித் தபாலகத்திலும் கதவை உடைத்து உள் நுளைந்து திருட்டு இடம் பெற்றுள்ளது. அங்கிருந்த பாதுகாப்புப் பெட்டகத்தை உடைக்க முயற்சித்தும் அது முடியாமையால் அவர்கள் பெட்டகத்தையே தூக்கிச் சென்றுவிட்டனர். அதற்குள் இருந்த 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான முத்திரைகள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளன. நேற்றுக் காலை தபாலகத்துக்குச் சென்ற ஊழியர்கள் நிலைமையை உணர்ந்து அதிகாரிகளூடாக கைதடி மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்தனர். பொலிஸார் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை. விசாரணை முன்னெடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதேவேளை கைதடி கிழக்கு பிள்ளையார் கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலும் பணத்துடன் திருடப்பட்டுள்ளது. யாழ். நல்லூர் கந்த சுவாமி கோயிலுக்கு முன்பாகவும், யாழ். நகரிலுமாக நேற்று முன்தினம் இரவு நான்கு கடைகள் உடைக்கப்பட்டு 2 இலட்சத்து 83 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருள்கள் மற்றும் 14ஆயிரம் ரூபா பணம் என்பன திருடப்பட்டுள்ளன. இவை தொடர்பில் யாழ். பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதெனப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை. அதில் நல்லூரில் உள்ள கடை ஒன்றில் இடம்பெற்ற திருட்டு அங்கு இடம்பெற்ற நான்காவது திருட்டுச் சம்பவமாகும். நல்லூர்க் கந்தசுவாமி கோயில் முன்பாக உள்ள பலசரக்குக் கடையின் பூட்டுக்களை உடைத்து உள் நுழைந்த திருடர் "கிற்' காட்டுகள் சிகரெட்டுக்கள் என 15 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான பொருள்களையும் 8 ஆயிரம் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். அதற்கு அருகிலுள்ள கடையின் 6 பூட்டுக்களையும் உடைத்து உள் நுழைந்த திருடர்கள் 30 ஆயிரம் ரூபா பெறுமதியான "கிற்' காட்டுகள், 10 ஆயிரம் ரூபா பெறுமதியான சிகரெட் பெட்டிகள், 3 ஆயிரம் ரூபா பெறுமதியான சோடா ரின்கள் என்பவற்றையும் 35 ஆயிரம் ரூபா பெறுமதியான அழகு சாதனப் பொருள்களையும் 8 ஆயிரம் ரூபா பணத்தையும் திருடியுள்ளனர். பின்னர் முன்னர் இருந்தமை போன்று கதவை மூடி பூட்டுகளையும் கொழுவிவிட்டுச் சென்றுள்ளனர். மற்றோரு உணவு நிலையத்தை உடைத்து திருடர்கள் உழ்நுழைந்த போதும் அங்கு எதுவும் திருடப்படவில்லை. கோயிலுக்கு முன்பாக செட்டித்தெரு வீதிச் சந்தியில் உள்ள தொலைத்தொடர்பு நிலையத்தை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் அங்கு 80 ஆயிரம் ரூபா பெறுமதியான கணினிகள் பெறுமதிமிக்க 8 கைத்தொலைபேசிகள், கைத் தொலைபேசி பற்றரிகள் என்பவற்றை திருடிச் சென்றுள்ளனர். இந்தத் தொலைத் தொடர்பு நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த திருட்டு நான்காவது திருட்டுச் சம்பவம் ஆகும் கடந்த ஆண்டு ஒக்டோபர் முதலாம், 10ஆம், 17 ஆம் திகதிகளிலும் இந்த நிலையம் உடைக்கப்பட்டு கைத்தொலைபேசிகள், கணினிகள் என 5 இலட்சம் ரூபா பெறுமதியான பொருள்கள் திருடப்பட்டுள்ளன. இது தவிர நேற்று முன்தினம் இரவு யாழ். முனியப்பர் வீதியிலுள்ள நடைபாதைக்கடை ஒன்று உடைக்கப்பட்டு சுமார் ஓர் இலட்சம் ரூபா பெறுமதியான புடைவைகள் திருடப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.