பக்கங்கள்

20 மார்ச் 2013

நடிகர் நடிகைகளும் களமிறங்குகின்றனர்!

Sri Lankan Tamil Issue Nadigar Sangam தமிழ் ஈழம் அமைவதற்கான பொதுவாக்கெடுப்பு கோரி தமிழ் சினிமா நடிகர் நடிகைகளும் களமிறங்குகின்றனர். தங்களின் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் மற்றும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தை இன்றைய செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு அறிவிக்க உள்ளனர். இலங்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்துள்ளது. அங்கு நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை திருத்தங்களுடன் இந்தியா ஆதரிக்க வேண்டும், தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி இப்போராட்டங்கள் நடக்கின்றன. திரையுலகினரும் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர். தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினர் சென்னையில் நேற்று உண்ணாவிரதம் இருந்தார்கள். பெப்சி தொழிற்சங்கத்தினரும் இதில் பங்கேற்றார்கள். இந்நிலையில், நடிகர் சங்கமும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. இச்சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் இன்று மாலை தியாகராயநகரில் நடக்கிறது. நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் ராதாரவி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்கின்றனர். இலங்கை பிரச்சினை குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது. இலங்கைக்கு எதிராக எத்தகையை போராட்டத்தில் ஈடுபடுவது என்று ஆலோசித்து முடிவு எடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர். உண்ணாவிரதம் அல்லது ஆர்ப்பாட்டம் நடத்தப்படலாம் என தெரிகிறது. ஒருநாள் படப்பிடிப்பை ரத்து செய்வது பற்றியும் ஆலோசித்து வருகின்றனர். நடிகர், நடிகைகள் பலர் வெளிநாடுகளில் படப்பிடிப்புகளில் உள்ளனர். அவர்கள் அனைவரும் கலந்து கொள்வதற்கு வசதியாக போராட்ட தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது. இப்போராட்டத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், இருவரும் பங்கேற்க உறுதியளித்துள்ளதாகத் தெரிகிறது. இலங்கை அரசை கண்டித்தும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.