பக்கங்கள்

01 மார்ச் 2013

ஜெனிவாவில் சானல் 4 வீடியோ திரையிடப்பட்டது

சானல் 4 தொலைக்காட்சியின் நோ ஃபயர் ஷோன் என்ற இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர் குற்றங்கள் குறித்த படம் இன்று ஜெனிவாவில் ஐநா வளாகத்தில், மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளுக்காக வந்திருந்தவர்களுக்காக திரையிடப்பட்டுள்ளது. ஐநாவின் 23 வது அறையில் அது திரையிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் இந்தப் படத்தை அங்கு திரையிட அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருந்தபோதிலும், ஐநாவில் கருத்து சுதந்திரத்தை தடுக்க முடியாது என்ற அடிப்படையில் அது அங்கு திரையிடப்பட்டதாக அங்கு அந்த படத்தை பார்த்தவர்களில் ஒருவரான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐநா நடவடிக்கைகளுக்கான இணைப்பாளரான முருகையா சுஜிந்தன் கூறினார். பாதுகாப்பு வலயத்தில் நடந்ததாகக் கூறப்படும் குற்றங்கள், சிறுவர்கள் இந்தப் போரினால் எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள் என்பது போன்ற பல விடயங்களை அந்தப் படம் காண்பித்ததாகவும், பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் மற்றும் சிறுவன் பாலச்சந்திரனின் கொலை குறித்த தகவல்கள் ஆகியனவும் அதில் அதிகம் இடம்பெற்றதாகவும் சுஜிந்தன் கூறினார். அந்த மண்டபத்துக்கு வந்திருந்த ஜெனிவாவுக்கான இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க அவர்கள், இந்தப் படம் புனையப்பட்ட காட்சிகளை காண்பித்தது என்று கூறியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து அங்கு பேசிய இலங்கையில் நடந்த போர் நிகழ்வுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக ஐநா மன்ற செயலரால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவைச் சேர்ந்த ஜாஸ்மின் சூகா அவர்கள், இலங்கை போர் நிகழ்வுகள் குறித்து சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்பதை இது உறுதி செய்கிறது என்று கூறியதாகவும் சுஜிந்தன் கூறினார்.

நன்றி:பி.பி.சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.