பக்கங்கள்

11 மார்ச் 2011

த.தே.கூ.உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல்!

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அவர் இல்லாத நேரம் அவருடைய வீட்டிற்குச் சென்ற பத்துப்பேர் அடங்கிய அடையாளம் தெரியாத குழுவினரே இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளனர். அவர்களுடன் வாய்த்தர்க்கம் புரிந்த அவரது மனைவியையும் அவர்கள் கழுத்தைப் பிடித்து நெரித்து அச்சுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா சமயபுரம் பகுதியில் புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் முக்கியஸ்தரும், வர்த்தகப் பிரமுகருமாகிய எஸ்.செல்லத்துரை என்பவருக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது.
அரசியல் பிரமுகராகிய செல்லத்துரை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வெளியில் சென்றிருந்தபோது, அவரது வீட்டிற்கு வான் ஒன்றில் சென்ற பத்துப்பேரில் ஆறுபேர் அவரது வீட்டிற்குள் புகுந்து அவரைத் தேடியுள்ளனர்.
அவர் வீட்டில் இல்லாதிருந்ததையடுத்து, அவரது மனைவியிடம், அவரைக் கவனமாக இருக்குமாறும். தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும் எச்சரிக்கை செய்துள்ளனர்.
இவ்வாறு எச்சரிக்கை செய்வதற்கு வந்திருப்பவர்கள் யார் எனக் கேட்டு, அவரது மனைவி வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதையடுத்து, தாங்கள் அமைச்சரின் ஆட்கள், அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு அவரைக் கொலை செய்யுமாறுதான் உத்தரவு. நீ என்ன வாய் காட்டுகிறாய் எனக் கேட்டு அந்தப் பெண்ணின் கழுத்தைப் பிடித்து நெரித்துள்ளார்கள்.
இந்தச் சம்பவத்தையடுத்து. அயலில் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடிவரவே, வந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி தப்பிச் சென்றுள்ளார்கள்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது. தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் தெரிவித்ததையடுத்து, அவரது வீட்டுக்குப் பொலிசார் விசேட பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.