பக்கங்கள்

16 மார்ச் 2011

விடுதிகளில் தங்கியிருந்த யாழ்,தமிழர்கள் கைது!

கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த யாழ்ப்பாண தமிழர்களை ஸ்ரீலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் குறித்த நபர்களை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த 48 யாழ்ப்பாண தமிழர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்டவர்களை ஸ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் பயணம் செய்வதற்காக குறித்த நபர்கள் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களில் தங்கியிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை எதிர்வரும் 27;ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் ரஷ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பல்வேறு தேவைகளுக்காக அவர்கள் கொழும்பு சென்றுள்ளதாகவும் சந்தேக நபர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டின் எந்தவொரு பிரஜையும் தாம் விரும்பும் இடத்திற்கு பயணம் செய்வதற்காக பூரண உரிமை காணப்படுவதாக சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அப்பாவி மக்களை புலனாய்வுப் பிரிவினர் எந்தவிதமான காரணமும் இன்றி கைது செய்துள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
பத்து வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் எவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியிருக்க முடியும் என சட்டத்தரணிகள் நீதிமன்றில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டவர்களில் நான்கு பேரை நீதவான் விடுதலை செய்ததுடன் ஏனையவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.