பக்கங்கள்

14 மார்ச் 2011

மன்சூர் அலிகான் சுயேட்சையாக களமிறங்குகிறார்!

பிரபல வில்லன் நடிகர் மன்சூர்அலிகான் சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில்,
’’அரசியல் கட்சிகள் வாக்காளர்களை மறந்து விட்டன. எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது எவ்வளவு தொகுதிகள் ஒதுக்குவது என்பதில் தான் கவனம் செலுத்துகின்றன. தேர்தல் முடிந்ததும் உறவை தேனிலவு முடிந்தது என்று சொல்லி உறவை முறித்து விடுவர்.
இது போன்ற செயல்கள் எனக்கு ஆத்திர மூட்டியுள்ளது. எனவே எந்த கட்சியிலும் சேராமல் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளேன். எந்த தொகுதியில் நிற்பேன் என்பதை ஓரிரு தினங்களில் அறிவிப்பேன். ஏற்கனவே 1999 பாராளுமன்ற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு 88 ஆயிரத்து 546 வாக்குகள் வாங்கியுள்ளேன்.
அதன் பிறகு திருச்சி பாராளுமன்ற தேர்தலிலும் நின்றேன். முக்கிய ஆளும் கட்சி அங்கு தோற்பதற்கு நான் காரணமாக அமைந்தேன். இந்த முறை நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். நான் சட்டமன்றத்துக்கு சென்றால் ஆளும் கட்சியின் கால்களில் விழுந்தாவது தொகுதி மக்களின் குறைகளை தீர்க்க பாடுபடுவேன்.
புளி வியாபாரம், வத்தல் வியாபாரம் செய்பவர்களின் பணத்தையெல்லாம் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பிடுங்குகிறார்கள்.
உண்மையாகவே பணத்தை கடத்துபவர்கள் இவர்களிடம் மாட்டுவது இல்லை. தமிழர் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன. வெளி மாநிலத்தவர் தான் இங்கு ஆதிக்கம் செய்கின்றனர். தேர்தலுக்கு பிறகு தமிழர்களுக்கு உதவுவதற்காக தமிழ் பேரரசு என்ற அமைப்பை துவங்க இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.