பக்கங்கள்

17 மார்ச் 2011

விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணி!

தமிழகத் தேர்தல் களத்தில் விஜயகாந் தலைமையில் மூன்றாவது அணியை ஏற்படுத்தி தேர்தலை சந்திக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிடும் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், அதிக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அ.தி.மு.க., தன்வசமாக்கி கொண்டதாக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இதையடுத்து தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இன்று தனித்தனியே ஆலோசனை மேற்கொள்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து விவாதிப்பதாக தெரிகிறது.
அதிமுகவில் இருந்து வெளியேறும் கட்சிகளை தேமுதிக தலைமையில் ஒருங்கிணைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.ஏற்கனவே பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் காலதாமதம் செய்து வந்ததால் அதிமுக மீது இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிருப்தியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கேட்ட தொகுதிகளை கொடுக்காமலும், பேச்சுவார்த்தைக்கு அழைக்காமலும் இருந்த அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் அறிவித்திருந்தார். மேலும் அதிமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகும் பட்சத்தில், மதிமுகவுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க தயார் என்றும், அதேபோல் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் அனைத்துக் கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க தயார் என்றும் கார்த்திக் கூறியிருந்தார்.
அதிமுக கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளதால், தமிழகத்தில் மூன்றாவது அணி அமையுமா என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.