பக்கங்கள்

22 நவம்பர் 2010

பிள்ளையான்,டக்ளஸ் ஆகியோர் கூட்டமைப்பால் புறக்கணிப்பு!

தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளுடன் முதலில் தனித் தனியாக பேச்சு நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் நேற்று கூடினார்கள்.
தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இணையலாமா? என்பது குறித்து அங்கு ஆராயப்பட்டது. அரங்கத்தில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளை தனித் தனியாக சந்தித்துப் பேசிய பின்னர் இணையலாமா? என்கிற முடிவுக்கு வரலாம் என அங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக புளொட் , ஈ.பி.ஆர்.எல்.எப் வரதர் அணி, ஈழ ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகம், தமிழ் தேசிய விடுதலை முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளுடன் தனித் தனியாக கூட்டமைப்பு பேச்சு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இக்கட்சிகளின் தலைவர்களுக்கு சந்திப்புக்கான அழைப்பிதழ்கள் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட உள்ளன.
ஆனால் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியவற்றை கூட்டமைப்பு கிஞ்சித்தும் கணக்கில் எடுத்திருக்கவில்லை என்றும் இக்கட்சிகளை சந்தித்துப் பேசுவது குறித்து கூட்டத்தில் எதுவும் தெரிவிக்கப்படவோ, தீர்மானிக்கப்படவோ இல்லை என்றும் தெரிய வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.