பக்கங்கள்

30 நவம்பர் 2010

சிறிலங்காவுடன் அமெரிக்கா இரகசிய ராஜதந்திர உறவு!

சிறிலங்காவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இரகசிய இராஜதந்திர தொடர்புகள் குறித்த விடயங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளது.
ஈராக் போரில் அமெரிக்காவின் இரகசிய விடயங்கள் குறித்த ஆவணங்களை வெளிப்படுத்தி அம்பலப்படுத்தியதன் மூலம் உலகளவில் பிரபலமடைந்த விக்கிலீக்ஸ் இணையத்தளம் தற்போது அமெரிக்க அரசின் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்த ஆவணங்களை அம்பலப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க அரசாங்கமானது உலகின் பல்வேறு நாடுகளுடன் வைத்திருக்கும் இராஜதந்திர உறவுகள் தொடர்பான 251,287 ஆவணங்கள் விக்கிலீக்ஸ் இணையத்தளம் வசம் சிக்கியுள்ளன.
அதில் மூவாயிரத்துக்கும் அதிகமானவை இலங்கையுடனான இராஜதந்திர உறவுகள் சம்பந்தப்பட்டவை என்று கூறப்படுகின்றது. 1996ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரையான காலப்பகுதிக்குள் இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திரத் தொடர்புகள் தொடர்பான மூவாயிரத்துக்கும் அதிகமான ஆவணங்கள் எதிர்வரும் நாட்களில் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையுடனான இராஜதந்திரத் தொடர்பின் இரகசிய விடயங்கள் அடங்கிய ஆவணங்கள் வெளிவருவது குறித்து கொழும்பிலுள்ள அமெ ரிக்கத் தூதரகம் பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக தெரியவருகின்றது.
அதற்கு மேலதிகமாக இந்தியா (5087), பாகிஸ்தான் (4775), ஆப்கானிஸ்தான் (7095), பங்களாதேஷ் (2182) ஆகிய நாடுகள் தொடர்பான ஆவணங்களும் விக்கிலீக்ஸ் வசம் கிடைத்துள்ளதுடன் அவையும் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
நேற்றைய தினம் தன்னிடமுள்ள ஆவணங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. ஏனைய ஆவணங்கள் எதிர்வரும் நாட்களில் படிப்படியாக வெளியிடப்படும் என்று விக்கிலீக்ஸ் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.