பக்கங்கள்

02 நவம்பர் 2010

புலிகள் இந்தியாவில் அணிதிரள முயல்கிறார்கள்!

எஞ்சியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்ப்பதாகவும் அவர்களால் இந்தியாவின் முக்கியஸ்தர்களுக்கு ஆபத்து உள்ளதாக இந்திய அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் மீதான தடையைக் கொண்டுவருவதற்குரிய காரணங்கள் பற்றி தீர்ப்பாயத்தில் நடந்த விவாதத்தின்போதே இக்கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
நீதிபதி விக்கிரம்ஜித் சென் முன்னிலையில் நடந்த இவ்விவாதத்தின்போது, விடுதலைப் புலிகளைத் தடை செய்வதற்கு அரசு போதிய ஆதாரங்களைக் கொண்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் அமர்ஜித் சிங் சந்தியோக் தெரிவித்தார். அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் வெளியிடப்பட்ட கட்டுரைகள் மற்றும் பேச்சுக்களையும் இதற்கு ஆதாரமாகச் சுட்டிக்காட்டியுள்ளாராம். குறிப்பாக சீமானின் உரைகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னர் 1992 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடைசெய்வதாக இந்திய அரசு அறிவித்திருந்தது. இத்தடையை மேலும் இரு ஆண்டுகளுக்கு நீடிப்பதாக கடந்த மே மாதம் 14 ஆம் திகதி மத்திய அரசு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் புலிகள் அழிக்கப்பட்டு விட்டாலும்கூட எஞ்சியுள்ள புலிகள் தமிழ்நாட்டிற்குள் வந்து இங்கு மீள அணி சேர்வதாக அரசு கூறுகிறது. புலிகள் தமது செயற்பாடுகளுக்கான பிரதான தளமாக குறிப்பாக தமிழ் நாட்டைப் பயன்படுத்துவதாகவும் நேற்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.