பக்கங்கள்

05 பிப்ரவரி 2011

லண்டனில் தீ விபத்து முல்லைத்தீவு பெண்கள் இருவர் பலி!

முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளை, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களைச் சேர்ந்த இரண்டு குடும்பப் பெண்கள் லண்டனில் 16 அடுக்குள்ள தொடர்மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் மரணமடைந்துள்ளதாக லண்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் வெள்ளியன்று தென்கிழக்கு லண்டனில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளையைச் சேர்ந்த தர்மலிங்கம் சந்திராவதி மற்றும் புதுக்குடியிருப்புவாசியாகிய அழகரத்தினம் ரஞ்சிதாதேவி ஆகியோரே உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்மாடி வீடொன்றின் 16 ஆவது மாடியில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்தத் தீவிபத்து நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் நான்குபேர் காயமடைந்தனர். அவசர முதலுதவிகளின் பின்னர் படுகாயமடைந்த மற்றுமொரு வன்னிப்பிரதேசப் பெண் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவிபத்து சம்பவம் பற்றி அறிந்ததும் 50 பேர் கொண்ட தீயணைக்கும் படையைச் சேர்ந்த குழுவினர் கடும் முயற்சியின் பின்னர் தீயை அணைத்து நிலைமையைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளனர்.
தீயினுள் சிக்கியிருந்த 6 பேரை மீட்டுள்ள லண்டன் தீயணைக்கும் படையினர், அந்தக் கட்டிடத்தில் இருந்து 35 பேரைப் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீவிபத்து ஏற்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகின்றபோதிலும். இது நாச வேலையாக இருக்கலாமோ என்பதைக் கண்டறிவதற்காக விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக லண்டன் பொலிசார் கூறியுள்ளனர்.
தீயினால் நாசமடைந்த வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அவசர மாற்று குடியிருப்பு வசதிகளைச் செய்யும் நடவடிக்கைகளில் பொலிசாரும் லியுஷாம் பிரதேச உள்ளூராட்சி கவுனிசிலர் ஒருவரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.