பக்கங்கள்

09 பிப்ரவரி 2011

லண்டன் வந்து தீயில் கருகிய கொடூரம்!

இலங்கையில் போரில் தப்பிய என் தாயார் 7 வருடங்களின் பின்னர் எம்மைப் பார்ப்பதற்காக லண்டன் வந்து தீயில் கருகும் நிலை ஏற்பட்டு விட்டதாக, முல்லைத்தீவைச் சேர்ந்த பெண்ணொருவர் லண்டன் ஊடகங்களுக்கு கவலையுடன் தெரிவித்திருக்கின்றார்.கடந்த வெள்ளிக்கிழமை லண்டன் லூசியம், கிறீனிச் அருகிலுள்ள டெட்போர்ட் (Deptford) பகுதியிலுள்ள மரீன் ரவர் என்ற 16 அடுக்குமாடியில் (Marine Tower, Abinger Grove) இடம்பெற்ற தீ விபத்தில் 59 அகவையுடைய சந்திராபதி தர்மலிங்கம், 42 அகவையுடைய குணாழினி அழகரட்னம் ஆகியோர் உயிhழந்திருந்தனர்.
இவர்களில் ஐந்து பிள்ளைகளின் தாயாரான திருமதி சந்திராபதி 2004ஆம் ஆண்டு லண்டன் வந்து சென்ற பின்னர் மீண்டும் தனது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளைப் பார்வையிட 7வருடங்களின் பின்னர் வந்திருந்தார். இவர் தனது மைத்துனியான இரண்டு பிள்ளைகளின் தாயாரான குணாழினியைப் பார்வையிடச் சென்றபோதே அங்கு தீ விபத்து ஏற்பட்டிருந்தது.
இவர்களைக் காப்பாற்ற 50 பேர் வரையிலான தீயணைப்புப் படையினர் போராடிய போதிலும், அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போயிருந்தது.
இந்த இழப்பு பற்றி செவ்வாய்கிழமை ஊடகங்களுக்கு கருத்துரைக்க சந்திராபதியின் மகளான 38 அகவையுடைய நந்தினி, தனது தாயாரை 7 வருடங்களின் பின்னர், அதுவும் கொடிய போரில் இருந்து தப்பி வந்த அவரைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைந்திருந்த போதிலும், அந்த மகிழ்ச்சி முழுவதும் அழிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அம்மாவின் இழப்பில் தானும் தனது குடும்பத்தினரும் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
தமது தந்தை 2003ஆம் ஆண்டு இறந்துவிட்ட நிலையில், ஊரில் வாழந்த தாயார் 2004ஆம் ஆண்டு லண்டனிற்கும். பரிசிற்கும் வந்து தம்மைப் பார்த்துவிட்டுச் சென்றதாகவும், மீண்டும் வந்திருந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்நிருப்பதாகவும் நந்தினி மேலும் கூறினார்.
நந்தினியின் சகோதரனான 33 அகவையுடைய சந்திரலிங்கம் கூறும்போது, தனது தாயாரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், அவரது சிரிப்பு முகமே ஞாபகத்திற்கு வருவதாகக் கவலையுடன் தெரிவித்தார்.
தீயில் பலியான மற்றையவரான 42 அகவையுடைய குணாழினி அழகரட்னத்திற்கு 17 அகவையுடைய கோகிலவரதன், 5 அகவையுடைய கிசான் ஆகிய இரண்டு பிள்ளைகள் இருப்பதுடன், தாயகத்திலிருந்து கடந்த 6 வருடங்களின் முன்னரே இவர் லண்டனிலுள்ள தனது கணவர் பொன்னம்பலம் அழகரட்னத்துடன் வந்து இணைந்திருந்தார்.
குணாழினி பற்றிக் கூறிய அவரது உறவினரான லூசியத்தைச் சேர்ந்த 21 அகவையுடைய தரினாத் மகேந்திரராஜா, குணாழினி எப்பொழுதும் அனைவரையும் அன்பாகப் பராமரிக்கும் பழக்கம் உடையவர் எனவும், அவரது இழப்பை தம்மால் ஈடுசெய்ய முடியவில்லை எனவும், அவர் எப்பொழுதும் தனது பிள்ளைகளை நன்றாகக் கவனித்து, அவர்கள் சிறப்பாக கல்வி கற்கப் பாடுபட்டவர் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, இவர்கள் இருவரும் தீ விபத்தில் உயிரிழக்கவில்லை எனவும், தீ வைத்துக் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள பிரித்தானிய காவல்துறையினர், குணாழியின் மாடித் தொடரின் பக்கத்து வீட்டில் வசித்த 49 அகவையுடைய சாள்ட்றா கிளார்க் (Sandra Clarke) என்பவரைக் கைது செய்து நேற்று (08-02-2011) கம்பர்வெல் கிறீன் (Camberwell Green) நீதிமன்றில் காணொளி வாயிலாக சாட்சியம் அளிக்க வைத்துள்ளனர். இவரை மீண்டும் எதிர்வரும் 14ஆம் நாள் வூளிச் கிறவுன் நீதிமன்றில் (Woolwich crown court) முன்னிறுத்தமாறு நீதியாளர் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.