பக்கங்கள்

06 பிப்ரவரி 2011

தமிழர்களை பயங்கரவாதிகள் என்று அழைக்கின்றமை மன்னிக்க முடியாத குற்றம்!

இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கனேடிய மனித உரிமைகளுக்கான மையத்தின் ஏற்பாட்டில் நேற்று முன் தினம் கனடாவின் தலைநகர் ரொரன்ரோவில் நடத்தப்பட்ட மாநாட்டில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் கலந்து கொண்டார்கள்.
ஆளும் கட்சியில் இருந்து கலந்து கொண்ட முக்கிய பிரமுகரான போல் கலாண்ட்ரா தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்கிற கண்ணோட்டத்தில் கனேடிய அரசு பார்க்கவில்லை, இலங்கையை மீண்டும் கட்டி எழுப்ப இதுவே நல்ல தருணம், கனடாவில் விரைவில் முன்னேறிய இனங்களில் தமிழ் இனமும் ஒன்று என்றார்.
லிபரல் கட்சியை சேர்ந்த ஜஸ்ரின் ரூடோ, பொப் றே, மார்க் கொலண்ட் , ரொப் ஒலிபாண்ட், ஆகிய எம்.பிகள் ஆற்றிய உரைகள் முக்கியம் ஆனவை.
தற்போதைய உலகில் சொந்த அரசுகளிடம் இருந்து மக்கள் நிறையவே எதிர்பார்க்கின்றனர். எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாதபோது மக்கள் போராட்டம் வெடிக்கின்றது, இளைஞர் சமுதாயம் மனித உரிமைகள் விடயத்தில் முன்னின்று செயல்படுகின்றது என்று ஜஸ்ரின் ரூடோ எம்.பி தெரிவித்தார்.
லிபரல் கட்சியின் வெளிவிவகாரக் கொள்கைகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் பொப் றே பேசுகையில்,
இலங்கையில் இன ஒற்றுமையை ஏற்படுத்த உலக நாடுகள் உதவி செய்கின்றன, ஆனால் நடைமுறையில் இலங்கையில் இன ஒற்றுமையை ஏற்படுத்துகின்றமை இன்னமும் சாத்தியம் ஆகவில்லை என்றார்.
இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்த ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை லிபரல் கட்சி எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது, இலங்கையில் என்ன நடந்தது? என்பது ஆழமாக ஆராயப்பட வேண்டும், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழும் தமிழர்கள் சொந்த மண்ணை கட்டி எழுப்ப வேண்டும் என்றும் கூறினார்..
லிபரல் கட்சியின் பொதுமக்கள் பாதுகாப்புக் கொள்கைகளுக்குப் பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் கொலண்ட் பேசுகையில்,
தமிழர்கள் இலங்கையில் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர், எனவே அவர்களை அந்நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடியாது, ஒவ்வொரு தமிழரும் கனேடிய அரசால் கொண்டு வரப்பட இருக்கும் சீ-49 என்ற சட்டத்துக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் , இச்சட்டம் நிறைவேற்றப்படுவதை எமது கட்சி தடுத்தே தீரும் என்றார்.
லிபரல் கட்சியின் பல்லின கலாசார விவகாரங்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் றொப் ஒலிபாண்ட் பேசுகையில்,
தமிழர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என்று கூறி ஒதுக்குகின்றமையை யாரும் கனடாவில் ஏற்றுக் கொள்ளமுடியாது , சீ-49 சட்டமூலம் தமிழர்கள் கனடாவுக்கு வருகின்றமையைத் தடுக்க வருகிறது என்றார்.
இவ்விழாவில் பேசிய சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதி ஜோன் ஆர்க்கியூ,
தமிழர்களைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கின்றமை மன்னிக்கமுடியாத குற்றம் என்றும் அகதிகளாகக் கனடாவுக்கு வருகிற எவரும் பக்க சார்பற்ற முறையில் நடத்தப்படுகின்றமைக்கு உரித்துடையவர்கள் என்றும் இலங்கை அரசு சர்வதேச விசாரணையை யுத்தக் குற்றங்கள் தொடர்பாக எதிர்நோக்கியே தீரவேண்டும் என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.