பக்கங்கள்

02 பிப்ரவரி 2011

அர்த்தமுள்ள தீர்வின் மூலமே பிரச்சனைகளை தீர்க்க முடியும்!

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும் அவ்வாறானதொரு தீர்வு எட்டப்படுவதன் மூலமே நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என யாழ்ப்பாணம் சென்றுள்ள பிரிட்டிஷ் மற்றும் சுவிஸ் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் நல்லதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்கு மேற்குலக நாடுகள் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களைப் கொடுக்கும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுளளனர்.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக இந்தியா, சீனா போன்ற நாடுகள் உதவி வழங்கி வருவதால், மேற்குலக நாடுகள் இலங்கைக்கான உதவிகளைக் குறைத்துள்ளன எனவும் அவர்கள் கூறியுள்ளனர். பிரிட்டனின் தெற்காசிய பிராந்திய ஆலோசகர் டேவிட் ஆஷ்லி , அபிவிருத்திக்கும் அரசியலுக்குமான இரண்டாந்தரச் செயலாளர் டொமினிக் வில்லியம்ஸ், பிரிட்டிஷ் தூதரகத்தின் அரசியல் உத்தியோத்தகர் அஷ்மா எட்றிஸ் மற்றும் சுவிஸ் தூதரகத்தைச் சேர்ந்த சஷ்யா முல்லர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர் நேற்று சமாதானத்துக்கும் நல்லெண்ணத்துக்குமான மக்கள் குழுவினரை ஆயர் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
அங்கு கருத்து வெளியிட்ட இந்த பிரதிநிதிகள், இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமது நாடுகள் பல்வேறுபட்ட மனிதாபிமான உதவிகளை வழங்கி இருந்ததாகவும் இருப்பினும் தற்போது இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு இந்தியா மற்றும் சீனா அதிகளவிலான பொருளாதார உதவிகளை வழங்கிவருவதினால் மேற்குலக நாடுகள் இலங்கைக்கான உதவிகளைக் குறைத்துக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் வெகுவிரைவில் பிரிட்டிஷ் தூதரகத்தின் கிளை திறந்துவைக்கப்படும். மற்றும் இங்குள்ள மக்களின் ஆங்கிலக் கல்வி விருத்திக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நடந்து முடிந்த விடயங்களை விடுத்து இனி வரப்போகும் விடயங்கள் பற்றிச் சிந்திப்போம் எனவும் பிரிட்டிஷ் மற்றும் சுவிஸ் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.