பக்கங்கள்

10 பிப்ரவரி 2011

கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல் சந்தேக நபரை காணவில்லையாம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான விக்டர் ஈ எல்பர்ட் அந்தோனி என்பவர் காணாமல் போயுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று அறிவிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி வெள்ளை வானில் சென்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்களால் சந்தேக நபர் கடத்திச் செல்லப்பட்டதாக காணாமல் போன சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி அப்பாத்துரை விநாயகமூர்த்தி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள எழுத்து மூலமான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் திருகோணமலை சுங்க வீதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சி அலுவலகத்தில் செயற்படும் சுரங்க, விஜி ஆகியோரை சந்தேகப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதி வராவெவ, காணாமல் போனவர்கள் சம்பந்தமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிய தருமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்
சம்பவம் தொடர்பாக திருகோணமலை பிராந்தியத்திற்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருந்தது. கட்டுநாயக்க விமான தளம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஒருவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர்.மேலும் ஒரு சந்தேக நபரான பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் 5 பேர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.