பக்கங்கள்

03 பிப்ரவரி 2011

விடுதலையாகும் போராளிகள் கண்காணிக்க படுவார்களாம்!

புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து விடுவிக்கப்படும் முன்னாள் போராளிகள் முதல் மூன்றுமாத காலத்திற்கு கண்காணிக்கப்படுவார்கள் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க தெரிவித்தார்.
புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து வெளியேறும் போராளிகள் தாங்கள் பெற்றுக்கொண்ட பயிற்சியினை எவ்வாறு பயன்படுத்துகின்றார்கள் என்பது குறித்து ஆராயவும் அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு கருதி விடுக்கப்பட்ட வேண்டுகோள்களுக்கிணங்கவுமே இந்த கண்காணிப்பு நடவடிக்கை இடம் பெறுவதாக ஆணையாளர் குறிப்பிட்டார்.
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை அமைச்சின் கீழுள்ள பாதுகாப்பான இடங்கள் மற்றும் புனர்வாழ்வு நிலையங்களின் செயற்பாடுகள் தொடர்பாக உள்நாட்டு, வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு நேற்று புதன்கிழமை காலை கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு விளக்கமளிக்கையிலேயே புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுசந்தரணசிங்க தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் குறிப்பிட்டதாவது, புனர்வாழ்வு பெற்று வெளியேறும் முன்னாள் போராளிகளுக்கு தொழிலை பெற்று கொடுப்பதில் தாம் பாரிய சவாலை எதிர்நோக்கி வருகின்றோம்.
தொழில் பெற்றுக்கொடுக்காவிட்டால் அவர்கள் புனர்வாழ்வு நிலையங்களில் பெற்றுக்கொண்ட பயிற்சிகளுக்கு பயனற்று போய்விடும். தற்போது புனர்வாழ்வு நிலையங்களில் 4 ஆயிரத்து 500 பேரே இருக்கின்றனர். இவர்களும் மிக விரைவில் சமூகத்தோடு இணைக்கப்படுவார்கள். முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக 24 புனர்வாழ்வு நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்ட போதும் தற்போது ஒன்பது நிலையங்களே செயற்படுகின்றன.
இந் நிலையில் மட்டக்களப்பில் மூன்று நிலையங்களும் யாழ்ப்பாணத்தில். ஒரு நிலையமும். வவுனியாவில் ஐந்து நிலையங்களும் தற்போது செயற்பட்டு வருகின்றன. இதேவேளை விசேட திட்டத்தின் ஊடாக முன்னாள் போராளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ் மற்றும் விவாக சான்றிதழ் ஆகியன பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.