பக்கங்கள்

21 பிப்ரவரி 2011

பிரமாண்டமான முறையில் நாளை அன்னையின் இறுதி நிகழ்வுகள்!

நேற்றய தினம் அதிகாலை இயற்கை எய்திய ஈழத்தாய் பார்வதியம்மாளின் பூதவுடல் தீருவில் சதுக்கத்தில் நேற்று மாலை 5 மணி முதல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு ஊர்மக்கள் தொடர்ச்சியாக வந்து அஞ்சலி செலுத்தியவண்ணமிருந்தனர். பேரன்னையின் இறுதிக் கிரியைகள் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளன இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை 5மணி வரை தீருவிலில் அன்னை பார்வதியம்மாளின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் வல்வெட்டித்துறையில் உள்ள அவரது மகளின் இல்லத்தில் நாளை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் இடம்பெற்று மாலை 4 மணிக்கு தகனத்துக்காக எடுத்துச்செல்லப்படும்.
ஈழத்தாய் பார்வதியம்மாளின் பூதவுடலுக்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், யாழ். மாநகரசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், கூட்டமைப்புப் பிரமுகர் பிருந்தா மற்றும் தமிழ்த் தேசிய முன்னணி உறுப்பினர்களான கஜேந்திரன் மற்றும் பத்மினி சிதம்பரநாதன் உள்ளிட்ட பலரும் நேற்றயதினம் அஞ்சலி செலுத்தினர்.
பார்வதி அம்மாளின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இலங்கை வருகிறார் .
திருமாவளவன் ஏற்கனவே ஒரு தடவை வல்வெட்டித் துறைக்கு வருகை தந்து பார்வதி அம்மாளைச் சந்தித்து அவரது நலன் குறித்து விவரமறிந்து சென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பார்வதி அம்மாளின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கறுப்புக் கொடிகளைக் கட்டவோ அஞ்சலி செலுத்தும் சுவரொட்டிகளில் தேசியத் தலைவர் பிரபாகரனின் பெயரைப் பாவிக்கவோ வேண்டாமென இராணுவத்தினர் கடுமையாக உத்தரவிட்டுள்ளனர்.
ஆனால் இராணுவத்தினரின் உத்தரவையும் மீறி, மக்கள் வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டுள்ளதோடு சில இடங்களில் கைகளால் எழுதப்பட்ட சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.மேற்படி அஞ்சலி சுவரொட்டிகளை இராணுவத்தினர் இளைஞர்களைக் கொண்டு அகற்றி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.