பக்கங்கள்

20 பிப்ரவரி 2011

ஈழத்தாயின் இறுதி வணக்க நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை!

இன்று மறைந்த தமிழீழத் தேசியத்தலைவரின் தாயாரான பார்வதியம்மாவின் இறுதிக்கிரியைகள் ஈழமக்களின் அஞ்சலிகளின் பின்னர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரான பார்வதியம்மாளின் இறுதிக்கிரியை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு வல்வெட்டித்துறை பொதுமயானத்தில் நடைபெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 10.30 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக தீருவில் மைதானத்தில் இவரது பூதவுடல் வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு வல்வெட்டித்துறை, ஆலடி ஒழுங்கையிலுள்ள அவரது மகளின் வீட்டில் பூதவுடல் வைக்கப்பட்டு, பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வல்வெட்டித்துறை ஊரணி பொதுமயானத்தில் மாலை 4 மணிக்கு இறுதிக்கிரியைகள் இடம்பெற்று பூவுடல் தகனம் செய்யப்படுமெனவும் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வல்வெட்டித்துறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பல்வேறு இடங்களிலும் இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது ஈழத்தாயின் பூவுடல் ஊரணி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பெருமளவான பொதுமக்கள் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது மறைவையொட்டி வல்வெட்டித்துறைப் பகுதியில் துக்கம் அனுஷ்டித்து கறுப்புக்கொடிகளும் கட்டப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.