பக்கங்கள்

31 டிசம்பர் 2011

பலாலி ஆசிரியர் கலாசாலையை கையகப்படுத்தினால் போராட்டம் வெடிக்கும்!

பலாலி ஆசிரியர் கலாசாலையைப் பாதுகாப்பு அமைச்சிடம் கையளித்தால் நாடளாவிய ரீதியில் போராட்டம் வெடிக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த முயற்சியைத் தடுத்து நிறுத்துவதற்கு கல்வியியலாளர்களும், ஆசிரியர் தொழிற்ச் சங்கங்களும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அது கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
பலாலி ஆசிரியர் கலாசாலைக் காணியும் கட்டடத் தொகுதியும் உள்ளடங்கிய வளாகம் கல்வி அமைச்சினால் பாதுகாப்பு அமைச்சுக்குக் கையளிக்கப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியாகத் தமிழ், முஸ்லிம் ஆசிரியர்களுக்கு இந்தக் கலாசாலை விசேட பயிற்சியளித்து வந்தது. தற்போது பலாலி ஆசிரியர் கலாசாலை அடிப்படை வசதிகள் எதுவும் அற்ற நிலையில் திருநெல்வேலியில் உள்ள கட்டடம் ஒன்றில் இயங்கிவருகிறது.
போர் நிறைவுக்கு வந்த பின்னராவது கலாசாலை சொந்த இடத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்ற நம்பிக்கை கல்விச் சமூகத்திடம் இருந்தது.
இந்த நம்பிக்கையைத் தவிடு பொடியாக்கும் வகையில் பலாலி கலாசாலையை கல்வி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சுக்குக் கையளிக்கவுள்ளது. இதனை எமது சங்கம் வன்மை யாகக் கண்டிக்கிறது. கலாசாலையை மீண்டும் சொந்த இடத்தில் இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதற்கு கல்வி அதிகாரிகள், ஆசிரியர் தொழிற் சங்கங்கள், ஆசிரியர்கள் ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும்.
இதனைப் பாதுகாப்பு அமைச்சுக்கு கையளித்தால் நாடு முழுவதும் கல்வியாளர்களை ஒன்று திரட்டிப் பெரும் போராட்டம் செய்வோம் என்று தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.