பக்கங்கள்

07 டிசம்பர் 2011

அரசியல் ஆசைகள் எதுவுமே கிடையாது என்கிறார் கே.பி.

'அரசியல் ஆசைகள் என்று எனக்கு இப்பொழுது எவையுமே கிடையாது. என் மக்களுக்கு எதாவது உதவிகளை செய்யமுடியுமாயின் அதுவே போதுமானது' என்கிறார் கேபி என்றழைக்கப்படும் குமரன் பத்;மநாதன். வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில்; கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக அகதி வாழ்க்கை வாழ்ந்து வரும் மயிலிட்டி பிரதேச மக்களை அவர் சந்தித்து உரையாடிய வேளையிலேயே தனது மன உணர்வினை வெளிப்படுத்தியுள்ளார்.
இடம்பெயர்ந்த நிலையில் வடமராட்சியின் கரையோர கிராமங்களில் வாழ்ந்து வரும் மயிலிட்டி பிரதேச மக்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் சந்தித்து உரையாடினார். அவருடன் வடக்கு தமிழ் மக்களுக்கென உதவப்போவதாக முன்வந்திருக்கும் புலம்பெயர் தமிழர்கள் நால்வரும் பிரசன்னமாகியிருந்தனர்.
முன்னதாக கேபி என்றழைக்கப்படும் குமரன் பத்;மநாதன் யாழ்.மாவட்ட மீனவ அமைப்புப் பிரதிநிதிகளை தன்னுடன் இணைத்து நெய்டோ எனும் உதவி அமைப்பொன்றை உருவாக்கியிருந்தார். அவரது அரசியல் பின்னணியினை அறிந்து கொண்ட பலரும் பின்னர் அதிலிருந்து விலகிக்கொண்ட நிலையில் தற்போது மீண்டும் யாழ் திரும்பியிருக்கிறார்.
'நான் இன்று வரை அரசியல் கைதியாகவே உள்ளேன். என்னால் சுதந்திரமாக எதுவும் கதைக்க முடியாது. யுத்தத்தின் வடுக்களை நாம் மறந்து விட்டு நடக்கப்போவது பற்றி கதைப்பதே பொருத்தமானது. எனது உதவிகளை கூடுதலாக வன்னி மக்களுக்கே வழங்கப்போகின்றேன்' என கேபி மேலும் தெரிவித்தார்.
இயலுமான வரை அரசியல் கதைக்காது இருப்பதே பாதுகாப்பானது என்பதை அவர் புரிந்து கொண்டுள்ளதை காணக்கூடியதாக இருப்பதாக பேச்சுக்களில் கலந்து கொண்ட பிரதிநியொருவர் தெரிவித்தார். நெய்டோ அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டு பின்னர் அப்பதவியை தான் இராஜினாமா செய்துவிட்டதாக கூறிய யாழ்.மாவட்ட மீனவ சமாசங்களின் சம்மேளனத்தலைவர் சி.தவரட்ணத்தையும் கேபி தனியே சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.