பக்கங்கள்

19 டிசம்பர் 2011

அரச புலனாய்வாளர்கள் ஊடகர் போர்வையில் புலம்பெயர் தேசத்தில் அரசியல் தஞ்சம்!

வன்னி ஊடகங்களில் பணியாற்றியதாகத் தெரிவித்து அரச புலனாய்வாளர்கள் புலம்பெயர் நாடுகளில் அரசியல் தஞ்சம் கோருவதுடன் தேசியத்திற்கு எதிரான நடவடிக்கையிலும் ஈடுபட்டுவருகின்றமைக்கான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வன்னிப் போரின் பின்னர் புலம்பெயர் தளத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கென அரச புலனாய்வாளர்கள் பெருமளவானவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவருகின்றனர். அவ்வாறானவர்கள் வன்னியில் தாம் ஊடகங்களில் பணி செய்ததாக நீதிமன்றில் பொய்யான தகவல்களை வழங்கி தமக்கான வதிவிட அனுமதியினையும் பெற்றுக்கொள்கின்றனர். இதனூடாக புலம்பெயர் தளத்தில் செயற்படும் மக்களைக் கண்காணிப்பதற்கான சந்தர்ப்பமாகவும் அவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். வதிவிட அனுமதி வன்னி ஊடகர்கள் என்ற அடிப்படையில் கிடைக்கப்பெற்றதை அறிந்து கொள்கின்ற புலத்தில் உள்ள தேசியச் செயற்பாட்டாளர்கள் முண்டியடித்து குறித்த நபர்களை தமது நெருக்கமானவர்களாகக் காட்டிக்கொள்ளவும் அவர்களுடன் முக்கியவிடயங்களைப் பகிர்ந்து கொள்ளவும் முற்படுகின்றமை குறித்த தகவல்கள் எமக்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றன.
தஞ்சம் கோருகின்ற அரச புலனாய்வாளர்கள் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக்கொண்டு புலம்பெயர் தளத்தில் தேசியத்திற்காக பாடுபடுகின்ற நபர்களின் விபரங்களைச் சேகரித்து அரசாங்கத்திற்கு அனுப்பிவருவதாகவும், அந்தத் தகவல்களின் அடிப்படையில் தாயகம் திரும்பும் புலம்பெயர் மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
அண்மையில் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரி வதிவிட உரிமையினைப் பெற்றுக்கொள்ள முற்பட்டுள்ள நபர் ஒருவர் தான் புலிகளின்குரல் வானொலியில் பணியாற்றியதாகத் தெரிவித்திருக்கின்றார். வானொலியில் இசைப்பிரியாவுடனும் தான் பணியாற்றியிருப்பதாகவும் குறிப்பிட்டுவருகின்றார்.
இசைப்பிரியா புலிகளின்குரல் வானொலியில் எந்தச் சந்தர்ப்பத்திலும் பணியாற்றவில்லை என்பதுடன் அவர் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியிலேயே பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.