பக்கங்கள்

21 டிசம்பர் 2011

படையினர் ஏவிய எறிகணை வேலணையில் வீழ்ந்தது!

வேலணைப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் வீடொன்றின் முன்னால் திடீரென வானிலிருந்து கூவிக்கொண்டு வந்து வீழ்ந்த மர்மப்பொருளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வேலணை மேற்கு 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை கவிதாசன் என்பவரது வீட்டில் இந்த மர்மப்பொருள் வீழ்ந்ததால் வீட்டு முற்றத்தில் பெரும் குழி ஒன்று உருவாகி உள்ளதாகவும் எனினும் வேறெந்தச் சேதங்களும் ஏற்படவில்லை எனவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது:
குறித்த வீட்டில் நேற்று மாலை பெரியவர்கள் எவரும் இருக்கவில்லை. பத்து வயதுடைய சிறுவன் ஒருவன் வீட்டில் படித்துக்கொண்டிருந்த போது, பிற்பகல் 3.30 மணியளவில் கிழக்குப் பக்கமாக பெரும் வெடியோசை ஒன்றை அவன் கேட்க நேர்ந்தது.
அதன் பின்னர் கூவிக்கொண்டு விரைந்து வந்த பொருள் ஒன்று அவர்களின் வீட்டு முற்றத்தில் பலத்த சத்தத்துடன் வீழ்ந்தது. குறித்த பகுதியில் குடியிருப்புகள் குறைவு என்பதால் ஏனையோருக்கு இந்தச் சத்தம் பெரிதாகக் கேட்கவில்லை.
பின்னர் தன்னுடைய பெற்றோர் வீடு திரும்பியதும் சிறுவன் நடந்ததைக் கூறினான். சிறுவன் காட்டிய இடத்தில் பெரும் குழி ஒன்று ஏற்பட்டிருந்ததுடன் அதனுள் கலங்கிய நிலையில் நீரும் தேங்கி இருந்தது.
உடனேயே இது குறித்து கிராம சேவகருக்கும், பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த ஊர்காவற்றுறைப் பொலிஸார் குழியை ஆராய்ந்த பின்னர், அதனுள் ஆபத்தான வெடிபொருள் இருக்கக் கூடும் என்பதால் யாரும் அதனருகே செல்ல வேண்டாம் என்று எச்சரித்தனர்.
அத்துடன் இரவு வேளையில் அதனை மீட்க முடியாது என்பதால் இன்று காலை அதனை மீட்பதாகக் கூறிச் சென்றுள்ளனர். தங்கள் வீட்டின் முன்னால் வீழ்ந்தது எறிகணையாகத் தான் இருக்கும் என்று வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
மர்மப்பொருள் வீழ்ந்துள்ள வீட்டின் அண்மையில் கிழக்குப் புறமாக கடற்படை முகாம் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந் நிலையில் மண்டைதீவுப் பகுதி சிறிலங்காக் கடற்படைத்தளத்தில் இருந்து ஏவப்பட்ட எறிகணையே வேலணைப் பகுதியில் நேற்று மாலை வீழ்ந்து வெடித்துள்ளது.
இன்று காலை எறிகணை வீழ்ந்த வீட்டுக்குச் சென்ற இராணுவத்தினரும், கடற்படையினரும் இந்த உண்மையை ஒத்துக் கொண்டுள்ளனர்.
நேற்று மாலை வேலணை 7ம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் மர்மப் பொருள் ஒன்று வீழ்ந்ததில் பெரிய குழி ஒன்று உருவாகியிருந்தது.
இது குறித்து ஊர்காவற்றுறைப் காவற்றுறையினருக்கு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு சென்ற காவற்றுறையினர் அதனுள் ஆபத்தான வெடிபொருள் இருக்கலாம் எனவும், அந்தக் குழி அருகே செல்ல வேண்டாம் எனவும், இன்று காலை அதை வந்து மீட்பதாகவும் கூறி சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை குறித்த வீட்டுக்கு இராணுவத்தினரும், கடற்படையினரும் சென்றனர். அதன்போது மண்டைத்தீவுக் கடற்படைத்தளத்தில் இருந்து பயிற்சியின் போது ஏவப்பட்ட பிளாஸ்ரிக் எறிகணையே தவறுதலாக வந்து வீழ்ந்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.
அத்துடன், குழியினுள் நீர் நிறைந்திருந்ததால், நீர் வற்றிய பின்னரே குழியினுள் இருக்கும் எறிகணையை மீட்க முடியும் என்றும், இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்தால் ஊடகங்களுக்குத் தெரிவிக்காமல் தங்களுக்கே தெரிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறிச் சென்றுள்ளனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.