பக்கங்கள்

23 ஜனவரி 2011

தனது பாதுகாப்பு அணியை சேர்ந்தவர்களை அழைத்துச்செல்ல பயந்த மகிந்த!

தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது பாதுகாப்பு அணியைச் சேர்ந்த படையினர் எவரையும் அழைத்துச் செல்லவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்த புதன்கிழமை அதிகாலை திடீரென அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அவருடன் அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் உள்ளிட்ட 18 பேர் அமெரிக்கா சென்றுள்ளனர்.
அமெரிக்காவுக்குத் தனிப்பட்ட பயணத்தை சிறிலங்கா அதிபர் மேற்கொண்டுள்ளது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.
அதேவேளை, அமெரிக்கப் பயணத்தில் சிறிலங்கா படையினர் எவரையும் தனது பாதுகாப்பு அணியில் சேர்த்துக் கொள்ளவில்லை.
அதிபர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த காவல்துறையினரை மட்டுமே அவர் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
போர்க்குற்றச்சாட்டுகளின் பேரில் அங்கு விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் நோக்கிலேயே அவர் இந்தப் பயணத்தில் சிறிலங்காப் படையினரைச் சேர்த்துக் கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது.
அண்மையில் பிரித்தானியாவுக்குச் சென்றிருந்த போது சிறிலங்கா அதிபரின் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பானவரும். புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்குவகித்தவருமான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயும் மகிந்த ராஜபக்சவுடன் லண்டன் சென்றிருந்தார்.
அப்போது மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே மீது போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவரைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தத் தகவலை அறிந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அவசர அவசரமாக நாடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.