பக்கங்கள்

10 ஜனவரி 2011

இனியும் நாம் இரத்தம் சிந்த விரும்பவில்லை!

ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு விழா
சென்னையில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,
“இலங்கையில் புலிகளை ஒடுக்குவதற்காகத்தான் ஆயுத உதவி, போருக்கு பிறகு இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பான, அமைதியான வாழ்க்கையை இலங்கை அரசு அமைத்து தர வழிவகைச் செய்வோம் என்று இந்திய அரசு கூறியது. ஆனால், நடந்தது வேறு, நடப்பதும் வேறு.
போரில் புலிகள் அல்லாத லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். பெண்களும் குழந்தைகளுமாய் ஏராளமானோர் கொத்துக் குண்டுகளுக்கு பலியாகினர்.போர் முடிந்தும் ஆயிரக்கணக்கானோர் முள்வேலி முகாமுக்குள் இன்றும் வாழ்கிறார்கள். அவர்களுக்கு இலங்கை அரசும் ஏதும் செய்யவில்லை. இந்திய அரசும் ஒன்றும் செய்யவில்லை.
மறு குடியேற்றத்திற்கான வீடுகள் கட்ட இந்தியா கோடிக்கணக்கில் பணம் அனுப்பியதாக குறிப்பிடுகிறது. ஆனால் அந்தப் பணம் சிங்கள ராணுவத்தினர்களுக்கு பயிற்சி முகாம்கள் அமைக்கவும், ராணுவ குடும்பத்தினர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கவும்தான் பயன்படுகிறது. ஆனால், போரில் பாதிக்கப்பட்ட எம் தமிழ் மக்கள் இன்னும் முள்வேலி முகாமிற்குள்தான் வதைபடுகிறார்கள்.
இந்தவேளையில், இந்திய அரசையும், இலங்கை அரசையும், தமிழக அரசையும் ஒன்று கேட்கிறோம். தனி ஈழம் ஒன்றுதான் எங்கள் மக்களுக்கு அமைதியையும் பாதுகாப்பையும் தரும். அதற்கு நாங்கள் இனி யுத்தம் செய்யப்போவதில்லை. இனியும் ரத்தம் சிந்த விரும்பவில்லை. அவையெல்லாம் தேவைக்கதிகமாக ஏற்கனவே அளிக்கபட்டுவிட்டது.
இப்போது நாங்கள் கேட்பது ஜனநாயக முறையில் இலங்கையில் ஓட்டெடுப்பு நடத்துங்கள் என்பதே. அப்போது தனி ஈழம்தான் வேண்டும் என்று எம் தமிழ் மக்கள் கேட்பார்கள். அப்படி அவர்கள் கேட்கும் பட்சத்தில் பேசாமல் வாய்மூடி தனி ஈழம் கொடுத்துவிடுங்கள். இல்லை, சிங்களவர்களுடன் இணைந்து ஒரே இலங்கை தேசமாக வாழ எம் தமிழர்கள் விரும்புவார்களேயானால் நாங்கள் பேசாமல் வாய்மூடி இருந்துவிடுகிறோம்.
நாங்கள் உங்களை கேட்பது இதுதான், போரினால் பெரும் இழப்பை சந்தித்துவிட்ட எம் தமிழ் சகோதர சகோதரிகள் அமைதியுடன் வாழ ஜனநாயக முறையில் பொது வாக்கெடுப்பு நடத்துங்கள். எம் தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் இதைத்தான் விரும்புவார்கள்”என்றார்.
மேலும் அவர், “ராஜபக்சேவை லண்டனில் விரட்டியடித்தார்கள் அங்கு வாழும் நம் தமிழர்கள். அதேபோல், நடக்கவிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை கிரிக்கெட் அணி ஆடுவதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது. இலங்கை அணியை ஆடவிடாமல் ஆறரைக்கோடி தமிழர்களும் ஒன்றிணைந்து விரட்டியடிக்க வேண்டும். நம் இனப்படுகொலைக்கு நாம் இதுவரை என்ன செய்துவிட்டோம் இதையாவது செய்ய நாம் ஒன்று படுவேம். இலங்கை கிரிக்கெட் அணியை உலககோப்பையில் ஆடவிடாமல் விரட்டியடிப்போம்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.