பக்கங்கள்

28 ஜனவரி 2011

காலி இலக்கிய விழா புறக்கணிப்பு!

இலங்கையின் காலியில் ஆரம்பமாகியுள்ள இலக்கிய விழாவைப் புறக்கணிப்பதாக தென்னாபிரிக்க எழுத்தாளரான தாமுன் ஹல்கட் அறிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் குறித்த நிலைமையை காரணம் காட்டி அவர் அந்த விழாவை புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளார்.
பாரிசை தளமாகக் கொண்ட செய்தியாளர்களுக்கான அமைப்பான எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பும் இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும் இணைந்து வெளியிட்ட விழாவைப் புறக்கணிப்பதற்கான அழைப்பை தான் கவனத்தில் எடுத்துள்ளதாக தாமுன் ஹல்கட் தெரிவித்துள்ளார்.
மேற்படி இரண்டு அமைப்புக்களுடன் சேர்ந்து நோம் சோம்ஸ்கி, அருந்ததி ராய், கென் லோச், அன்ரனி லொவன்;ரின், தாரிக் அலி, உருத்திரமூர்த்தி சேரன், டேவ் ரம்ரன் போன்ற பிரபல எழுத்தாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களும் இவ்விழாவைப் புறக்கணிக்குமாறு கோரியிருந்தனர்.
இலங்கையில் மாற்றுக் கருத்தாளர்களின் குரல்கள் அடக்கப்படுவதால், அங்கு இந்த நிகழ்வை நடத்துவது உகந்ததல்ல என்று அந்த விழாவைப் புறக்கணிக்குமாறு கோரியவர்கள் கேட்டிருந்தனர்.
இலங்கையில் மனித உரிமைகள் குறித்த சில பிரச்சினைகள் இருப்பதாக ஒப்புக்கொண்ட விழாவின் ஏற்பாட்டாளரும், எழுத்தாளருமான ஷியாம் செல்வதுரை, ஒரு இலக்கிய விழாவை நிறுத்துவது அதற்கான பதிலாகாது என்று கூறினார்.
விழா ஆரம்பித்தவுடனே, பிரபல எழுத்தாளர் தாமுன் ஹல்கட் விழாவைப் புறக்கணிக்க முடிவு எடுத்திருப்பதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்தார்கள்.
மேலும் இரண்டு முக்கிய எழுத்தாளர்களான ஓரான் பாமுக், கிரான் தேசாய் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொள்வதில் இருந்து பின்வாங்கியிருக்கிறார்கள்.
ஆனால், அது இந்த எதிர்ப்புடன் சம்பந்தப்பட்டதல்ல என்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.
அறுபதுக்கும் அதிகமான எழுத்தாளர்கள் விழாவில் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்ற போதும், தமது எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு இணையத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆதரவு வழங்கியுள்ளதாக புறக்கணிப்பவர்கள் கூறுகிறார்கள்.
தற்போதுள்ள அரசாங்கத்தினால் கேலிச்சித்திரக்காரர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மாற்றுக் கருத்தாளர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் இன்றுள்ள சூழ்நிலையில், இலக்கியத்துக்கு விழா எடுக்கும் இந்த நிலைமையை எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும் மிகவும் இடரார்ந்த ஒரு விடயமாகவே கருத்திற் கொள்கிறது. காலி இலக்கிய விழாவுக்குப் போவதற்கு முன்னர் இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளுமாறு ஏற்கெனவே கோரப்பட்டிருந்தது.
2011 ஜனவரி 26-30 வரை காலியில் நடைபெறவுள்ள ஐந்தாவது இலக்கிய விழாவில் கலந்து கொள்வதற்காக அழைப்புக் கிடைத்துள்ள ஒவ்வொருவரும் இலங்கையில் ஊடகவியலாளர்கள் இலக்கு வைக்கப்படுவதையும் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் அச்சமும் மலைப்பும் தரும் வகையில் அதிகரித்துக் காணப்படுவதையும் கருத்தில் கொள்ளுமாறு அது கேட்டுக் கொண்டிருந்தது. அதற்குச் செவி சாய்க்கும் வகையிலேயே இந்த தென்னாபிரிக்க எழுத்தாளர் விழாவைப் புறக்கணித்திருக்கிறார்.
போர் முடிவடைந்து பின்னரும் கூட .லங்கையில் படுகொலைகள், உடல் ரீதியான தாக்குதல்கள், கடத்தல்கள், அச்சுறுத்தல்கள், தணிக்கை என்பன தொடர்ந்து கொண்டு வருகின்றன என்றும் ஜனாதிபதியின் சகோதரரான பாதுகாப்பு செயலாளர் உட்பட இலங்கை அரசாங்கத்தின் மிக மூத்த அதிகாரிகளே சிங்கள மற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் பாதிக்கப்படும் வகையிலான நடவடிக்கைகளிலும் மிக மோசமாக ஊடக சுதந்திரம் நசுக்கப்படும் வகையிலான நடவடிக்கைகளிலும் நேரடியாகவே ஈடுபட்டு வருகின்றனர் என்றும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு தனது அண்மைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உங்களைப் போன்ற முக்கியத்துவமிக்க சர்வதேச அங்கீகாரம் பெற்ற எழுத்தாளர்கள் நாட்டினுள் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கு எள்ளளவேனும் வழி சமைக்காமல் அதனை ஒடுக்கி வருகின்ற இலங்கை அரசாங்கத்துக்கு இந்த மாநாட்டில் கலந்து கொண்டு ஒரு ஏற்புடமையை வழங்குவதற்கான சரியான தருணம் இதுவல்ல என்றே நாங்கள் நம்புகின்றோம்.
எல்லா இடங்களிலும் எழுத்தாளர்கள் தங்களுக்கிடையே ஒற்றுமைக்காக தங்கள் கைகளை இறுகப் பிணைத்து நிற்றும் ஒரு மரபின் தொடர்ச்சியாக பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்டிருக்கும் இலங்கையில் உள்ள உங்கள் சகோதர சகோதரிகளுக்கும் ஆதரவாக நீங்கள் இருக்க வேண்டும் என்று உங்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
உங்களுடைய நடவடிக்கைகளும் நீங்கள் தெரிவிக்கும் செய்தியும் தெளிவாக இருக்க வேண்டும் என நாங்கள் உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். அதாவது பிரகீத் காணாமல் போனமை குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இலங்கையின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரச் சூழலில் முன்னேற்றம் ஏற்படுத்தப்படல் வேண்டும். இல்லாவிட்டால் இலக்கியத்தையும் எழுத்;துச் சுதந்திரத்தையும் நீங்கள் கொண்டாடுவதில் ஏதும் அர்த்தம் இருக்க முடியாது என்றும் அவர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.