பக்கங்கள்

04 ஜனவரி 2011

எதிர்க்கட்சிகள் வலுவாக இருந்தால்தான் அரசை வீழ்த்தமுடியும்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கு முகங்கொடுப்பதற்காக வலுவான எதிர்க்கட்சிகளின் கூட்டணிகள் தென்னிலங்கையிலும், வடகிழக்கிலும் உருவாக்கப்படுவதன் மூலமாகவே இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பும் பணியை துரிதப்படுத்தப்பட முடியும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த அரசாங்கத்தை தனியொரு கட்சியாலோ அல்லது தனியொரு அரசியல் தலைவராலோ வீழ்த்த முடியாது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து வலுவான கூட்டணி தென்னிலங்கையிலே உருவாக்கப்படவேண்டும்.
அத்தகைய கூட்டணி தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக வடகிழக்கிலும் உருவாக்கப்படவேண்டும். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொதுச்சின்னத்திலே எதிர்க்கட்சிகள் சார்பாக பொது வேட்பாளரை நிறுத்தியிருந்தோம்.
இந்த எதிர்க்கட்சிகளின் பொது கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் தொடரவில்லை. பாராளுமன்ற தேர்தலில் இந்த எதிர்க்கட்சிகளின் பொது கூட்டணி இருந்திருக்குமானால், இந்த அரசாங்கத்திற்கு இந்த அளவிற்கு பெரும்பான்மை ஆசனங்கள் கிடைத்திருக்காது.
அதை பயன்படுத்தி கணிசமான எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தினால் வளைத்துப்போட்டிருக்கவும் முடியாது.
பாராளுமன்ற தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் பொது சின்னத்திலே கூட்டணியாக போட்டியிட வைப்பதற்கு இறுதிக்கட்டம் வரை நாம் கடுமையான முயற்சிகளை எடுத்தோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜே.வி.பி. தலைவர்களுடன் இணைந்து நான் இந்த முயற்சிகளை எடுத்திருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையின் பிடிவாதம் காரணமாக இது சாத்தியமாகவில்லை. இதுவே இன்றைய அரசாங்கத்திற்கு மிகவும் சாதகமாக அமைந்துவிட்டது.
எனவே பொது எதிர்க்கட்சிகளின் கூட்டணி உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் நான் இன்று ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தேசியக் கூட்டணி, ஜே.வி.பி. ஆகிய கட்சி தலைவர்களுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளேன். இத்தகைய தொடர்புகளை சிறிதுங்க ஜயசூரிய, விக்ரமபாகு கருணாரட்ன ஆகியோருடனும் ஏற்படுத்தியுள்ளேன்.
அதுபோல இன்னும் சில தினங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழ் கட்சி தலைவர்களை சந்திப்பதற்கும் நமது கட்சி விரும்பியுள்ளது. இந்நிலையில் பொதுச்சின்னத்தில் போட்டியிடக்கூடிய பொதுவான எதிர்க்கட்சி கூட்டணி உருவாக்கப்படுவதன் மூலமாகவே அரசாங்கத்திற்கு எதிராக இன்று சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் எழுந்துவருகின்ற எதிர்ப்பு அலையை நாம் ஒருமுகப்படுத்த முடியும். அதன் மூலம் மக்களுக்கு நம்பிக்கையை தரமுடியும்.
பொது கூட்டணி தொடர்பில் எதிர்க்கட்சிகள் உடன்பாட்டுக்கு வராவிட்டால், ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு மாநகரசபை உட்பட பல உள்ளூராட்சி மன்றங்களில் தனித்து எமது கட்சியின் பிரபலமான ஏணிச் சின்னத்தில் போட்டியிடுவதையே நான் விரும்புகின்றேன் எனக் கூறியுள்ளார் மனோ கணேசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.