பக்கங்கள்

21 ஜனவரி 2011

தமிழக பெண் வழக்கறிஞர் சிங்களப்படையால் கைது!

இலங்கையில் முள்வேலி முகாமில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை நேரில் சந்தித்து அவர்களை படம் பிடித்ததற்காக தமிழக பெண் வக்கீல் உள்ளிட்ட இருவரை அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் பெண் வழக்கறிஞர் அங்கயற்கண்ணி என்கிற கயல். இவர் திருமலை என்ற தனது நண்பருடன் கடந்த 19ஆம் தேதி சுற்றுலா விசாவில் இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து இலங்கையின் வடபகுதியில் உள்ள யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை பார்க்க சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அவர்கள் இருவரும் அங்கு தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முள்வேலி முகாம் ஒன்றுக்கு சென்றுள்ளனர். அந்நாட்டு ராணுவத்தினரின் அனுமதியுடன் அந்த முகாமுக்கு சென்று அங்குள்ள தமிழர்களை அவர்கள் பார்த்துள்ளனர்.
அப்போது புகைப்படம் எதையும் எடுக்கக் கூடாது என்று இவர்களுக்கு ராணுவம் கட்டுப்பாடு விதித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் இருவரும் முகாமை சுற்றிப் பார்த்து விட்டு வெளியே வந்தபோது வழக்கறிஞர் கயலின் செல்போனை இலங்கை ராணுவம் பரிசோதித்து பார்த்துள்ளது. அப்போது முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலையை விளக்கும் படங்களை எடுத்திருப்பதாக ராணுவத்தினர் கூறியுள்ளனர்.
இதனையடுத்து இலங்கை ராணுவம் இருவரையும் நிபந்தனைகளை மீறி புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
கைது செய்யப்பட்டுள்ள பெண் வழக்கறிஞர் கயல், மறைந்த தமிழறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பேத்தி ஆவார். கைதான இவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.