பக்கங்கள்

05 ஜனவரி 2011

என்னதான் நடக்குது யாழ்ப்பாணத்தில?

என்னதான் நடந்தாலும், ஊர் உலகத்தில நடக்கிறது பற்றி உங்கள் நாலு பேரோட கதைச்சாத்தான் மனசுக்குள்ள திருப்தி. பழையபடி யாழ்ப்பாணத்தில நாலா பக்கமும் வெடிச்சத்தம் கேட்குது. நீங்கள் நினைக்கிற மாதிரி இதுவொண்டும் நத்தார், வருடப்பிறப்பு சீன வெடியில்ல. நிஜ துவக்கு வெடி. இப்ப பழையபடி மனிசி மாலை 5 மணியோட வீட்டுக்குள்ள இருந்துடோணும் என்றாள். அது சரி வீட்டுக்குள்ள இருந்தால் வாற யம தர்மராசா விலாசம் தெரியாமல் மாறிப்போயிடுவரோ எண்டு நீங்கள் சொல்லுறது கேக்குது.
கடந்த வருடத்தில, கடைசியா பலியெடுத்த அந்த குடத்தனை கிழக்குப் பெடியன் என்ன பாவம் செய்தானோ. அவன்ற்ற மனுசி என்ர மனுசனைக் கொல்லாதையுங்கோ எண்டு கட்டிப்பிடிச்சு கெஞ்சினதாம். அந்த ஊடுவெளியிக்க ஒருத்தன் வெடி வைச்சானாம். அந்த பிள்ளை என்னெண்டு வாழ்நாள் முழுக்க அந்த நினைவோட உயிரோட வாழும்.
முதலில ஒருத்தன் வீட்டுக்குள் வந்து கொப்பியூட்டர் எங்கையெண்டானாம். பொடியன் கூட்டிக்கொண்டு போய் காட்ட போட்டுக்காட்டென்று சொல்லிப்போட்டு சுட்டானாம். அவங்கட ஊரில, நடக்கிற மண் சுரண்டலால, கிராமமே கடலால மூழ்கிப்போறதை அவன் எதிர்த்து குரல் கொடுத்து வந்தவன். கோடிக்கணக்கில சுரண்டி மண் ஏத்துற முதலாளியின்ர லொறியை மறிச்சு அந்த பகுதி சனம் நடத்தின போராட்டங்களில் எல்லாம் பொடியன் முன்னுக்கு நிண்டவனாம். ஐயாமார் வைக்கிற கூட்டத்திலெல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்கிறவனாம். செத்த பெடியன் கடல் கொண்டு போன தங்கட கிராமங்கள் பற்றி எடுத்த படங்களெல்லாம் ஏதோ பேஸ்புக்காம் அதில கிடந்தது. உவள் பேத்திதான் போட்டுக் காட்டினாள். மண் தின்னுற பேய்கள் தான் அவனை கொண்டு போட்டுதுகள்எண்டு ஊர் சனம் கதைக்குது. ஆகக்குறைந்தது மாதம் ஒரு எட்டு மட்டில சுழலுமாம். எட்டு இலட்சமில்லை அது கோடி பாவம் கிழக்குச் சனங்கள். ஆற்றை நாதியுமில்லாததுகள். அதுகளுக்குள்ளையும் நாலெழுத்து படிச்சா, அவங்கள் ரவுண் பக்கம் வந்திடுறாங்கள்.
உண்மையில யாழ்ப்பாணத்தில என்னதான் நடக்குதெண்டு புரிய இல்லை. பழையபடி எல்லாரும் காணாமல் போயினம். பெண்டுகளை கூட கோதாரிவிழுவார் விடயில்லை. ஓட்டோகாரர், கல்விப்பணிப்பாளர், புறோக்கர் என பட்டியல் தொடருது. அம்மாவை விடுங்கோவென்று கெஞ்வி பிள்ளையள் பேப்பரில் விளம்பரம் போடுதுகள். செத்தோ,காணாமலோ எல்லோரும் போய்க்கொண்டுதான் இருக்கினம். 2006 – 2008 போல மீண்டும் இருண்டகாலம் ஆயிரத்துக்கும் மேல குஞ்சு, குருமன்கள் காணாமல் போச்சு. வீட்டில, றோட்டிலயென, ஆள்பிடி பேய்கள் பிடித்துக் கொண்டு போச்சு. அதுகள் குடும்பங்கள் இண்டைக்கும் அழுதுகொண்டிருக்கு. என்ன எங்கட சனம்தான் அதுகளை மறந்து போச்சு.
இவ்வளவும் நடந்து கொண்டிருக்கு எதுவுமே நடக்காத மாதிரி அமைச்சரும், பரிவாரங்களும் ஏதோ சொல்லிக்கொணடு திரியினம். போதாக்குறைக்கு உள்ளுர் பேப்பர்காரர் யாவரத்துக்கு எல்லாத்தையும் ஊதிப்பெரிப்பிக்கினமெண்டும் மேல சொல்லினம். தெரிஞ்ச பேப்பர்காரப் பொடியன் ஒருவனிட்ட இதைக் கேட்டன். 'ஓமோம் அண்ணை அவை பாலியல் வல்லுறவை, பாலியல் மெல்லுறவு எண்டு செய்தி போடச்சொல்லிக் கேக்கிறவை எண்டு பொரிஞ்சு போட்டுப் போறான். அவன் நாக்கைப் புடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டான். நான் வாயை மூடிப்போட்டன். நடக்கிறதொண்டும் அவைக்கும் தெரியாதாமோ என்றான். என்க்கேன் பொல்லாப்பு. ஒரு முழு வெத்திலையை மடக்கிப் போட்டு வாயை மூடிப்போட்டன். சும்மா இருக்கேலாமல் அவன் சொன்னதை நான் உளற ஏன் பொல்லாப்பு.
இது பறவாயில்லை. எங்கட இராணுவ தளபதி ஹத்துறுசிங்க, இது கூலிப்படைகளின்ரை அநியாயமென்றார். எனக்கு ஒன்றுமே புரியல. கூலிப்படையென்ன கொம்பியூட்டரைப் போட்டுப்பார்த்தோ ஆளைக் கொல்லும்?. அதுவும் மண் அள்ள விடாமல் தடுத்தால் ஆளைப் போடவும் கூலிப்படையோ தேவை. ஏதோ அவர் எங்கட ஆட்கள் முந்தி செய்ததுகளை குறைச்சு மதிப்பிடுற மாதிரித்தான் எனக்கு படுது. நீங்கள் என்ன சொல்றியள்.
சனமெல்லாம் துண்டைக்காணோம், துணியை காணோமெண்டு; பறக்குது எங்களின்ற தமிழ் எம்பிமார் எங்கையெண்டால், சொல்லிக்கொள்ளுமாறு ஒருத்தரையும் ஊரில காணம். அங்கின இங்கினயெண்டு சிறி வாத்தி எம்பி மட்டும் திரியுது. ஏனையவை மூச். ஒருக்கா கண்டிக்கிறம் எண்டேனும்... ஊகூம். எல்லாரும் முடிஞ்சாப்பிறகு எங்கட கலைஞர் ஸ்டைலில கடிதம் எழுதுவினமோ? என்னமோ? இப்ப பார்லிமென்டி எதோ வெட்டி விழுத்தப்போறன் என்டினம். அதையும் ஒருக்கா பார்ப்பம்.
சத்தியமா பிறந்த வருசம் ஒன்றும் பெரிசா சொல்லிக்கொள்ளுற மாதிரி எங்கட சனத்துக்கு மகிழ்ச்சியா இருக்கையில்லை. பழைய படி வீட்டுக்க முடங்கி கிடக்கத்தொடங்கி விட்டுதுகள். கொண்டுவந்து குவிச்ச வெடிகூட விக்கையில்லை என்கிறான் கடைக்கார ராசன். என்னவோ மனசில பட்டத சொல்லிப்போட்டன். காணாமல் அல்லது மேல போகாமல் இருந்தால் பிறகு சந்திப்பம்
என்ன?
கனகண்ணை யாழ்ப்பாணத்திலிருந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.