பக்கங்கள்

06 ஜனவரி 2011

விமான நிலையத்தில் அச்சுறுத்தப்படும் தமிழர்கள்!

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தமிழ்ப் பயணிகள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்குள்ளாகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமான நிலையத்தில் குவிக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் நாட்டிலிருந்து வெளியேறும் மற்றும் நாட்டிற்குள் பிரவேசிக்கும் தமிழ்ப் பயணிகள் கடுமையான வவிசாரணைக்கும் தொந்தரவுக்கும் ஆளாவதாக லங்கா கார்டியன் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
பயணிகள் பட்டியலைப் பார்வையிடும் பயங்கரவாதத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் தனியாகப் பயணம் செய்யும் பயணிகளைக் குறி வைத்து அவர்களை விசாரணைக்கென அழைத்துச் செல்கிறார்கள்.
இவ்வாறு விசாரணைக்கென அழைத்துச் செல்லப்படுபவர்கள் சிலர் விமான நிலையத்தில் வைத்து பல மணி நேரம் விசாரணைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பலர் வெள்ளைவானில் இனந்தெரியாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்படுகிறார்கள்.
தமிழ் தேசியவாத அரசியலுடனோ அல்லது விடுதலைப் புலிகளுடனோ தொடர்புடையவர்கள் எனக் காணப்படுமிடத்து அவர்கள் நாட்டிலிருந்து வெளியெறுவது தடை செய்யப்படுகிறது.
குடியகல்வு குடிவரவு திணைக்களத்தின் தகவலடிப்படையில் குறித்த நபர் விமான நிலையத்தில் குடியகல்வு குடிவரவு அதிகாரியிடம் அவர் கட்வுச் சீட்டை அனுமதிக்காக வழங்கும் போது அவர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்படுகிறார்.
குறித்த நபருடைய பிரயாணத்தைத் தடுப்பதற்கு பொய்யான இனந்தெரியாத நபர்கள் அனுப்பியதாகக் கூறப்படும் மொட்டைக் கடிதங்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் பயன்படுத்தப்படுகின்றன.
நீண்ட பல மணி நேர விசாரணையின் போது அவரிடமிருந்து பெறப்படும் தகவல்கள் உண்மையானவையா என உறுதிப்படுத்த விசாரணையின் போது அவர் குறிப்பிடும் நபர்களைக் கூட நடமாடும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தேடிச் சென்று விசாரணைக்கு உள்ளாக்குகிறார்கள்.
வெள்ளைவானில் இனந்தெரியாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்படும் இவ்விளைஞர்கள் திரும்பி வந்தாலே தவிர அவர்கள் என்னவானார்கள் என்றுகூட எவருக்கும் தெரியாத நிலைமையே காணப்படுகிறது.
அவ்வாறு திரும்பி வரும் இளைஞர்கள் தமது பிரயாணச்சீட்டை புதிதாக வாங்க வேண்டி இருப்பதால் தேவையற்ற வகையில் பெரும் பண இழப்பை எதிர்நோக்க வேண்டி இருக்கிறது.
மகிந்த ராஜபக்சவின் தோல்வியடைந்த பிரிட்டன் பயணத்திற்குப் பின்னர் பிரிட்டனிலிருந்து வரும் இளைஞர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்திருப்பதாகத் தெரிய வருவதாகவும் லங்கா கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.