பக்கங்கள்

21 ஜனவரி 2011

பொரளையில் உள்ள தோட்டக்குடியிருப்பு மக்களின் வீடுகள் உடைப்பு!

கொழும்பில் வசிக்கும் வறிய மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டப்படி கொழும்பு பொரள்ளையில் வசிக்கும் வறிய மக்களின் குடியிருப்புகள் இன்று உடைக்கப்படத் தொடங்கியுள்ளன.
பொரள்ளையில் வனாத்தமுல்லைப் பிரதேசத்தில் இருக்கும் 54 மற்றும் 66 ம் இலக்க தோட்ட மக்களின் குடியிருப்புகளே அவ்வாறு உடைக்கப்படத் தொடங்கியுள்ளன. ஆயினும் அந்த மக்களுக்கு மாற்றுக் குடியிருப்பு வசதிகள் ஏதும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.
நேற்று அப்பிரதேசத்துக்கு வந்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் அங்குள்ள மக்களை வேறிடங்களுக்குக் குடிபோகத் தயாராகுமாறு கூறிவிட்டுச் சென்ற நிலையில், இன்று காலை திடீரென அப்பிரதேச வீடுகள் இடிக்கப்படத் தொடங்கியுள்ளன.
அதன் காரணமாக அங்குள்ள பொதுமக்கள் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், அப்பிரதேச வாசியான ஜயந்த என்பவரும் இன்னும் ஓரிருவரும் அதிகாரிகளுக்கும் அரசாங்கத்துக்கும் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்கவும் முயற்சி செய்தனர்.
தமக்கு மாற்றிடங்களில் வீடுகள் அமைத்துத் தரப்படும் என்ற எழுத்துமூலக் கோரிக்கையுடன், அதுவரை தமக்கு மாற்றுக் குடியிருப்பு வசதிகள் அல்லது அதற்கான வாடகைப் பணம் என்பன தரப்பட வேண்டும் என்று அங்குள்ள பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதன் காரணமாக இருதரப்பினருக்கும் இடையிலான இழுபறி நிலை தொடரும் அதே வேளை, வீடுகளை உடைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.