பக்கங்கள்

24 ஜனவரி 2011

ஆஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக திசர சமரசிங்க!

அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக முன்னாள் கடற்படைத் தளபதி திசர சமரசிங்கவை ஏற்றுக் கொள்வதில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த உயர் படையதிகாரியை தமது நாட்டு உயர்ஸ்தானிகராக ஏற்றுக் கொள்வதில் அவுஸ்திரேலியா நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் கடற்படைத் தளபதி திசர சமரசிங்கவிற்கு எதிராக யுத்தக் குற்றச் சாட்டுக்கள் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தினால் திசர சமரசிங்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ள போதிலும், அவரை ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பது குறித்து அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு இறுதித் தீர்மானம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரம் காரணமாக புகலிடக் குடியேற்றக் காரர்கள் தொடர்பில் அவுஸ்திரேலியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வில் குழப்ப நிலைமை ஏற்படக் கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் கடற்படைத் தளபதி பதவியை பொறுப்பேற்றுக் கொண்ட திசர சமரசிங்கவிற்கு எதிராக யுத்தக் குற்றச் சாட்டுகள் எதுவும் சுமத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவளிக்காத காரணத்தினால் இந்த நியமனத்தை நிராகரிக்குமாறு வெளிவிவகார அமைச்சிற்கு அவுஸ்திரேலியா வாழ் தமிழ் தலைவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவிக்காக திசர சமரசிங்கவை பரிந்துரை செய்ததன் மூலம் அரசாங்கம் இராணுவ ஆட்சி நோக்கி நகர்கின்றமை புலனாவதாக அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த சேம் பாரி தெரிவித்துள்ளார்.
2001ம் ஆண்டில் அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக அமரர் ஜானக பெரேரா நியமிக்கப்பட்ட போதிலும் இவ்வாறான எதிர்புகள் கிளம்பிய போதிலும், ஜானக பெரேரா 2005ம் ஆண்டு வரையில் உயர்ஸ்தானிகராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.