பக்கங்கள்

09 ஜூன் 2014

வடக்கில் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்!

வடமாகாணசபைக்கான பொலிஸ் அதிகாரம் பற்றி விவாதம் சூடுபிடித்துள்ள நிலையில் அவசர அவசரமாக காவல்துறையின் விசேட அதிரடிப்படையினர் வடபுலத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர். காவல்துறை அதிகாரத்தின் ஒரு பகுதியை வழங்குவது பற்றி அரசு தரப்பில் சமிக்ஞை காட்டப்பட்டுள்ள நிலையில் முதல் தடவையாக வடக்கில் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பணியாற்றி வரும் பொலிஸாருடன் நாமும் செயற்பட்டு வருகின்றோம் என வடமாகாண காவல்துறையின் விசேட அதிரடிப்படைப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஜே.கே.ஆர்.ஏ. பெரேரா உள்ளுர் ஊடகமொன்றிற்கு தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் தற்போது திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். அதன்படி காவல்துறையினருடன் எமது படையினரும் இணைந்து விசேட செயற்றிட்டம் ஒன்றினை சனிக்கிழமை முதல் முன்னெடுத்துள்ளனர். யுத்தம் முடிந்த பின்னரும் வீதிச்சோதனைகள் நடாத்தப்படுகின்றன என மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் இதனால் பொதுமக்களுக்கே நன்மை என்றும் அவர் மேலும் தெரிவித்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையுடன் இணைந்ததாக அதிரடிப்படையினை களமிறக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி அனைத்து தரப்பினரையும் சந்தேகம் கொள்ள வைத்துள்ளது. கிழக்கில் நிகழ்ந்த பல படுகொலைகள் மற்றும் காணாமல் போதல்களின் பின்னணியில் இதே அதிரடிப்படையே இருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.