பக்கங்கள்

10 ஜூன் 2014

வற்றாப்பளையில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் திருவிழா!

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் விழாவில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர். அத்துடன் தமது பல்வேறு வகையான நேர்த்திகளையும் நிறைவு செய்தனர். நேற்று திங்கட்கிழமை காலை முதல் ஆரம்பமாகிய பொங்கல் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை இடம்பெற்றது. சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பொங்கல் பொங்கிப் படைத்தார்கள். ஆலய சுற்றாடல் எங்கும் பொங்கல் காரணமாகவும் வாசலில் கற்பூரம் கொளுத்தியமையாலும் புகை மண்டலமாகக் காணப்பட்டது. என்றும் இல்லாத அளவுக்கு நேற்றுப் பகல் ஆரம்பமாகிய தூக்குக் காவடிகள், பறவைக் காவடிகள், சப்பாணிக் காவடிகள், பிள்ளைக் காவடிகள், சயனக் காவடிகள் என சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட காவடிகள் கிளிநொச்சி மாவட்டம் உட்பட வன்னி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் எடுத்துவரப்பட்டன. சிறுவர்கள் முதியவர்கள் என வேறுபாடு இன்றி ஆயிரக்கணக்கான காவடிகள் மற்றும் பாற் செம்புகள் கற்பூரச் சட்டிகள் என்பனவும் எடுத்துவரப்ப்ட்டன. பெண் ஒருவர் இரண்டாவது தடவையாகவும் தூக்குக் காவடி எடுத்து தனது நேர்த்தியை நிறைவேற்றினார். இராணுவத்தினரின் உலங்கு வானூர்தியில் இருந்து பிற்பகல் 5மணியளவில் பல தடவைகள் வானில் வட்டமிட்டு ஆலய கோபுரத்தின் மீது உலங்கு வானூர்தியில் இருந்து பூக்கள் சொரியப்பட்டன. ஆலய சுற்றாடலில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். அத்துடன் அதிரடிப்படையினர் உட்பட இராணுவ பொலிஸ் புலனாய்வாளர்கள், சாரணர்கள் மற்றும் தொண்டர் அமைப்புக்களின் பிரதி நிதிகளும் காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.