பக்கங்கள்

01 ஜூன் 2010

சிறீலங்கா படையினர் திட்டமிட்டே மனிதாபிமான நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தினர்!


ஸ்ரீலங்கா படைத்தரப்பினர் மனிதாபிமான உதவி நிறுவனங்கள், வைத்தியசாலைகள் மற்றும் பொதுமக்கள் மீது திட்டமிட்ட வகையிலேயே தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதை அங்கிருந்து கிடைக்கும் ஆதாரங்களின் மூலம் உறுதிப்படுத்தக் கூடியதாகவுள்ளது என்று சர்வதேச நெருக்கடிகள் குழுத் தலைவர் லூயிஸ் ஆர்பர் ஊடக செய்தியொன்றை வெளியிடுள்ளார்.

அவர் இது குறித்து அதில் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:


இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை நிராகரிக்கும் போக்கையே ஸ்ரீ லங்கா அரசு கொண்டிருக்கிறது. ”இலங்கையில் இடம் பெற் போர்க்குற்றங்கள் தொடர்பாகக் கடந்தவாரம் நாம் வெளியிட்ட அறிக்கையில் ஸ்ரீ லங்கா படைத்தரப்பினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிப் போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பான மிக முக்கியமான குற்றச்சாட்டுக்களை தகுந்த ஆவணங்களுடன் சுட்டிக்காட்டி இருக்கின்றோம்.


2009ஆம் ஆண்டு முதல் ஐந்து மாதங்களும் இடம்பெற்ற இப் போரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் வன்முறைகள் பொது மக்களுடைய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானவை என்பதைக் குறிப்பிட்டிருக்கின்றோம். ஸ்ரீலங்கா படைத்தரப்பினர் மனிதாபிமான உதவி நிறுவனங்கள், வைத்தியசாலைகள் மற்றும் பொதுமக்கள் மீது திட்டமிட்ட வகையிலேயே தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதை அங்கிருந்து கிடைக்கும் ஆதாரங்களின் மூலம் உறுதிப்படுத்தக் கூடியதாகவுள்ளது. இந்த ஆதாரங்களின் பிரகாரம், இப் போரின் போது ஸ்ரீலங்காப் படைத்தரப்பால் பெருமளவு பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது குறித்து தெரிந்திருந்தும், அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கோ, பொதுமக்களைப் பாதுகாப்பதற்கோ ஸ்ரீலங்கா அரச தரப்பு முயற்சிக்கவில்லை என்பதை நம்பக்கூடியதாயிருக்கிறது.

இது சர்வதேச போர் நியமங்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரானவை என்றுமே சர்தேச நெருக்கடிள் குழு கருதுகின்றது. இந்த அடிப்படைகளிலேயே இலங்கையில் இடம்பெற்றுள்ள போர்க்குற்றங்கள் குறித்த விரிவான விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்று சர்வதேச நெருக்கடிகள் குழு வலியுறுத்துகின்றது. சர்வதேச நெருக்கடிகள் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து வெளிப்படையான பொறுப்பணர்வுடன் கூடிய ஒரு சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு பல்வேறு அமைப்புக்களும், ஊடகங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

தகுந்த ஆதாரங்களுடன் வெளியிடப்பட்ட எமது இந்த அறிக்கை தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கம் பொறுப்புணர்வுடன் கூடிய பதில் எதனையும் இது வரை அளிக்கவில்லை. இந்நிலையில், இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வந்த போக்கிலிருந்து ஸ்ரீலங்கா அரசு விடுபட்டுள்ளது என்பதையும் மிழ் மக்கள் உண்மையில் விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை அம் மக்கள் நம்பும் வகையில் உறுதிப்படுத்தப்பட வேண்டியதும் அவசியமாகும்.. இதற்கு இத்தகைய ஒரு சர்வதேச விசாரணைக்கு ஸ்ரீலங்கா அரசு அனுமதிக்க வேண்டும். போர்க் குற்றங்கள் குறித்து விசாரணையை நடாத்தாமலோ அல்லது விசாரணைகளை நடாத்துவதற்கு அனுமதிக்காமலோ ஸ்ரீலங்கா அரசு ஒரு போதும் அதன் நன்மதிப்பை காப்பாற்ற முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.