பக்கங்கள்

11 ஜூன் 2010

வெனிசுலா நாட்டின் ஆதரவை பெற புலிகள் முயற்சிப்பதால் அதை முறியடிக்க இலங்கை நடவடிக்கையாம்.



நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வெனிசுலா அரசின் தார்மீக ஆதரவைப் பெறுவதற்கு வெளிநாடுகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று இலங்கை அரசுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.
இதனால் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, புலிகளின் முயற்சியை முறியடிப்பதற்காக கியூபாவுக்கான இலங்கைத் தூதர் தமாரா குணநாயகத்தை இலங்கை அரசு அவசர அவசரமாக வெனிசுலாவுக்கு அனுப்பியிருக்கிறது. இலங்கை அரசின் உத்தரவின் பேரில் வெனிசுலாவுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ள கியூபா தூதர் தமாரா குணநாயகம் அந்நாட்டுப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இந்தத் தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
லத்தீன் அமெரிக்க நாடுகளில் தமது சர்வதேச வலையமைப்பை விஸ்தரிப்பதற்கு புலிகள் முயற்சிக்கின்றார்கள்.அதற்கான தளமாக வெனிசுலாவைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். வெனிசுலா அரசின் அனுதாபத்தையும், ஆதரவையும் பெற முயற்சிக்கின்றார்கள்.
ஆகவேதான் அகதிகள் என்ற போர்வையில் இந்நாட்டுக்குள் ஊடுருவுகிறார்கள். ஆஸ்திரேலியா நோக்கி 300 பேருடன் புறப்பட்ட புலிகளின் கப்பல் ஒன்று வெனிசுலாவுக்கு வருகிறது என்று எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டவர்கள் வெனிசுலாவுக்கு வருவதன் நோக்கம் இதுவே ஆகும். ஆனால் இலங்கைக்கும் வெனிசுலாவுக்கும் இடையில் மிகவும் நெருக்கமான நட்பு உண்டு. இரு நாடுகளின் ஜனாதிபதிகளும் மிக நெருக்கமான நண்பர்கள்.
இலங்கையில் முட்கம்பி முகாம்கள் என்று எவையுமே இல்லை. இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவே இல்லை. யுத்தக் குற்றங்களைப் புரியவே இல்லை. இவையெல்லாம் புலிகளின் பொய்ப் பிரசாரங்கள் என்று அந்தப் பத்திரிகைக்கு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.