பக்கங்கள்

12 ஜூன் 2010

மகிந்தவைக் களங்கப்படுத்தவே என் மீதான குற்றச்சாட்டு என்கிறார் டக்ளஸ் தேவானந்தா.


அரசு முறைப் பயணமாக இந்தியா வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன், அந்நாட்டு நல்வாழ்வுத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வந்திருந்தார்.
சென்னையில் 1986ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூடு வழக்கில், தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வழக்கு வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், டக்ளஸ் தேவானந்தா தனது இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பிய ராஜபக்சேவுடன் வெள்ளிக்கிழமை அவரும் சென்று விட்டார்.
இந்தியாவில் இருந்தவரை தன் மீது எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாத டக்ளஸ் தேவானந்தா, இலங்கை சென்றவுடன் ஊடகங்களில் பேட்டி அளித்து வருகிறார்.
இந்த வகையில் தமிழகத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள டக்ளஸ் தேவானந்தா, 1986ல் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், எனக்கு நேரடியாக தொடர்பு இல்லை. துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் ஒரே கூட்டமாக இருந்தது. எல்லோரும் போய்விட்ட பின்னால்தான் நான் வந்தேன். காவல் அதிகாரிகள் ஸ்ரீபால், தேவாரம் போன்றவர்கள் வந்தார்கள்.
1987ல் செய்துக்கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி எனக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.
தீவிரவார நடவடிக்கைகளில் தொடர்புடையவர்களும், பல்வேறு வழங்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களும், தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்த பின்னால் இலங்கை அரசு அவர்களின் குற்றங்களை மன்னிக்கலாம் என்று பிரிவு 2.11 கூறுகிறது. இதற்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்கலாம் என்று கூறப்பட்டது.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய பயணத்தை கொச்சை படுத்துவதற்காக, என் மீதான குற்றச்சாட்டுக்கான சர்ச்சை எழுப்பப்படுகிறது. என் மீதான குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக சந்திப்பேன் என்றும், முதல்வர் கருணாநிதி நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன் என டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா இப்படி கூறினாலும், 1986ல் நடந்த சம்பவம் உண்மைதான் என்று அப்போதைய காவல்துறை அதிகாரிகள் உறுதிபட கூறியுள்ளனர். இதற்கிடையில் டக்ளஸ் தேவானந்தா மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும், டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.