பக்கங்கள்

28 ஜூன் 2010

கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஜோதி ரவி நாலாம் மாடியில்.


கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஏ.கே. கண்ணன் என்ற ஜோதிரவி சிற்றம்பலம் தனது சொந்த ஊரான கரவெட்டியில் வாழ்ந்து வந்த வேளையில், கொழும்பில் இருந்து சென்ற சிறப்புப் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு வரப்பட்டு 4ம் மாடியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
நன்னடத்தை காரணமாக பிணையில் கனடிய நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு தனது வன்செயல் சார்ந்த செயல்களில் இருந்து புனர்வாழ்வு பெற்று தனது குடும்பத்துடன் ஒரு சாதாரண குடும்பஸ்தராக வாழ்ந்து வந்த வேளையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நாடு கடத்தப்பட்ட ஏ.கே. கண்ணன் என அழைக்கப்படும் சிற்றம்பலம் யோதிரவி இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கனடாவில் புலம்பெயர் சமூகங்களிடையே ஏற்படும் கலாச்சார அதிர்ச்சி மற்றும் தங்கள் மண்ணில் அனுபவித்த வன்முறைகள் காரணமாக ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு புலம்பெயர் சமுதாயத்தை சேர்ந்த குழுக்கள் வன்முறைகள் மற்றும் சட்டவிரோத சம்பவங்களில் தொடர்புபடுதல் போன்ற சம்பவங்கள் இடம்பெறுவதுண்டு.
அந்த வகையில் தமிழர்கள் கனடாவிற்கு வருகை தந்த போது வியட்நாமியக் குழு வன்முறை மற்றும் இந்தியக் குழு வன்முறைகள் அதிகரித்துக் காணப்பட்டன.
அதற்கு முன்பான காலத்தில் ஸ்பானிய, இத்தாலிய மற்றும் ஐரோப்பிய குழுக்கள் தங்கள் ஆரம்பப் புலம்பெயர்வில் இவ்வாறான வன்முறைகளில் ஈடுபட்டு கால ஓட்டத்தில் அவற்றில் இருந்து மீண்டு வந்தன.
சட்ட ஒழுக்க நடைமுறைகளிற்கு குந்தகம் விளைவிக்கும் இக்குழுக்கள் ஒட்டுமொத்த இனத்தின் அடையாளத்தையுமே அவமரியாதைக்கு உட்படுத்தி விடுவதே வழமை.
அந்த வகையில் தமிழர்கள் சார்ந்த குழுக்களும் அவ்வாறே செயற்பட்டன. இவ்வாறு தமிழர்களின் புலம்பெயர்தலின் போன வன்முறைக் குழுவாக அடையாளம் காணப்பட்ட ஏ.கே.கண்ணன் குழுவின் தலைவரான கண்ணன் எனப்படும் யோதிரவி சிற்றம்பலம் தான் திருந்தி வாழ்தலிற்கு தன்னை உட்படுத்தி சாதாரண குடும்பஸ்தராக தனது மனைவி பிள்ளைகளுடன் கனடாவில் வசித்து வந்த போதே எந்தவித முன்னறிவிப்புமின்றி கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.
இவ்வாறு நாடுகடத்தப்பட்ட ஜோதிரவி சிற்றம்பலம் தனது சொந்த ஊரான கரவெட்டி சென்று தன்னை மீள் வாழ்க்கைக்கு உட்படுத்தி வந்த போதே கொழும்பில் இருந்து சென்ற சிறப்புப் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு 4ம் மாடியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
அவரது உறவினர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜோதிரவியின் நிலை குறித்து அவரது மனைவி மற்றும் நெருங்கிய உறவினர்கள் அதீத கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
அத்தோடு இவ்வாறான வன்முறை நெருக்குவாரமானது நாடு கடத்தப்படுபவர்கள் எதிர்நோக்கக்கூடிய அபாயத்தைக் கனடா போன்ற பொதுநலவாய நாடுகளிற்கு எடுத்துக் காட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.