பக்கங்கள்

23 ஜூன் 2014

கனடாவில் ஒன்றிணைந்தனர் தமிழ் முஸ்லீம் மக்கள்!

இலங்கையில் பொது பல சேனாவினால் இஸ்லாமியத் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக கனடாவின் தலைநகர் ரொறன்ரோவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த கண்டன - எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் தமிழ் மக்களும், இஸ்லாமிய தமிழ் மக்களும் இணைந்து நேற்று ஞாயிறன்று நடாத்தினர். ஸ்காபுரோ நகரின் செப்பார்ட் - மார்க்கம் சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது அதிருப்தியையும் - எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். கனடாவில் இஸ்லாமிய தமிழர்கள், ஈழத்தமிழர்களுடன் இணைந்து நடத்திய - இலங்கை அரச அடக்குமுறைக்கு எதிரான - முதல் நிகழ்வாக இது பதிவாகியுள்ளது என இணையங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

22 ஜூன் 2014

ஆசிரியரின் தாக்குதலில் காதுகேட்கும் தன்மையை இழந்த மாணவன்!

ஆசிரியரின் தாக்குதலினால் காதுகேட்கும் தகவினை இழந்த பளை மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவன் ந.கதீசன் யாழ்.போதனாவைத்திய சாலையில் கடந்த ஆறுநாட்களாக அனுமதிக்கப்பட்டுள்ளான். 2014ம் ஆண்டு கணிதப்பிரிவில் கல்வி கற்கும் குறித்த மாணவன் தவறு புரிந்ததாகக்கூறி கடந்த திங்கக் கிழமை பாடசாலையில் பரீட்சை இடம்பெற்றிருந்த வேளை ஆசிரியர் ஒருவர் பரீட்சை மண்டபத்திற்குள் நுளைந்து குறித்த மாணவனை பலமாகத்தாக்கியுள்ளார் குறித்த மாணவன் தான் புரிந்தது குற்றமெனில் பாடசாலை அதிபர் முன்னிலையில் பகிரங்க மன்னிப்புக்கோறுவதாகக் கூறியபோதும் தாக்கிய ஆசிரியர் அவ்விடத்தைவிட்டுச் சென்று பின்பு மீண்டும் வந்து அதே மாணவனை தாக்கியுள்ளார். இதன் பயனாக தற்போது குறித்தமாணவனின் ஒருபக்க காதுச்செவிப்பறை வெடித்து கேட்கும் தன்மையை இழந்துள்ளது. தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவன் தொடர்பினில் கல்வி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லையெனத் தெரியவருகின்றது. இருப்பினும் சம்பவம் தொடர்பினில் கடந்த 20ம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தினில் பெற்றோரினால் முறையிடப்பட்டுள்ளதோடு வைத்தியசாலைத்தரப்பினர் மாணவனின் எதிர்காலம் கருதி பொலிசாரிடம் பாரப்படுத்தியுள்ளனர்.

21 ஜூன் 2014

சாட்டிக்கடலில் மூதாளர் பலி!

சாட்டிக் கடலில் மூழ்கி மூதாளர் ஒருவர் இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.குடும்பத்தினருடன் சாட்டிக் கடலில் குளிக்கச் சென்ற இவர் இன்று மாலை கடலில் மூழ்கி மரணமானார். மானிப்பாய் வீதி, கொட்டடியைச் சேர்ந்த விஸ்வலிங்கம் நடராஜா (வயது 84) என்பவரே உயிரிழந்தவராவார். பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்,போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கோத்தபாயவை கொல்ல புலம்பெயர் புலிகள் முயற்சியாம்!

பாதாள உலகக் குழுக்ககளைக் கொண்டு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை படுகொலை செய்ய தமிழீழ விடுதபை; புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் அமைப்புக்கள் முயற்சித்து வருவதாக கொழும்பு இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் இயங்கி வரும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களைப் பயன்படுத்தி, பாதுகாப்புச் செயலாளரை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட திட்டம் அம்பலமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவர் மலேஷியாவிலிருந்து இந்த கொலைத் திட்டத்தை தீட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. கடும்போக்குடைய அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் ஊடாக இந்த கொலை முயற்சி மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வன்னி யுத்தத்தின் பொது சிங்கப்பூர் வழியாக மலேஷியா சென்றடைந்த குறித்த புலி உறுப்பினர், புலிகளின் கொழும்பு புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பாக கடமையாற்றிவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்த நபர் தற்போது ஜெர்மனிய கடவுச் சீட்டை பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கோதபாய ராஜபக்ஷவின் படுகொலை முயற்சியின் பின்னணியில் சில வெளிநாட்டு புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்களும் செயற்படக் கூடுமென்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

தொடர்கிறது மிருகபலி!250கடாக்கள் படுகொலை!

தெல்லிப்பழை துர்க்காபுரம் பேரம்பல வைரவர் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை சுமார் இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட கடாக்ளும் நூற்றுக்கு மேற்பட்ட சேவல்களும் வேள்வியில் பலியிடப்பட்டன. அதிகாலையில் இடம் பெற்ற பொங்கல் வழிபாடுகளைத் தொடர்ந்து வேள்வி இடம் பெற்றது. நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு ஏற்ப சுகாதார முறைப்படியே கடாக்கள் சேவல்கள் வெட்டப்பட்டன என்றும், பொது மக்கள் வெட்டும் காட்சியைப் பார்வையிடா வண்ணமே பலியிடல் நடைபெற்றது என்றும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். வலி. வடக்கு தெல்லிப்பழைப் பிரதேச சபையின் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் கடாக்களைப் பரிசோதனை செய்து, அவற்றை வெட்ட அனுமதித்தனர். யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வேள்வியில் கலந்துகொண்டனர் என தெரிவிக்கப்படுகின்றது.

20 ஜூன் 2014

மாணவி மீது பாலியல் வல்லுறவு!படையினன் கைது!

மூளை வளர்ச்சி குறைந்த 15 வயதான பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இராணுவத்தின் பொறியியல் படைப் பிரிவின் வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் இன்று அதிகாலை 1.30 அளவில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாணந்துறை நல்துர பிரதேசத்தில் உள்ள இராணுவ பொறியியல் படைப் பிரிவின் முகாமில் பணியாற்றி வந்துள்ளார். முந்தல் பொலிஸ் பிரிவின் நவதன்குளம் – விசேனைக்கட்டு பிரதேசத்தில் நேற்று மாலை 4.30 அளவில் சந்தேக நபர் மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தல் – நவதன்குளம் பிரதேசத்தில் வசித்து வரும் போரில் அங்கவீனமுற்ற இராணுவ வீரரின் வீடொன்றை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபடுவதற்காக சந்தேக நபர் பிரதேசத்திற்கு சென்றிருந்தார். பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட மாணவி மருத்துவப் பரிசோதனைக்காக முந்தல் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். முந்தல் பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

19 ஜூன் 2014

வேலணையில் கம்பத்துடன் மோதிய மாநகரசபை அதிகாரிகள்!

யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் பிரணவநாதன் அவர்களின் பிக்கப் வாகனம் வேலணை அராலிச் சந்தியில் இன்று மாலை 3 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. அலுவலக நேரத்தில் சாட்டிக் கடற்கரையில் மது அருந்தி விட்டு நிலை தடுமாறிய போதையில் வாகனத்தை செலுத்தியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. வேலணை அராலிச் சந்தியில் உள்ள மின் கம்பம் ஒன்றில் மோதியதில் மின்கம்பம் ஐந்தடி தூரம் வரை தூக்கி வைக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் முன்பக்கம் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. யுன்.என்.டி.பி நிறுவனத்தினால் வழங்கப்பட்ட யாழ்.மாநகர சபை ஆணையாளரின் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது. அத்துடன், வேலணை வங்களாவடிச் சந்தியில் பலரின் உயிரைப் பறித்தெடுக்கும் வகையில் மேற்படி வாகனம் வேகக் கட்டுப்பாட்டையிழந்து சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இவ் வாகனத்தில் யாழ்.மாநரக சபையில் கடமையாற்றும் ஐந்து உத்தியோகத்தர்கள் அதிஉச்ச மதுபோதையில் இருந்துள்ளனர். வாகனச் சாரதி நிலை தடுமாறி வாகனம் விபத்துக்குள்ளானது கூடத் தெரியாத நிலையில் போதையில் நின்றுள்ளார்.இவ்வாறானவர்களை உடனடியாக வேலையில் இருந்து நிறுத்துவதுடன், பல மனித உயிர்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியும். ஒரு அரச வாகனத்தில், அதுவும் ஐந்து பேரும் அரச பணியாளர்கள், அலுவலக நேரத்தில் இவ்வாறானதொரு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை யாழ்.மாநகர சபையின் நிர்வாகத் திறமையினை எடுத்தக் காட்டுவதாக அமைந்துள்ளது. அத்துடன், வாகனச் சாரதி விபத்து நடந்த இடத்தில் கூடிய மக்களிடம் தகாத வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டதுடன், இது எங்களது வாகனம், இதை நீங்கள் ஒன்றும் பார்க்த் தேவையில்லை என போதையில் உலறிக் கொண்டிருந்தார். இது இவ்வாறிருக்க வாகனத்தின் முன் வைக்கப்பட்டிருந்த ஆணையாளரின் பெயர் பலகை வாகனத்தில் வந்த ஒருவரால் இரகசியமான முறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

நன்றி:(செய்தி,படம்)new jaffna 

தமிழர்களுடன் ஒன்றிணைந்து போராடப்போவதாக லண்டனில் முஸ்லீம் மக்கள் தெரிவிப்பு!

இலங்கையில் அளுத்கம பகுதியில் கடும்போக்கு பௌத்தர்களால் முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டதாகக் கூறி, அதனைக் கண்டித்து நேற்று லண்டனில் புலம்பெயர் இலங்கை முஸ்லிம்களால் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. ஆண்களும், பெண்களுமாக ஆயிரக்கணக்கான இலங்கை முஸ்லிம்கள் பிரிட்டனின் பல பாகங்களில் இருந்தும் வந்து அதில் கலந்து கொண்டனர். பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.மகிந்த அரசுக்கு எதிராகவும் மற்றும் கோத்தபாய,பொதுபலசேனாவின் ஞானசார தேரருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்கள்.தமிழர்களும் முஸ்லீம்களும் பிரிந்திருந்தது போதும் என்றும் இனி தமிழ் மக்களுடன் ஒன்றிணைந்து போராடப்போவதாகவும் அங்கு கருத்துரைத்த ஒருவர் தெரிவித்தார்.மேலும் கருத்துரைத்த அவர்,எமக்கு ஒரு தீர்வு இன்றேல் ஜெனீவாவரை இந்த போராட்டம் தொடரும் என்றார்.

18 ஜூன் 2014

மிருகபலிக்கு கூட்டமைப்பு ஆதரவா?

யாழ். கவணாவத்தையில் உள்ள நரசிங்க வைரவர் ஆலயத்தில் பாரம்பரிய வேள்வி என்கிற பெயரில் நடத்தப்பட்டு வருகின்ற மிருக பலிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கி வருகின்றது. இக்கொலை நிகழ்வை மிருக பலித் திருவிழா என்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரர்கள் அழகு தமிழில் அழைக்கின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரர்கள் நினைத்து இருந்தால் இம்மிருக பலியை இம்முறையேனும் தடுத்து நிறுத்தி இருக்க முடியும். ஏனென்றால் வலிகாமம் வடக்கு பிரதேச சபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பிரதேச சபை அனுமதிக்கின்ற பட்சத்தில்தான் கோவிலை தற்காலிகமாக கொல்களமாக பயன்படுத்த முடியும். ஆனால் இப்பிரதேச சபையின் தவிசாளர் எஸ். சுகிர்தன் ஆலயத்தை தற்காலிக கொல்களமாக பயன்படுத்த அனுமதி வழங்கினார். இவருக்கு இதற்காக விசேட கவனிப்புக்கள் ஆலய நிர்வாகத்தால் செய்து கொடுக்கப்பட்டன. இவரது அனுமதிக் கடிதம் இத்துடன் இணைக்கப்படுகின்றது.நன்றி:new jaffna 

மிருகபலியை தடுக்க கலந்துரையாடல்!

வலிகாமத்திலுள்ள சில ஆலயங்களில் வேள்வி என்ற பெயரில் நடத்தப்படுகின்ற மிருகபலி தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு பின்புறம் கல்லூரி வீதியில் அமைந்துள்ள சைவ மகா சபையின் தலைமைகத்தில் நடைபெறவுள்ளது. சைவ மகா சபையும் சனாதன யுவ விழிப்புணர்வுக் கழகமும் இணைந்து இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளன. சைவ மகா சபையின் தலைவர் சிவத்திரு இ.கலியுகவரதன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்து விவகாரங்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவருமான சிவத்திரு சீனித்தம்பி யோகேஸ்வரன் விசேட பிரதிநிதியாக கலந்துகொள்ளவுள்ளார். எதிர்காலத்தில் மிருகபலியை நிறுத்துவதற்கு நாடாளுமன்ற ரீதியிலும் மாகாண சபை ரீதியிலும் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக இந்தக் கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்படவுள்ளது. எனவே, இந்தக் கலந்துரையாடலுக்கு இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலய தர்மகத்தாக்கள், பரிபாலன சபைகளின் பிரதிநிதிகள், ஜீவகாருண்ய ஆர்வலர்கள் போன்றோரைக் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்குமாறு வைச மகா சபையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

17 ஜூன் 2014

லெப்டினன்ட் ஜுனைதீனின் வழியில் வாரீர்!

காலியில் எங்கள் கழுத்து வெட்டப்பட்ட பொழுது
நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தீர்கள்.
ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!
கொழும்பில் குற்றுயிரும் குலையுயிருமாய்
நாம் எரிக்கப்பட்ட பொழுது நீங்கள் வாய்புதைத்து
பேசா மடந்தைகளாய் இருந்தீர்கள்.
ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!
அடங்கிக் கிடந்த நாங்கள் ஆயுதம் ஏந்திக் களம் புகுந்த பொழுது
உங்களில் எல்லோரும் எங்களுக்குக் கைகொடுக்க வரவில்லை.
ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!
ஆனால்... ஆனால், மூதூரிலும், ஆரையம்பதியிலும்,
வீரமுனையிலும் தமிழ்க் குருதி வடிந்த பொழுது...
தமிழ்க் குருதியில் சிங்களம் நனைந்து திழைத்த பொழுது
நீங்கள் கைகட்டி, வாய்புதைத்து நிற்கவில்லை.
எரியும் வீட்டில் பற்றியெரிந்த கொள்ளிக் கட்டையைப் பிடுங்கி
வீட்டில் இருந்தவனை எரித்த கதையாக எங்களை எரித்தீர்கள்.
ஜிகாத், முஸ்லிம் ஊர்காவல்படை எனப் போர் பறையடித்து
தென்தமிழீழ மண்ணில் எங்கள் உயிர்களைக் காவு கொண்டீர்கள். கல்முனையில் பள்ளி சென்று திரும்பிய பதினான்கு வயதுத்
தமிழ்ச் சிறுமியை நிர்வாணப்படுத்தி
மாறி மாறி வன்புணர்வு செய்தீர்கள்.
பின் அந்தப் பச்சிளம் தமிழ்க் குழந்தையை கல்லால் அடித்து
இஸ்லாமிய மரபுப்படி ‘வேசியை’க் கொன்றோம் என்று எக்களாமிட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!
வடதமிழீழ மண்ணை சிங்களம் முற்றுகையிட்டுப் பட்டினி போட்ட பொழுது, மலக்குண்டுகளை வீசிய பொழுது,
உங்களில் அரைவாசிப் பேர் சிங்கள நாட்டிற்கு ஓடிப் போனீர்கள்.
ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!
பின்னர் பேரீச்சம் பழ வாகனங்களில் யாழ்ப்பாணத்திற்கு
ஆயுதங்களைக் கொண்டு வந்து
எம்மைக் கொல்வதற்கு மறைத்து வைத்தீர்கள்.
ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!
 வேறு வழியின்றி... எங்கள் பாதுகாப்பிற்காக... உங்களின் பாதுகாப்பிற்காகவும், உங்களில் எஞ்சியிருந்தோரை எங்கள் புலிமறவர்கள்
புத்தளத்திற்கு அனுப்பி வைத்தார்கள் - சிங்கள நாட்டிற்கு அல்ல!
ஏனென்றால் உங்களை நாங்கள் தமிழர்களாகக் கருதியதால்!
ஆனால் புத்தளம் தமிழீழத்தின் பகுதி என்பதை நீங்கள் மறந்தீர்கள்.
உங்கள் ஊரை விட்டு வேரடி மண்ணோடு புலிகள் பிடுங்கியெறிந்ததாக அரற்றித் திரிந்தீர்கள்.
ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!
மேற்குலகம் வந்து சமாதானம் பேசிய பொழுது...
தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு பற்றிப் பேசிய பொழுது,
உங்களுக்கும் அதில் சரி பாதி பங்கு வேண்டும் என்றீர்கள்.
இடைக்கால நிர்வாகத்திலும் பங்கு கேட்டீர்கள்.
பேச்சுவார்த்தை மேசையில் குந்தியிருக்க வேண்டும் என்று
நாண்டு பிடித்து நின்றீர்கள்.
ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!
ஆனால் உங்களை நாங்கள் தமிழர்களாகவே பார்த்தோம்.
வடதமிழீழத்திற்கும் மீண்டும் வாருங்கள்:
வந்து குடியமருங்கள் என்று உங்களுக்கு நேசக்கரம் நீட்டினோம். கிளிநொச்சியில் உங்களைக் கட்டியணைத்து மட்டின் பிரியாணி தந்தோம். வெறும் மட்டின் பிரியாணி அல்ல. ஹலால் மட்டின் பிரியாணி!
ஏனென்றால் உங்களை நாங்கள் தமிழர்களாகவே பார்த்தோம்.
இருந்தும் என்னவாயிற்று! ஜிகாத் குழு என்ன கலைந்தா போயிற்று?
ஓசாமா குழு என்ன ஓடியா போனது?
முத்தலீப் என்ன சிங்களப் படையிலிருந்தா விலகினான்?
எங்கள் தலைவனுக்கு அருகிருந்து
மட்டின் பிரியாணி தின்ற உங்கள் ஹக்கீம்
தின்ற வாசனை அடங்கு முன்பே
தமிழ் இறைச்சியும், பிரியாணியும் தின்பதற்காக
மகிந்தவுக்கு அருகில் கொலுவிருந்தான்.
ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!
முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள்
புதையுண்டு போன பொழுது
நீங்கள் கண்மூடி நின்றீர்கள்.
நந்திக்கடலில் எங்கள் குருதி வழிந்தோடிய பொழுது
நீங்கள் மகிந்த பண்டாவுடன் கூத்தாடினீர்கள்.
எமக்கென்று யாருமே இல்லையா?
என்று நாங்கள் கதறியழுத பொழுது...
அரற்றிப் புலம்பிய பொழுது நீங்கள் எங்களை திரும்பியே பார்க்கவில்லை. ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்.
 ‘‘நாம் ஈழத்தமிழர்கள் அல்ல.
அரபு தேசமும், பாரசீகமும், பாகிஸ்தானும், சாவகமுமே
எங்கள் தேசம்’’ என்று நீங்கள் பெருமிதம் கொண்டீர்கள்.
 ‘‘தமிழ் நாங்கள் பேசும் மொழியேயன்றி நாம் தமிழர்கள் அல்ல:
இலங்கைச் சோனகர்கள்’’ என்று பறைதட்டினீர்கள்.
 இப்பொழுது என்னவாயிற்று?
அளுத்கமவில் நீங்கள் அழுவது எங்களுக்குக் கேட்கிறது.
அச்சத்தில் உறைந்து உங்கள் பெண்களும்,
குழந்தைகளும் கதறுவதும்,
‘அல்லாவே எங்களைக் காப்பாற்றும்’
என்று உங்கள் ஆண்கள் இறைஞ்சுவதும்
அல்லாவிற்குக் கேட்கிறதோ, இல்லையோ,
நிச்சயம் எங்களின் காதுகளுக்குக் கேட்கிறது.
 உங்களுக்காக நாங்கள் ஒரு கணம் இரங்குகிறோம்.
மனிதநேயம் கொண்டு உங்களை நினைக்கின்றோம்.
காலியில் எங்கள் கழுத்து அறுந்ததையும்,
கொழும்பில் நாங்கள் எரிந்ததையும் எண்ணிப் பார்க்கிறோம்.
நீங்கள் கைகட்டியும், வாய்புதைத்து நின்றதையும் அல்ல!
ஏனென்றால் உங்களை நாங்கள் தமிழர்களாகவே பார்க்கின்றோம். அராபியர்களாக அல்ல. பாரசீகர்களாக அல்ல.
பாகீஸ்தானியர்களாக அல்ல. சாவகர்களாகவும் அல்ல.
தமிழ் பேசும் முஸ்லிம்களாக...
இஸ்லாமியத் தமிழர்களாகவே, உங்களை நாங்கள் பார்க்கின்றோம். எங்களுக்காக... எங்களுக்கு உறுதுணையாக...
எங்கள் மண்ணை மீட்பதற்காக ஆயுதம் ஏந்திக் களம் புகுந்து
வீரப்போர் புரிந்து மடிந்த எங்கள் இஸ்லாமியத்
தமிழ் சகோதரர்களான லெப்டினன்ட் ஜுனைதீனையும்,
லெப்டினன்ட் காதரையும்,
ஆனந்தபுரத்தில் எங்கள் தலைவனைப் பாதுகாத்து மடிந்த
காதரின் அண்ணன் லெப்.கேணல் முகைதீனையும்
நாங்கள் மறக்கவில்லை.
யாழ் மண்ணை சூரியக்கதிர் கொண்டு சிங்களம் சுட்டெரித்த பொழுது எங்களுக்காகத் தாய்த் தமிழகத்தில் தீமூட்டித் தன்னுயிரை ஆகுதியாக்கிய வீரத்தமிழ்மகன் - இஸ்லாமியத் தமிழ்மகன்
அப்துல் ரவூப்பையும் நாங்கள் எவருமே மறந்துவிடவில்லை.
தமிழர்களோடு முஸ்லிம்கள் கைகோர்த்து நின்றிருந்தால்
எப்பொழுதோ தமிழீழம் மலர்ந்திருக்கும்.
இப்பொழுதும்கூட காலம் கடந்துவிடவில்லை.
ஹக்கீமையும், ஹிஸ்புல்லாவையும் தூக்கியெறிந்து விட்டு
ஜுனைதீனும், காதரும், முகைதீனும், அப்துல் ரவூப்பும்
நடந்த வழியில் வாருங்கள்.
எங்கள் மண் விடியும் நாளில் உங்களுக்கும் விடிவு கிட்டும்.
இல்லாது போனால் உங்களுக்கு சிங்களம் சமாதி கட்டும்.

சேரமான் 

16 ஜூன் 2014

கோண்டாவிலில் காடைக்கும்பலின் வாள்வெட்டில் இளைஞர் பலி!

கோண்டாவில் பகுதியில் காடைக் கும்பலின் வாள்வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் சுகிர்தன் (வயது 21) என்ற இளைஞர் உயிரிழந்தார். சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது - இன்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் கொண்ட காடையர்கள் வீட்டின் முன்பாக நின்ற சுகிர்தனைத் தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயன்றபோது சுகிர்தனின் உறவினர்கள் அவர்களில் இருவரைப் பிடித்துத் தாக்கியுள்ளனர். மற்றைய இருவரும் தப்பிச் சென்றனர். தப்பிச்சென்றவர்கள் மீண்டும் வேறு இளைஞர்களுடன் கத்திகள், பொல்லுகள் சகிதம் இவர்களின் வீட்டுக்கு வந்து ரவீந்திரனை வாளால் வெட்டியுள்ளனர். அவர் அந்த இடத்திலேயே துடிதுடித்து மரணமானார். அவரது சகோதரனும் சகோதரியும் வாள்வெட்டுக் இலக்காகிக் காயமடைந்தனர். முற்பகையே இக்கொலைக்குக் காரணமெனத் தெரிவிக்கப்பட்டது. ரவீந்திரன் செந்தூரன் (வயது 23), ரவீந்திரன் இலக்கியா (வயது 26) ஆகியோரே காயமடைந்தவர்களாவர். இவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சடலம் பிரேத பரிசோதனைக்கான யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை - இச்சம்பவத்தைத் தொடர்ந்து கோண்டாவில் பகுதி இளைஞர்களுக்கும் உரும்பிராய் மேற்குப் பகுதி இளைஞர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாகவும் உரும்பிராய் மேற்குப் பகுதியிலுள்ள வீடுகள் சில சேதமாக்கப்பட்டன எனவும் தெரிவிக்கப்படுகிறது. நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர படைத்தரப்பும் பொலிஸாரும் இப்பகுதில் குவிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

சித்தங்கேணி நபர் கொடூரமான முறையில் தற்கொலை!

மூளாய் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று காலை தனது கழுத்தை பிளேட்டால் அறுத்து தற்கொலை செய்துள்ளார். கீரிமலை வீதி, சித்தங்கேணியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி வவிகரன் (வயது 37) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.அம்மை நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த இவர், நேற்றுக்காலை வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுள்ளார்.வீட்டார் தடுக்கவே அதனை உதாசீனம் செய்துவிட்டு,தான் அருகில் உள்ள கடைக்குச் சென்று வருகிறேன் எனத் தெரிவித்து விட்டு சைக்கிளில் சென்றுள்ளார். காலை 7 மணியளவில் மூளாய் மூன்கோட்டைப் பகுதியில் உள்ள ஒழுங்கையில் நின்ற இவர் தனது கழுத்தை பிளேட்டால் தானே அறுத்துள்ளார். சற்றுத் தொலைவில் நின்ற சிலர் தடுக்க விரைந்த போதும் அவர் தனது கழுத்தை பிளேட்டால் அறுத்து மரணமானார். அவரது கை இரத்தம் தோய்ந்த நிலையில் பிளேட்டுடன் காணப்பட்டது. இவர் அங்குள்ள கடை ஒன்றில் காலை பிளேட் வாங்கினார் என வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.பிரேத பரிசோதனைக்காக சடலம் பேதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வட்டுக் கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

15 ஜூன் 2014

சுதுமலை கொலை தொடர்பில் ஐவர் கைது!

யாழ். சுதுமலை பகுதியில் வயோதிபப்பெண்ணை கொலை செய்துவிட்டு நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஐவரை தாம் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.சுதுமலை வடக்கு மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் அதிகாலை புகுந்த கொள்ளை குழு வீட்டில் இருந்த இரண்டு பெண்களின் கைகள் மற்றும் வாய் என்பவற்றை கட்டிவிட்டு அவர்களின் நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றிருந்தனர். வாய் இறுக கட்டப்பட்டதால் வீட்டின் உரிமையாளரான குமாரலிங்கம் பத்மாவதி (வயது- 57) என்பவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.இதன்போது வீட்டில் இருந்த மற்றைய பெண்ணின் மகன் உட்பட ஐவரை சந்தேகத்தில் பொலிசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட மற்றையவர்கள் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடம் விசாரணைகளைத் தாம் மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

14 ஜூன் 2014

லா சப்பலில் இளைஞன் மீது வாள்வெட்டு!

பாரிஸ் லா சப்பல் பகுதியில் தமிழ்க் குழுக்களுக்கிடையிலான மோதலில் 18 வயது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரிஸ் லா சப்பல் பகுதி தமிழர்கள் நிறைந்த பகுதியாகும். தமிழர்களின் ஆதிக்கம் இங்கு வந்த பின் வாள்வெட்டு கத்திக்குத்து படுகொலை போன்ற வன்முறைகளும் பிரசித்தம் அடைந்துள்ளது. பாரிஸ் லா சப்பல் பகுதிக்கு அருகாமையில் உள்ள பிலிப் து ஜிராட் வீதியில் Rue Philippe-de-Girardகடந்த வெள்ளி இரவு இந்தக் குழு மோதல் இடம்பெற்றதாகவும் இருபது பேர் கோண்ட குழுவின் தாக்குதலில் 18 வயது இளைஞன் ஒருவர் தலையில் வாளினால் வெட்டப்பட்டும் சுத்தியலினால் தாக்கப்பட்டும் உயிராபத்தான நிலையில் உள்ளார் என்றும் பாரிசின் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.அவசர முதலுதவிச் சேவையினர் வந்த போது காயங்களின் கடுமையினால் இந்த இளைஞன் கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாகவும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் இன்னமும் உயிராபத்தான நிலையிலேயே உள்ளதாகக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவமானது தமிழ் குழுக்களிடையேயான மோதலின் தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என நம்பப்படுவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருடர்களினால் உயிரிழந்த பெண்!

யாழ்,சுதுமலை வடக்கில் நேற்று நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த பெண்ணை மிரட்டிக் கட்டி வைத்துவிட்டு அகப்பட்டவற்றை சுருட்டிச் சென்றனர். கட்டிப் போடப்பட்ட பெண் அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் உயிரிழந்தார். பத்மாவதி குமாரலிங்கம் (வயது 56) என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தார் என்று முற்கொண்டு கிடைத்த செய்திகள் தெரிவித்தன. ஆபத்தான நிலையில் மீடகப்பட்டு இன்று அதிகாலையில் யாழ்.மருத்துவமனைக்கு  அவர் கொண்டு செல்லப்பட்டபோதிலும் அவர் அங்கு உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

13 ஜூன் 2014

புலிகள் மீதான தடை சரியானதா?விசாரிக்கிறது மோடி அரசு!

புலிகள் இயக்கத்துக்கு விதித்துள்ள தடை சரியா என்பதை விசாரிக்க நீதிபதி ஜி.பி.மித்தல் தலைமையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு இதற்கான உத்தரவு மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை இணைச் செயலர் ராகேஷ்சிங் கடந்த ஜூன் 5ம் தேதி வெளியிட்ட அரசாணை, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் 5(1) பிரிவின்படி டெல்லி உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதி ஜி.பி.மித்தல் தலைமையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயம் அமைக்கப்படுகிறது. விடுதலை புலிகள் இயக்கத்தை சட்டவிரோத அமைப்பு என்று அறிவிப்பதற்கு மத்திய அரசு தெரிவித்த காரணம் சரியானதுதானா என்தை அந்த அந்த தீர்ப்பாயம் விசாரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.தீவிரவாத இயக்கம் என்று கூறி ஒரு அமைப்புக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு அது சரியா என்பதை கண்டறிய இதுபோன்ற தீர்ப்பாயம் அமைக்கப்படுவது வழக்கமான நடவடிக்கைதான். இதன் மூலம், தடையை விலக்க கோரும் வாய்ப்பு சம்மந்தப்பட்ட அமைப்புக்கோ, அதன் ஆதரவாளர்களுக்கோ வழங்கப்படுகிறது. முன்னதாக கடந்த மே 14ம்தேதியிட்ட மத்திய அரசின் அரசிதழில் விடுதலைப்புலிகளுக்கு ஐந்தாண்டுகள் தடை விதிக்க மத்திய அரசு சில காரணங்களை கூறியிருந்தது. அதில், விடுதலை புலிகள் இயக்கம் இலங்கையை மையமாக கொண்டு செயல்பட்டாலும் அதற்கு இந்தியாவில் அனுதாபிகளும், ஆதரவாளர்களும் உள்ளனர். இலங்கையில் விடுதலை புலிகள் இயக்கம் ஒடுக்கப்பட்ட பிறகும், ஈழம் கோரிக்கையை வலியுறுத்தி அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் செயல்டுகிறார்கள்,. அதன் தலைவர்கள் ஈழம் கோரிக்கைக்காக நிதி திரட்டுதல், பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகிய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதலை புலிகளுக்கு ஆதரவாக இந்தியாவில் சில குழுக்கள் செயல்பட்டன. இதனால் அவற்றின் உறுப்பினர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின்கீழ், 2012, மே 14ம்தேதி முதல் இந்தாண்டு ஏப்ரல் மாதம்வரை வழக்குகழ் வதிவு செய்யப்பட்டன. சிலர் மீது வெடிமருந்து சட்டங்களின்படியும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.விடுதலை புலிகளுக்கு சாதகமாகவும், ஈழம் கோரிக்கையை ஆதரித்தும் இணையதளம் மூலம் வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் சிலர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இலங்கையில் விடுதலை புலிகளை வீழ்த்த மத்திய அரசே காரணம் என்றும் அவர்கள் கூமுக்கிய றிவருகிறார்கள், இதுபோன்ற பிரச்சாரங்களால் இந்தியாவில் உள்ள மிக பிரமுகர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே பிரிவினையை தூண்டும் இதுபோன்ற குழுக்களை ஊக்குவிக்கும் விடுதலை புலிகள் இயக்கத்தை தொடர்ந்து சட்டவிரோத அமைப்பாக கருத மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த இயக்கத்தினராலும், அதன் ஆதரவாளர்களாலும் இந்தியாவின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பு நேரும் என்பதால் விடுதலை புலிகள் இயக்கத்தை தீவிவாத அமைப்பு என அறிவித்து அந்த இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுஇள்ளது. இவ்வாறு முந்தைய காங்கிரஸ் அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

புளியங்கூடல் மகாமாரி அம்பாள் திருவிழா ஆரம்பமாகியது!

செருத்தனைப்பதி அருள்மிகு ஸ்ரீ இராஜமகாமாரி அம்பாள் கொடியேற்றத் திருவிழா இன்று (13.06.2014)வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பித்து 18 தினங்கள் நடைபெறும் என ஆலய அறங்காவலர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.மேலும் 16ம் திருவிழாவான (28.06.2014)சனிக்கிழமை தேர்த்திருவிழாவும்,(29.06.2014)ஞாயிற்றுக் கிழமை தீர்த்தோற்சவமும் (30.06.2014)திங்கட்கிழமை பகல் சண்டேஸ்வரி உற்சவமும் இரவு பூங்காவன திருவிழாவும் இடம்பெற்று கொடியிறக்கத்துடன் இவ்வருட திருவிழா இனிதே நிறைவுற உள்ளது.

12 ஜூன் 2014

பளையில் குழுமோதல் கத்திக்குத்து!

பளைப்பகுதியில் இளம்குடும்பஸ்தர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள். இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கத்திக்குத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமான முறையில் சம்பவ இடத்திலேயே பலியாகியிருந்தார்.இதேவேளை மற்றுமொரு நபர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி பளை தம்பகாமம் பகுதியில் நேற்றுக் காலை 6.30 மணியளவில் இரு குழுக்களுக்கிடையில் திடீரென கைகலப்பு ஏற்பட்டுள்ளது. மேற்படி கைகலப்பு இறுதியில் கத்திக்குத்தில் முடிவடைந்ததோடு இந்தக் கத்திக்குத்துக்கு பணக்கொடுக்கல் வாங்கலே காரணம் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேற்படி கத்திக்குத்தில் பலியான பளை தம்பகாமம் பகுதியைச் சேர்ந்த முத்தையா திலீபன் (வயது 27) என்ற இளம்குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார். இவருக்கு மூன்று வயதேயான குழந்தையயான்றும் உள்ளது. வட்டக்கச்சியை சொந்த இடமாகச் கொண்ட மேற்படி குடும்பஸ்தர் தம்பகாமத்தில் திருமணம் செய்து கொண்டவர் என்பது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. மேற்படிச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ள பளை பொலிஸார் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று இருவரைக் கைது செய்துள்ளனர். இதேவேளை மேற்படிச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலை க்கு மாற்றப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

11 ஜூன் 2014

வடக்கு,கிழக்குப் பெண்களுக்கு பாதுகாப்பில்லை!

வடக்கு,கிழக்கில் 40 வீதமான பெண்கள் தொடர்ந்தும் பாதுகாப்பற்ற நிலைமையை உணர்வதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் பிரதிநிதி அலியான் சிபனலே இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு இராணுவ மயப்படுத்தப்பட்டிருப்பதனால் பெண்கள் பாதுகாப்பற்ற நிலைமையை உணர்வதாகத் தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பாக போர் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இவ்வாறான ஓர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

10 ஜூன் 2014

வற்றாப்பளையில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் திருவிழா!

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் விழாவில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர். அத்துடன் தமது பல்வேறு வகையான நேர்த்திகளையும் நிறைவு செய்தனர். நேற்று திங்கட்கிழமை காலை முதல் ஆரம்பமாகிய பொங்கல் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை இடம்பெற்றது. சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பொங்கல் பொங்கிப் படைத்தார்கள். ஆலய சுற்றாடல் எங்கும் பொங்கல் காரணமாகவும் வாசலில் கற்பூரம் கொளுத்தியமையாலும் புகை மண்டலமாகக் காணப்பட்டது. என்றும் இல்லாத அளவுக்கு நேற்றுப் பகல் ஆரம்பமாகிய தூக்குக் காவடிகள், பறவைக் காவடிகள், சப்பாணிக் காவடிகள், பிள்ளைக் காவடிகள், சயனக் காவடிகள் என சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட காவடிகள் கிளிநொச்சி மாவட்டம் உட்பட வன்னி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் எடுத்துவரப்பட்டன. சிறுவர்கள் முதியவர்கள் என வேறுபாடு இன்றி ஆயிரக்கணக்கான காவடிகள் மற்றும் பாற் செம்புகள் கற்பூரச் சட்டிகள் என்பனவும் எடுத்துவரப்ப்ட்டன. பெண் ஒருவர் இரண்டாவது தடவையாகவும் தூக்குக் காவடி எடுத்து தனது நேர்த்தியை நிறைவேற்றினார். இராணுவத்தினரின் உலங்கு வானூர்தியில் இருந்து பிற்பகல் 5மணியளவில் பல தடவைகள் வானில் வட்டமிட்டு ஆலய கோபுரத்தின் மீது உலங்கு வானூர்தியில் இருந்து பூக்கள் சொரியப்பட்டன. ஆலய சுற்றாடலில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். அத்துடன் அதிரடிப்படையினர் உட்பட இராணுவ பொலிஸ் புலனாய்வாளர்கள், சாரணர்கள் மற்றும் தொண்டர் அமைப்புக்களின் பிரதி நிதிகளும் காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

09 ஜூன் 2014

வடக்கில் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்!

வடமாகாணசபைக்கான பொலிஸ் அதிகாரம் பற்றி விவாதம் சூடுபிடித்துள்ள நிலையில் அவசர அவசரமாக காவல்துறையின் விசேட அதிரடிப்படையினர் வடபுலத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர். காவல்துறை அதிகாரத்தின் ஒரு பகுதியை வழங்குவது பற்றி அரசு தரப்பில் சமிக்ஞை காட்டப்பட்டுள்ள நிலையில் முதல் தடவையாக வடக்கில் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பணியாற்றி வரும் பொலிஸாருடன் நாமும் செயற்பட்டு வருகின்றோம் என வடமாகாண காவல்துறையின் விசேட அதிரடிப்படைப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஜே.கே.ஆர்.ஏ. பெரேரா உள்ளுர் ஊடகமொன்றிற்கு தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் தற்போது திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். அதன்படி காவல்துறையினருடன் எமது படையினரும் இணைந்து விசேட செயற்றிட்டம் ஒன்றினை சனிக்கிழமை முதல் முன்னெடுத்துள்ளனர். யுத்தம் முடிந்த பின்னரும் வீதிச்சோதனைகள் நடாத்தப்படுகின்றன என மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் இதனால் பொதுமக்களுக்கே நன்மை என்றும் அவர் மேலும் தெரிவித்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையுடன் இணைந்ததாக அதிரடிப்படையினை களமிறக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி அனைத்து தரப்பினரையும் சந்தேகம் கொள்ள வைத்துள்ளது. கிழக்கில் நிகழ்ந்த பல படுகொலைகள் மற்றும் காணாமல் போதல்களின் பின்னணியில் இதே அதிரடிப்படையே இருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

08 ஜூன் 2014

யாழ். நெடுந்தீவில் நேற்றிரவு 32 இந்திய மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 32 பேர் இலங்கைக் கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு மீன்பிடிப்பதற்காக 8 படகுகளில் வந்த 32 மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் நீரியல் வள துறையினரிடம் கேட்டபோது, கைது செய்யப்பட்டவர்களை தற்போது கடற்பரப்பில் இருந்து காங்கேசன்துறைக்கு கடற்படையினர் கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர். எனவே நண்பகல் அளவில் அனைவரையும் பொறுப்பேற்கவுள்ளதாகவும் யாழ். மாவட்ட நீரியல் வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கணேசமூர்த்தி தெரிவித்தார். இதேவேளை, நேற்று சனிக்கிழமை மாலை தலைமன்னார் கடற்பரப்பில் 8 படகுகளில் வந்த 42பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் நேற்று முன்தினம் எல்லை தாண்டிச் சென்றனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 12பேர் இந்திய கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

07 ஜூன் 2014

பாம்பு பெண் மருத்துவமனையில்!

girl-012தன் வசம் நாக பாம்பு ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த பாம்பு பெண் என அழைக்கப்படும் நிரோஷா விமலரத்ன (டிலானி) என்பவர் பிரசவத்திற்கான அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் கொள்ளுப்பிட்டி களியாட்ட விடுதியில் இரவு நேர நடனப் பெண்ணாகப் பணியாற்றியுள்ளார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பெண் தங்கியிருந்த அநுராதபுரம் வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. பொலிஸ் அனுமதி இன்றி எவரும் இவர் தங்கியிருந்த அறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதேவேளை இவர் சிறிது காலம் சுல்த்தான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ்,பல்கலைகழக மாணவியின் சங்கிலியறுப்பு!

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் கல்வி பயலும் மாணவியொருவரின் சங்கிலியை திருடர்கள் அறுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இவர்கள் வந்த மோட்டார்சைக்கிள் மாணவியின் துவிச்சக்கர வண்டியுடன் சிக்கியதால், அதனை போட்டுவிட்டு ஓடித்தப்பிவிட்டனர். கொக்குவில் பிரம்படி வீதியில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்தது. மாணவி சைக்கிளில் சென்று கொண்டிருந்த சமயம் பின்பக்கமாக வந்தவர்கள் சங்கிலியை அறுத்துள்ளனர். மாணவியும் சங்கிலியை பிடித்துவிட்டார். இதனால் சங்கிலியின் ஒரு பகுதி மாணவியிடம் போக எஞ்சியது திருடர்களின் கைக்கு போனது. இந்த இழுபறியில் திருடர்களின் மோட்டார் சைக்கிளிலும் மாணவியின் துவிச்சக்கரவண்டியும் சிக்கிக் கொண்டன. வேறு வழியில்லாமல் களவாணிகள் இருவரும் மோட்டார்சைக்கிளை போட்டுவிட்டு ஓடித்தப்பிவிட்டனர். விடயம் காவல்த்துறைக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் மோட்டார் சைக்கிளை மீட்டு ஆய்வு செய்தபோது அது நல்லூரில் திருட்டுபோன மோட்டார் சைக்கிள் என்பது தெரிய வந்துள்ளது.

06 ஜூன் 2014

அச்சுறுத்தி மரணச் சான்றுகள் வழங்கப்படுகின்றன – கஜேந்திரன்!

வன்னி இறுதி யுத்தத்தின் பின்னர் உறவினர்களால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான காணாமல் போன இளைஞர் யுவதிகளுக்கு என்ன நடந்தது என்று கடந்த ஐந்து வருடங்களாக உறவினர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். அவ்வாறு உறவினர்களால் இராணுவத்தினரிடம் ஒப்படைத்த சிலர் முல்லைத்தீவில் அமைந்துள்ள நீதிமன்றிலே ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்கள். இவ்வழக்குகள் இழுத்தடிக்கப்படுகின்ற நிலையில் காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் எனவும், சர்வதேசம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும், ஐந்து ஆணடுகள் ஆகியும் சர்வதேசம் இதில் எதுவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை என்பதை வலியுறுத்தியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேசம் உள்ளக விசாரணை, உள்ளக விசாரணை என சிறீலங்காவுக்குச் சந்தர்பங்களை வழங்கிக்கொண்டு இருக்கின்ற இச்சூழலில் சிறீலங்கா அரசாங்கம் தனது இராணுவ இயந்திரத்தினைப் பயன்படுத்தி , காணாமல் போன உறவுகளின் குடும்பத்தினரை அச்சுறுத்தி, அவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்குகின்ற செயற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கின்றதே தவிர, காணாமல் போனோர் தொடர்பில் ஒரு நேர்மையான விசாரணையை நடத்தி காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய செயற்பாடுகளை இதுவரை சிறீலங்கா அரசாங்கம் செய்யவில்லை. சர்வதேச அழுத்தத்திற்காக ஒரு ஆணைக்குழுவினை நியமித்துள்ளார்கள். அக்காணாமல் போன ஆணைக்குழு கூட புலிகளால் தான் இவர்கள் காணாமல் போனார்கள் என்ற உண்மைக்குப் புறப்பான வாக்கு மூலங்களை உறவினர்களிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார்களே தவிர, உண்மையில் காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் இருந்து உண்மையான கருத்துக்களை அறிந்து, சரணடைந்தவர்களை எந்த இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்களோ அவர்களை இனம்கண்டு அல்லது கடத்தலுடன் தொடர்புடையவர்களை இனம் கண்டு அவர்களுக்கு நடவடிக்கை எடுக்கக்கூடிய எந்த முயற்சிகளிலும் ஈடுபடுவதாக இதுவரை இல்லை.

05 ஜூன் 2014

கத்திக்குத்துக்கு இலக்காகி கணவன் - மனைவி காயம்!

கச்சாய் தெற்கில் இன்று இடம்பெற்ற திருட்டு முயற்சி ஒன்றின் போது முதியவர்களான கணவன் - மனைவி ஆகிய இருவரும் கத்திக்குத்துக்கு இலக்காகினர். இன்று இரவு 8 மணியளவில் கச்சாய் தெற்குப் பகுதியில் கத்திகள், பொல்லுகள் சகிதம் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வீடொன்றுக்குள் புகுந்து திருட முற்பட்டபோது வீட்டில் உள்ளவர்கள் கூக்குரலிடவே வீட்டில் இருந்த கணவன் - மனைவி ஆகிய இருவரையும் கத்தியால் குத்திவிட்டு வீட்டு ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கிவிட்டுச் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தில் அம்பலவாணர் வேலுப்பிள்ளை (வயது 71) அவரது மனைவியான வேலுப்பிள்ளை காசிப்பிள்ளை (வயது 63) ஆகிய இருவரும் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முல்லையில் போராட்டத்தில் காணாமற் போனோரின் உறவுகள்!

புலனாய்வாளர்கள், பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் காணாமல்போரின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகத் திரண்டு தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்தனர். இன்று காலை 8 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக காணாமல் போனோரின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தினர். இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்த வந்தவர்கள் முள்ளிவளை மற்றும் கேப்பாபிலவுப் பகுதிகளில் இடைமறிக்கப்பட்டனர். மாவட்டச் செயலகதை வந்தடைந்தவர்களையும் பஸ்ஸிலிருந்து இறங்கவிடாது சிலர் தடுத்ததுடன் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு எதிராகக் கோஷங்களையும் எழுப்பினர். இவ்வாறான எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் உறவுகள் தமது கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண உறுப்பினர்களான து.ரவிகாரன், அன்ரனி ஜெகநாதன், மேரி கமலா குணசீலன், அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

04 ஜூன் 2014

இந்தியரை நம்பக்கூடாது என பொங்கினாராம் மகிந்த!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச சந்திப்பு பற்றி சிங்களப் பத்திரிகைகள், இணையதளங்கள் வெளியிட்டுள்ள செய்தியை ஜூனியர் விகடன் சுட்டிக்காட்டியுள்ளது. அதில், மோடியை சந்தித்து விட்டு இலங்கை திரும்பிய ராஜபக்ச வெறுப்பின் உச்சத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.ஏதோ என்னை நட்பு ரீதியாகத்தான் அழைத்தார் என்று நினைத்தேன். ஆனால், அவர் என்னை மரியாதையாக நடத்தவில்லை.இதற்கு முன்னால் இருந்த ஆட்சியாளர்கள் எவ்வளவோ பரவாயில்லை. முதல் சந்திப்பிலேயே நம்மை இப்படி நடத்துகிறார் என்றால், ஒரு வருடத்தில் நம்மை இருக்கும் இடம் தெரியாமல் இவர் செய்துவிடுவார்.எந்த இந்தியரையும் நாம் நம்பக் கூடாது என்று பொருமினாராம் ராஜபக்ச என்று சொல்லப்பட்டு உள்ளது.இவ்வாறு ஜூனியர் விகடன் மிஸ்டர் கழுகு பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

03 ஜூன் 2014

விசாரணைக் குழுவின் தலைவி நவிபிள்ளை அம்மையார்!

சிறிலங்காவுக்கு எதிரான சர்வதேச விசாரணையின் தலைமைப் பொறுப்பை முன்னாள் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் கோபி அற்றா அனான் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. கொபி அனான் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளராக இருந்தவர். ஆனால் இந்த விசாரணையின் அறிக்கை, அவருக்கு கீழ் பணியாற்றிய மனித உரிமைகள் ஆணையாளருக்கு வழங்கப்பட வேண்டும். எனவே இதனை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. அதேவேளை இந்த விசாரணைக்கான தலைமையை, தற்போதையை மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையே ஏற்றுக் கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் இன்னும் ஓரிரு மாதங்களில் மனித உரிமைகள் ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ஏற்கனவே சிறிலங்காவுக்கு எதிராக விசாரணை நடத்தி இருந்த மர்சூகி தருமான் அந்த பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார். இந்த நிலையில் நவநீதம்பிள்ளையே சிறிலங்காவுக்கு எதிரன விசாரணை குழுவுக்கு தலைமை வகிப்பார் என்று கூறப்படுகிறது.

02 ஜூன் 2014

முன்னாள் போராளி கைது!

சட்டவிரோத ஆயுதங்களை தன் வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் விடுதலைப் புலிப் போராளி ஒருவர் வாழைச்சேனைப் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி, குளத்துமடுவைச் சேர்ந்தவரான கண்ணமுத்து யோகராசா வயது (48 ) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். வாழைச்சேனை பொலிஸ் நிலையப் புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்படி நபர் அதே இடத்தில் உள்ள யானைவழங்கி எனும் வயல் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். கைதானவரிடமிருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கட்டுத்துவக்கு மற்றும் கைக்குண்டு ஒன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் சில ஆயுதங்களை தான் மறைத்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

01 ஜூன் 2014

மோடிக்கு வாழ்த்து தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பேரணி!

நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பேரணி!இந்தியப் பிரதமராகப் பதவியேற்றிருக்கும் நரேந்திரமோடிக்கு வாழ்த்துத் தெரிவித்து, இந்து சமயப் பேரவை மற்றும் இலங்கை இந்திய இந்து மக்கள் நட்புறவுக் கழகம் என்பன இணைந்து சிறப்பு பூசையை இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தின. முன்னதாக நல்லூர் ஆலய முன்றலில் இருந்து இந்து சமயப் பேரவையின் வளாகம் வரை பேரணி நடத்தப்பட்டது. இலங்கை மக்களுக்கு நல் அமைதி வேண்டியும் , இலங்கை இந்திய நாடுகளிடையே பரஸ்பர உறவை மேம்படுத்த வேண்டியும் இந்த சிறப்பு பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நன்றி:மலரும்.கொம்

31 மே 2014

'புகை சுகத்தின் பகை,யாழில் பேரணி!

யாழில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு 'புகை சுகத்தின் பகை,புகைத்தலில் செலவிடுதலை உன் பிள்ளையின் படிப்பில் முதலிடு ' போன்ற பதாகைகளைத் தாங்கியவாறு இந்த விழிப்புணர்வுப் பேரணி இடம்பெற்றது. இன்று காலை 8மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பமாகிய இந்தப் பேரணி மு.ப 11மணியளவில் யாழ்.வீரசிங்கம் மண்பத்தில் நிறைவு பெற்றது. இந்த விழிப்புணர்வுப் பேரணியை யாழ்.பல்கலைக்கழக சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத் துறையுடன் இணைந்து யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் மருத்துவ விஞ்ஞான பிரிவு,யாழ்ப்பாண மருத்துவச் சங்கம் மற்றும் சமூக நிறுவனங்கள் என்பன இணைந்தே இந்த புகையிலை விழிப்புணர்வுப் பேரணியை ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

22 மே 2014

வயோதிபப் பெண் கொலை!

கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட வயோதிபப் பெண்ணின் தங்க நகையும் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிறீலங்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை கொலை செய்யப்பட்ட வயோதிபப் பெண்ணின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாழ்.அரியாலை இளையதம்பி வீதியிலுள்ள வீட்டிலேயே நேற்றுக் காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டினில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண்ணான சோமசுந்தரம் இராசம்மா என்ற 72 வயதுடையவரே இவ்வாறு திருட்டுக்கு சென்றவர்களினால் கட்டி வைக்கப்பட்ட நிலையில் கழுத்து நெரியுண்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த வயோதிபப் பெண்ணின் மகள் வெளியில் சென்றிருந்த தருணம் பார்த்து வீட்டுக்குள் நுழைந்தவர்கள் தங்க நகைகளை திருடியதோடு வயோதிபப் பெண்ணின் காதினையும் அறுத்து தோட்டினை அபகரித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அயலவர்கள் யாழ்ப்பாணம் சிறீலங்கா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து அங்கு வந்த பொலிசார்
சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

18 மே 2014

இசைப்பிரியாவை இலங்கை இராணுவம் உயிருடன் கைதுசெய்த புதிய ஆதாரம்!

2009ம் ஆண்டிற்குப்பின் தொடர்ச்சியாக எமது உறவுகள் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்ட பல ஆதாரங்களை பிரித்தானிய தமிழர் பேரவை.சர்வதேசத்திற்கு வெளிக்கொண்டு வந்த வண்ணம் உள்ளது , அவ்வாறான ஆதாரங்களை பல்வேறு பகுப்பாய்வுகளுக்கு உட்படுத்தி அதன் நம்பகத் தன்மையை நிரூபித்த பின்னர் அவற்றை பெரும்பாலும் பிரித்தானியாவின் புகழ் பெற்ற ஊடகங்கள் உலகிற்கு வெளிக் கொண்டு வந்த வண்னம் உள்ளன. இவ்வாறான சாட்சிகளும் காட்சிப்பதிவுகளும் உலகின் மனச்சாட்சியை உலுப்ப ஆரம்பித்த பின்னனியில் இலங்கை மீது ஓர் சர்வதேச விசாரணையை ஆரம்பிப்பதற்கான அடித்தளம் இப்போது இடப்பட்டிருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக இன்று , முள்ளிவாய்க்கால் அவலத்தின் 5ம் ஆண்டை நினைவு கூறும் தருணத்தில் , இறுதியுத்தத்தில் உயிருடன் பிடிக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியா, மற்றும் அவரது தோழி உட்பட பலர் உயிருடன் பிடிக்கப்பட்டு கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் உள்ள புகைப்படங்கள் தமிழர் பேரவைக்கு கிடைத்திருக்கின்றதன. இவர்கள் இலங்கை இராணுவக் காவலரணுக்கு அருகாமையில் இருத்தி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படமும், இசைப்பிரியா தனிமையில் இருத்தப்பட்டு அவரைச்சுற்றிலும் பல இலங்கை இராணுவத்தினர் வேடிக்கை பார்க்கும் புகைப்படமும் , இவருடன் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் புகைப்படமும் கிடைக்கப்பட்டிருக்கின்றது. இக் கைதுகளில் ஈடுபட்ட இராணுவத்தினரின் முகங்கள் மிகத்தெளிவாக அடையாளம் காணக்கூடியதக உள்ளது, அதேவேளை இப் புகைப்படங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்று சர்வதேச மட்டத்தில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான தருணத்தில் , தாயகத்தில் இழந்த உறவுகளை நினைவு கூறும் அடிப்படை உரிமை கூட மறுக்கப்பட்ட நிலையில் எமது உறவுகள் வாழ்கின்றனர். எனவே இந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு இன்று உலகளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகின்றன. இங்கே லண்டனில் Trafalgar Square ல் இன்று பிற்பகல் 4 மணிக்கு நீதி கேட்டு ஓர் கவண ஈர்ப்பு போராட்டம் நடைபெற உள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணிகள் , போராட்டங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் அலை அலையாக கலந்து கொண்டமைதான் பிரித்தானிய பிரதமரை யாழ்ப்பானம் வரை கொண்டு சென்றது. மக்கள் சக்திக்கு அவ்வாறான ஒரு பலம் உண்டு என்பதை லன்டன் பேரணிகள் ஏலவே நிரூபித்துள்ளது இவ்வாறான பின்னனியில் இன்று நடைபெறும் கவண ஈர்ப்பு போராட்டத்திற்கு அனைவரையும் பிரித்தானிய தமிழர் பேரவை அழைக்கின்றது.

17 மே 2014

கஜேந்திரன் வீட்டருகில் நிலைகொண்டது படை!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளா் செல்வராசா கஜேந்திரனின் வீட்டிற்கு அருகாமையிலுள்ள சிவசக்தி சனசமூக நிலையத்தில் இன்று மாலை 5.00 மணி தொடக்கம் இராணுவம் நிலைகொண்டுள்ளது. குறித்த சனசமூக நிலையம் கந்தா்மடத்திலுள்ள சிவன் -அம்மன் கோவிலின் தெற்குப்புற வீதியில் அமைந்துள்ளது. இன்று பிற்பகல் 4.00மணியளவில் அப்பகுதிக்கு இராணுவத்தினா் வந்துள்ளனா். அருகில் உள்ள வீடுகளில் குறித்த சனசமூக நிலையத்தின் தலைவா் யார் என்று விசாரித்துள்ளனா். நிர்வாக உறுப்பினர் ஒருவரை கண்டுபிடித்து அவாிடம் குறித்த சனசமூக நிலையத்தின் திறப்பினை பெற்றுக் கொண்ட பின்னர் தாம் இரண்டுநாட்கள் அங்கு தங்கப் போவதாக கூறியுள்ளனா். குறித்த நிர்வாக உறுப்பினரும் அச்சம் காரணமாக மறுபேச்சுப் பேசமுடியாத நிலையில் சம்மதித்துள்ளாா். நாளைய தினம் மே 18ம் திகதி இலங்கை அரசாங்கம் யுத்த வெற்றி விழாவினைக் கொண்டாடவுள்ள நிலையில் அந்த நாளை இன அழிப்பு நாள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரகடனம் செய்துள்ளது. நாளைய தினம் நாடு முழுவதும் போா்வெற்றியை கொண்டாடுவதற்கு சிறீலங்கா அரசும் அதன் இராணுவமும் தயாராகி வரும் நிலையில் அந்நாளில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நினைவேந்தல் நிகழ்வை நடாத்த தாயகத்திலும், புலம்பெயா் தேசங்களிலும், தமிழகத்திலும் தன்மானம் உள்ள தமிழா்கள் தயாராகி வருகின்றனா். இந் நிலையில் அக் கட்சியின் பொதுச் செயலாளா் செல்வராசா கஜேந்திரன் வீட்டிலிருந்து 50 மீற்றா் தூரத்தில் அமைந்துள்ள குறித்த சனசமூக நிலையத்தில் இராணுவம் குடிகொண்டுள்ளமை அப்பகுதியில் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

16 மே 2014

வடமாகாணசபையினில் தீபம்! காலால் மிதித்து அணைத்தனர் பொலிஸார்!


வடமாகாணசபையின் கைதடியிலுள்ள பேரவை கட்டிடம் முன்பதாக இன்று ஏற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுடரினை ஒரு சில வினாடிகளினில் காலால் மிதித்து அணைத்தனர் இலங்கைப்பொலிஸார். அறிவிக்கப்பட்ட படி வடமாகாணசபையின் உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் வடமாகாணசபையினுள் நினைவேந்தல் நிகழ்வினை நடத்த உள்ளே செல்ல முற்பட்டனர். எனினும் அதனை தடுக்கும் வகையினில் பிரதான நுழைவாயில்கள் பூட்டப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்து.அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.எனினும் தாம் மாகாணசபை உறுப்பினர்கள் என அடையாளப்படுத்தி அவர்கள் உள்ளே செல்ல முற்பட்டனர்.அதற்கும் அனுமதி வழங்கப்படாது இன்று மாகாணசபைக்கு விடுமுறையென தெரிவிக்கப்பட்டதுடன் அவர்களை அங்கிருந்து விரட்டியடிக்க முற்பட்டனர். இந்நிலையினில் தம்மால் எடுத்துவரப்பட்ட சுடரினை பேரவைக்கு முன்னதாக சிவாஜிலிங்கம் ஏற்ற முற்பட்டார்.எனினும் சுடரை ஏற்றிய சில வினாடிகளினில் அங்கு பாய்ந்து வந்த பொலிஸ் உயரதிகாரியொருவரை அதனை தள்ளிவீழ்த்தி கால்களினால் மிதித்தார்.அவருடன் இணைந்து ஏனைய பொலிஸாரும் தீபத்தை கால்களால் மிதித்து அணைத்தனர். எனினும் இவை எதனையும் பொருட்படுத்தாது பீறிட்டு வந்த கண்ணீருடனேயே முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளிற்கு மௌன அஞ்சலியை அவர்கள் செலுத்தினர்.அங்கு அஞ்சலி நினைவுரைகளை ஆற்றிய கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் இங்கு நிலவும் அராஜகங்களை சர்வதேசமும் புலம்பெயர் உறவுகளும் புரிந்து கொள்ள அழைப்பு விடுத்தனர். இதனிடையே வடமாகாணசபையின் மற்றொரு பெண் உறுப்பினர் மேரிகமலா முல்லைத்தீவிலிருந்து வருகை தந்து அஞ்சலியினில் கலந்து கொண்டார்.எனினும் தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம் விடுமறையென வீட்டினில் இருந்து கொண்டதாக பணியாளர்கள் தரப்பினில் தெரிவிக்கப்பட்டது. ஏனைய அமைச்சர்களோ உறுப்பினர்களோ கலந்து கொள்ளாமை பங்கெடுத்த பொதுமக்களிடையே கடுமையான விமர்சனங்களை தோற்றுவித்திருந்தது.வலி.வடக்கு பிரதேச சபைதலைவர் ச.சஜீவன் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை பிரதி தலைவர் ந.சதீஸ் ஆகியோரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

10 மே 2014

ஊடகவியலாளரை தாக்கிய பாதுகாப்பு உத்தியோகத்தர்!

யாழ். ஊடகவியலாளர்கள் மீது வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்தில் வைத்து இனம்தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொள்ள முயற்சி மேற்கொண்ட சம்பவம் குறித்து ஊடகவியலாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். யாழ். கோவில் வீதியிலுள்ள வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்திய வெளிவிவகார உயரதிகாரி சுஜித்ரா துரை உள்ளிட்ட அந்நாட்டு உயரதிகாரிகள் குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர். இந்தச்சந்திப்பு குறித்து செய்தி சேகரிக்க யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் கொழும்பைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் அங்கு வருகை தந்திருந்தனர். இந்நிலையில் முதலமைச்சருக்கும் இந்திய வெளிவிவகார அதிகாரிகள் குழுவினருக்குமான சந்திப்பு முடிவுற்றதும் முதலமைச்சரின் வாசஸ்தலத்திலிருந்து வெளியில் வந்த குழுவினரை ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுக்க முயற்சித்த போது அங்கு சிவில் உடையில் திடீரென பிரசன்னமான நபர் ஒருவர் பொலிஸார் முன்னிலையில் ஊடகவியலாளர்களை மிகவும் அநாகரிகமான முறையில் நடத்தியதோடு அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டார். இதேவேளை ஊடகவியலாளர் ஒருவரின் புகைப்படக்கருவியும் சேதத்திற்குள்ளானது. அத்தோடு ஊடகவியலாளர்களை பலவந்தமாக வெளியேற்ற முயற்சித்த குறித்த ஊடகவியலாளர்களை திடீரென தள்ளியதில் அவர்கள் நிலைகுலைந்து போனர்கள். இதேவேளை மேற்படிச் சம்பவமானது சாதாரணமானது (சின்னப் பிரச்சினை) என்றும் ஊடகவியலாளர்களை பலவந்தமாக வெளியேற்ற முயற்சித்து அநாகரிகமாக நடந்து கொண்டநபர் முதலமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் என்றும் கொழும்பிலிருந்து தற்போதுதான் வந்துள்ளார் என்றும் முதலமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் மன்மதராஜா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார். இதேவேளை மேற்படிச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர்கள் சார்பில் நேற்று மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

09 மே 2014

சிறுபான்மையின வேட்பாளரை சிங்களம் ஏற்கப்போவதில்லை!

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை பொது வேட்பாளராக நியமிக்க எந்தவித தேவையும் இல்லை. அவசியமிருப்பின் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ள நிலையில் விக்னேஸ்வரனை நியமிப்பதில் தவறில்லை. எனினும் பெரும்பான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவரின் தேவையுள்ளது என்று ஜே.வி.பி. தெரிவித்தது.ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுமாயின் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொருத்தமானவர். இது குறித்து எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன? என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பில் எதிர்க்கட்சிகளிடம் வினவிய போதே அக்கட்சிகளின் தலைவர்கள் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தனர்.
கயந்த கருணாதிலக:இது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவிக்கையில், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை பொது வேட்பாளராக நியமிப்பது தொடர்பிலோ அல்லது வேறு ஒருவரை பொது வேட்பாளராக நியமிப்பதா என்பது குறித்து நாம் இதுவரையில் முடிவெடுக்கவில்லை. அதற்கான அவசியம் இப்போதைக்கு இல்லையென்றே நாம் நினைக்கின்றோம். அரசாங்கம் எவ்விதமானதொரு தேர்தலை நடாத்தும் என்பது இன்னமும் முடிவான நிலையில் இவ்வாறான கேள்வி எழுவது பொருத்தமற்றதொன்றாகும். விக்னேஸ்வரன் மட்டுமல்ல யார் வேண்டுமென்றாலும் பொது வேட்பாளராக தெரிவு செய்யப்படலாம். ஆனால் தெரிவு செய்யப்படுபவர் பெரும்பான்மை இன சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். வெறுமனே சிறுபான்மை தமிழ் மக்களின் வாக்குகளை மாத்திரம் வைத்து வெற்றி பெற முடியாது. எனவே காலத்தின் தேவைக்கேற்ப நாம் தீர்மானங்களை எடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.
சரத் பொன்சேகா: இது தொடர்பில் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவிக்கையில்,ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளர் யார் என்பது தொடர்பில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். ஏனைய தேர்தல்களைப் போல் அல்ல ஜனாதிபதி தேர்தலென்பது நாட்டின் ஆட்சி மாற்றத்தை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தலே இது. இதன்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே பொது வேட்பாளருக்கான தேவை இருக்கும். எனவே ஏனைய எதிர்க்கட்சிகள் மற்றும் எம்முடன் இணைய விரும்பும் சிறு கட்சிகள் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்திய பின்னரே சரியானதும் உறுதியானதுமொரு வேட்பாளரை நியமிக்க முடியும். எனவே இது தொடர்பில் முடிவுகளை எடுக்க காலம் உள்ளது. விக்னேஸ்வரன் அவர்களை ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக நியமிப்பது குறித்து ஒரு சிலரின் தனிப்பட்ட கருத்துக்கள் வந்துள்ளதே தவிர சரியான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. அனைத்து இன மக்களையும் கவரக்கூடிய வகையில் ஒருவரை நியமிப்பதே சரியானதாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார். ரில்வின் சில்வா: இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வா தெரிவிக்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளராக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை நியமிப்பது தவறில்லை. அவருக்கு அதற்கான உரிமையும் தகுதியும் உள்ளது. ஆயினும் மூவின மக்களின் வாக்குகள் ஜனாதிபதித் தேர்தலின் போது அவசியமானது எனவே தமிழர்களின் முழுமையான வாக்குகள் அவசியம் என்பதைப் போலவே சிங்கள மக்களின் வாக்குகளும் அவசியம். பிரதான எதிர்க்கட்சியாகவோ அல்லது பொது எதிர்க்கட்சியாகவோ இணைந்து தேர்தலில் போட்டியிட்டாலும் சிங்கள மக்களின் வாக்குகளை பெறவேண்டியதொரு தேவை உள்ளது. எனவே அதற்கு ஏற்றாற் போலவே வேட்பாளரையும் நியமிக்க வேண்டும். எனினும் மக்கள் விடுதலை முன்னணியினரைப் பொறுத்த மட்டில் பொது வேட்பாளராக நியமிக்கப்படுபவர் அரசியல் கட்சிகளை பிரதி நிதித்துவப்படுத்தாதவராகவே இருக்க வேண்டும். எந்தவொரு கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டாலும் அதற்கு நாம் ஆதரவு தெரிவிக்கமாட்டோம். மேலும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியமைத்தாலோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உதவியுடன் யாரும் ஆட்சியமைப்பதனாலோ நாட்டின் பிரச்சினைகள் தீர்க்கப்பட போவதில்லை. தத்தமது சுயநலத்திற்காகவும் சர்ச்சைகளை ஏற்படுத்தவுமே இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது என்றார்.

08 மே 2014

யாழ்.பல்கலையில் நாளை அமைதிப் போராட்டம்!

யாழ். பல்கலைக் கழகத்தின் பேராசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் மாணவர் ஒன்றியங்களின் தலைவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நாளை அமைதிப்போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளது. யாழ்.பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், மாணவர் ஒன்றியங்களின் தலைவர்கள் ஆகியோர் பயங்கரவாதச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர் என்றும் அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு துண்டுப்பிரசுரங்கள் பல்லைக்கழக வளாகத்திற்குள் ஒட்டப்பட்டும், வீசப்பட்டும் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேராசிரியர்கள் மற்றும் மாணவர் ஒன்றியங்களின் தலைவர்கள் ஆகியோரை அச்சுறுத்தும் வகையில் அவர்களுடைய பெயர்கள் குறிப்பிடப்பட்டு இந்த அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் நேற்றுமுன்தினம் பல்கலைக்கழக சூழலில் வீசப்பட்டிருந்தன. கலைப்பீட பீடாதிபதி வி.பி.சிவநாதன் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் இராசகுமாரன், மாணவர் ஒன்றியத் தலைவர் சுபாபர், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் கோமேஸ், விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத் தலைவர் வேணுகோபன் ஆகியோர் இச்செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அந்த துண்டுபிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஆட்சேபித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் தாங்கள் அமைதிப்போராட்டத்தில் ஈடுபடப்போகிறார்கள் என அறிவித்துள்ளனர்.

07 மே 2014

கனடிய பாராளுமன்றில் போர்க்குற்ற நாள் நினைவேந்தல்!

கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் அமைந்துள்ள கனடியப் பாராளுமன்றத்தில் “மே 18” நினைவு தினத்தை அனுஸ்டிக்கும் ஏற்பாட்டை கனடிய மனிதவுரிமை மையம் ஏற்பாடு செய்துள்ளது.2009ம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட சகலரையும், அப் போரினால் அநாதரவாக்கப்பட்டவர்களிற்கான விடிவு வேண்டியும் பாராளுமன்றத்தின் மத்திய கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்விற்கு சகல அரசியற் கட்சிகளைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். மே மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமையாக இருக்கின்ற காரணத்தால் அன்று பாராளுமன்றம் மூடப்பட்டிருக்கும். எனவே அதற்கு முற்கூட்டி, மே மாதம் 14ம் திகதி புதன்கிழமை நன்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 1.30 மணி வரை இந்த நிகழ்வு இடம்பெறும் எனவும் கனடிய மனிதவுரிமை மையம் தெரிவித்துள்ளது. கனடியப் பாராளுமன்றத்தினுள் அமைந்துள்ள பிரபல்யமான “பொதுநலவாய நாடுகள் அறை”யில் அமர்வு இடம்பெறுமெனவும், மதிய உணவு நேர இடைவேளையின் போது இந் நிகழ்வு இடம்பெறுவதால் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றுவார்கள் எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் கட்டமைப்பின் கணிப்பீட்டின் பிரகாரம் இறுதிப் போரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதோடு போரின் போதான தர்மங்கள் ஏதும் கடைப்பிடிக்கப்படவில்லை என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இதனை அனுசரணையாக வைத்து மேற்கொள்ளப்படும் இந்த நினைவு நிகழ்வில் கலந்து கொள்வதற்கான அழைப்பை அனைத்து கனடாவாழ் தமிழர்களுக்கும் விடுத்துள்ள கனடிய மனிதவுரிமை மையமானது, தற்போதைய கனடிய அரசின் முயற்சிகளுக்கு மேலும் வலுச்சேர்க்கும் முகமாக கனடாவிலுள்ள இதர தமிழ் அமைப்புக்களையும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவர்கள் contact@chrv.ca மூலமாகவோ அல்லது 416-644-7287 என்ற தொலைபேசி இலக்கத்தின மூலமாகவோ தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

06 மே 2014

யாழ்,பல்கலைக்கழகம் மூடப்படுகிறது!

யாழ்.பல்கலைக்கழகம் எதிர்வரும் 16 ஆம் திகதியிலிருந்து 20 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். மூடப்படுவதற்கான உண்மையான காரணம் தெரிவிக்கப்படாதபோதும் மாணவர்களது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கற்றல் செயற்பாடுகள் குறிப்பிடப்படும் திகதிவரை நிறுத்தப்படுகின்றன என யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்தார் என்று மாணவர் ஒன்றியத் தலைவர் ஒருவர் தெரிவித்தார். விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களையும் எதிர்வரும் 15 ஆம் திகதி விடுதியைவிட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பல்கலைக்கழக நிர்வாகத்தினர்,விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கென அவர்களைப் பலாலி படைத்தளத்துக்கு வருமாறு யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி ஜெனரல் உதயபெரேரா அழைப்புவிடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் இறுதிப்போர் நடைபெற்று 5 ஆண்டுகள் நிறைவுறும் நிலையில் மே 17,18 ஆம் திகதிகளில் போரில் இறந்தவர்களுக்கு மாணவர்கள் அஞ்சலி செலுத்திவிடுவார்கள் என்ற காரணத்தினாலேயே பல்கலைக்கழகத்தை மூட நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக மாணவர்கள் சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது. கடந்த வருடம் நவம்பர் மாதமும் இவ்வாறு காரணம் இன்றி பல்கலைக்கழகம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

05 மே 2014

வீட்டைக்கேட்ட மூதாட்டி மீது தாக்குதல்!

கனடாவிலிருந்து வந்து தனது சொந்த வீட்டிலிருந்தவர்களை வெளியேற்ற முயன்ற மூதாட்டி ஒருவரை வீட்டில் குடியிருப்பவர்கள் தாக்கி காயப்படுத்தி, கொலை அச்சுறுத்தலும் விடுத்துள்ள சம்பவமொன்று சாவகச்சேரி, நுணாவில் மேற்கு பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த, குணாநந்தன் தயாளசோதி (வயது 78) என்ற மூதாட்டி சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தெரியவருவதாவது, நுணாவில் மேற்கைச் சேர்ந்த குறித்த மூதாட்டி, தான் கனடாவுக்குச் செல்வதற்கு முன்னர், வீடில்லாமல் தவித்த ஒரு குடும்பத்தினரை தனது வீட்டில் குடியிருக்க அனுமதித்து, வாடகை ஒப்பந்தமும் செய்துவிட்டுச் சென்றுள்ளார். கனடாவிலிருந்து அண்மையில் திரும்பி வந்த மூதாட்டி, இருபகுதியினரும் செய்து கொண்ட வாடகை ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில், வீட்டிலிருந்து வெளியேறுமாறு குடியிருந்தவர்களைக் கேட்டுள்ளார். வீட்டிலிருந்தவர்கள், தாம் வெளியேறுவதற்கு ஒரு மாத கால அவகாசம் கேட்டபோது, அதற்குச் சம்மதித்து விட்டுச் சென்ற மூதாட்டி, ஒரு மாதத்தின் பின்னர் திரும்ப வந்து, கடந்த ஏப்ரல் 12ம் திகதி வீட்டை விடுவிக்குமாறு கேட்ட போது, குடியிருந்தவர்கள் மீணடும் அவகாசம் கேட்டுள்ளனர். இதனையடுத்து, சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மூதாட்டி முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். வீட்டில் குடியிருந்தவர்களை அழைத்து சாவகச்சேர் பொலிஸார் விசாரித்த போது, இரு நாட்களில் வீட்டிலிருந்து தாம் வெளியேறி விடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும், அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறாததால், நேற்று பகல் வீட்டிற்குச் சென்ற மூதாட்டி வீட்டினை விடுமாறு குடியிருப்பாளர்களைக் கேட்ட போது, வீட்டிலிருந்தவர்கள் மூதாட்டியைத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். அத்துடன், ‘வீட்டுக்கு இனிமேல் திரும்ப வந்தால், கனடாவுக்கு பெட்டிக்குள் வைத்து அனுப்பி விடுவோம்’ என கொலை அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர். காயமடைந்த மூதாட்டி சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து விட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூதாட்டியைத் தாக்கிய நபரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

04 மே 2014

இன்றைய அச்சுவேலி படுகொலை தொடர்பில் இருவர் கைது!

யாழ்.அச்சுவேலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இன்று அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இருவர் கைதுசெய்யப்படுள்ளனர் என அச்சுவேலிப் பொலிஸார் அறிவித்துள்ளனர். அத்துடன் கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டி ஒன்றும் இரத்தக்கறைகளுடன் நவக்கிரிப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாள் வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள தர்மிகா என்பவரது கணவரான தனஞ்செயன் என்பவரும் மற்றுமொரு நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். அச்சுவேலி காதரிப்பாய் பகுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற இந்த பயங்கர சம்பவத்தில் ஒரே குடும்பத்கைந் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் ஆகிய மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை அமெரிக்காவில் செல்லாது!

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தடைப்பட்டியலை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது. 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 424 தனிப்பட்ட நபர்களுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குறித்த அமைப்புக்கள் மீது அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.எனினும், இந்த தடையை தமது நாட்டில் அமுல்படுத்தப் போவதில்லை என பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் தலமையிலான கனேடிய அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது. இதே நிலைப்பாட்டை தற்போது அமெரிக்காவும் வெளிப்படுத்தியுள்ளது. புலம்பெயர் அமைப்பு தடையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களிடம் புலிகள் தொடர்ந்தும் நிதி திரட்டி வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அண்மையில் அறிவித்த போதிலும், அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பட்டியலை ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கவில்லை. தடை செய்யப்பட்ட இயக்கங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் தொடர்பில் உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால், தடையை அமுல்படுத்தப் போவதில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

03 மே 2014

தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்துவரும் கூட்டமைப்பை அகற்ற வேண்டும்!

புலம் பெயர் தமிழர்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ளது போன்று ஈழத்தமிழர்களிடமிருந்தும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை அந்நியப்படுத்துவதோடு தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்து வரும் கூட்டமைப்பை இந்த மண்ணிலிருந்து அகற்றவேண்டும் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி-அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இணைந்து நடத்திய மே தின நிகழ்வு 01.05.2014 கரவெட்டியில் பேரணியுடன் இடம்பெற்றது. இதன்போது இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவா் மேலும் தெரிவிக்கையில், எமது கட்சி தமிழ்மக்களுக்காக செய்யும் சகல நடவடிக்கைகளும் முற்று முழுதாக மழுங்கடிக்கப்பட்டு தகவல்கள் மறைக்கப்பட்டு வருகின்றன.ஆனால் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு மிக விரைவாக சென்றடைகின்றது. இணையத்தளங்களை அவர்கள் அதிகம் பார்ப்பதனாலும் இணையத்தளங்கள் எமது செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருவதனாலும் புலம் பெயர் தமிழர்களிடம் கூட்டமைப்பு நிதி பெற முடியாமல் திண்டாடுகிறது. இந்நிலை விரைவில் ஈழத்திலும் உருவாகும் மக்களிடம் வாக்குகளைப்பெறமுடியாமல் கூட்டமைப்பு திண்டாடும் காலம் மிகவிரைவில் உருவாகும் இந்த மண்ணிலிருந்து எமது இனத்தை அழிக்கும் நடவடிக்கைகளுக்கு துணைபோகும் கூட்டமைப்பு மக்களுக்கு இழைத்த துரோகங்களுக்கு மிகவிரைவில் பொறுப்புக்கூறவேண்டிவரும். கடந்த 2013 ஆம் அண்டு மேதினம் இதே மண்ணில்; நடத்தினோம். வித்தியாசமான காலகட்டத்தில் அந்த மே தினத்தை நடத்தினோம் அன்றைய தினம் தமிழர் தாயகத்தில் இடம்பெறவுள்ள எதிர்கால சதி முயற்சிகள் பற்றியும் கூறியிருந்தேன். மாகாணசபை முறைபற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் கூறியிருந்தேன்.அத்தோடு செத்துப்போன, அழிந்து போன அரசியல் முறைக்கு உயிர்கொடுத்து இலங்கை அரசு முயற்சிக்கிறது அதை சர்வதேச நாடுகளும் ஏற்றுக்கொள்ளுமாறு கூறிக்கொண்டு இருக்கும் போது தான் கடந்த மே தினம் இடம்பெற்றது. ஆனால் இந்தத்தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்திருந்த கூட்டமைப்பு தாம் இதனை முழுமையாக ஏற்றும் கொண்டுள்ளோம் என்று கூற முடியாத நிலையில் உள்ளதாக கூறியிருந்தது. அதேவேளை 13 ஆவது திருத்தசட்டதிற்கு அமைய உருவாக்கப்பட்ட மாகாணசபையை நாம் எடுத்த எடுப்பில் நிராகரிக்காமல் போட்டியிட்டு நிராகரிக்க வேண்டும் என்று கூறியது . இருப்பினும் எமது கட்சி இதனை முற்று முழுதாக நிராகரித்ததோடு சர்வதேச ரீதியாக 13 ஆவது திருத்த சட்டத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட மாகாண சபையை தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக திணித்து விடுவார்கள் என்றும் கட்சி அரசியலாக திட்டமிட்டு மாற்றப்படும் என்று கூறினோம். அன்று நாம் கூறியது இன்று நடைமுறைக்கு வந்துள்ளது. ஜ.நா. தீர்மானம் தமிழ்த்தேசத்திற்கு விடிவு கிடைத்து விட்டது அல்லது தமிழ்மக்களுக்கு தீர்வு வழங்கப்பட்டுவிட்டது என்ற நிலையில் இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தான் தீர்மானம் உள்ளது. அதன் வெளிப்பாடாக தான் இன்றும் பல ஆபத்துக்களை தமிழ்மக்கள் அனுபவிக்கின்றார்கள். இந்நிலையில் ஒவ்வொரு தமிழ் மகனும் ஆவலோடு எதிர்பார்க்கும் அரங்காக மாறியுள்ள ஐ.நா மனித உரிமை அமர்வோடு எமது தமிழ்மக்களின் உரிமைகள் முடக்கப்பட்டுவிட்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது நாம் அதன் குறைபாடுகளை சுட்டிக்காடிய போது த.தே.கூ ஆதரித்தது அதனை மக்கள் அங்கி கரித்து விட்டதாக கருதி சர்வதேசமும் அங்கி கரித்து தீர்மானத்தை நிறைவேற்றி விட்டது. சாதகமான விளைவுகள் அத்தீர்மானம் ஊடாக ஏற்படும் என்று கூறியிருந்தனர். முதலாவது தீர்மானத்தின் பின்னர் தமிழர்பிரதேசத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதா இல்லை மாறாக பின்னடைவுகள் தான் ஏற்பட்டது. அந்தத்தீர்மானத்தின் பல முற்னேற்றகரமான அம்சங்கள் உள்ளது அதை நாம் ஆதரிக்கின்றோம் என்றனர் இப்போது மூன்றாவது தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்திற்காக 47 நாடுகளுக்கு கடிதம் எழுதியதாகவும் அக் கடிதம் தான் இத்தீர்மானத்திற்கு காரணம் என்றும் கூட்டமைப்பின் தலைவர் கூறினார். மக்கள் வாக்களித்து தெரிவு செய்த கட்சி என்பதனால் கூட்டமைப்பின் கருத்தை ஏற்று தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. இது அமெரிக்க தீர்மானமல்ல தமிழ்மக்களின் பெயரைப்பயன்படுத்தி கூட்டமைப்பு கொண்டுவந்த தீர்மானம். இந்தத்தீர்மானத்தில் தமிழா்கள் பற்றி எதுவுமே கூறப்படவில்லை. தமிழ் என்ற சொல் பாவிக்கப்படவேயில்லை என்றும் அப்படிபட்ட தீர்மானத்தையே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வலியுறுத்தியது என்று அரசாங்கத்துடன் இணைந்து தமிழினத்தை கூட்டமைப்பு அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறினாா்தமிழ்த்தேசத்தை இல்லாதொழிக்கும் அரசின் சகல நடவடிக்கைளும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் மே தின நிகழ்வில் த.தே.ம.முன்னணி வலியுறுத்தல் தமிழ்த்தேசியமக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இனைந்து நடத்திய தொழிலாளர் தின நிகழ்வு 02.05.2014 பிற்பகல் கரவெட்டி சாமியன் அரசடி ஞானவைரவர் முன்றலில் இடம்பெற்றது. இதில் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அக்கட்சின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்லராஜா கஜேந்திரன் , அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸின் தலைவர் ஆர்.ஆனந்தராஜா மற்றும் அக்கட்சிகளின் உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப்பலர் பங்கு கொண்டிருந்தனர். இந்த மே தின நிகழ்வில் தமிழர் தயாகப்பிரதேசங்களில் தொழிலாளர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தமிழர் தேசயத்தையும் தமிழினத்தையும் அழிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைள் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக பேச்சாளர்கள் வலியுறுத்தியிருந்தனர்; தமிழ்மக்கள் அடிமைகளாகவே உள்ளனர் எமது மக்களின் வாக்குகளைப்பெற்ற கூட்டமைப்பு அரசுடன் இணைந்து செயற்படுவதோடு தமிழ்மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு துணைபோகின்றது என்றும் குற்றச்சாட்டியிருந்தனர்.

01 மே 2014

எம் தலைவனை அவமதிப்பதா?கொதித்தெழுந்த இளைஞர்கள்!

சாவகச்சேரியில் நடைபெற்ற கூட்டமைப்பின் மேதினத்தின் போது தமிழீழத் தேசியத்தலைவரான பிரபாகரனை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவமரியாதைப்படுத்திப் பேசியதால் அங்கு நின்ற இளைஞர்கள் அவரைத் தாக்குவதற்குச் சென்றதாகத் தெரியவருகின்றது. தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களும் கேட்பார் இன்றி அதிகாரத்தில் இருந்தாகவும் அதை மஹிந்த அறியாதவர் அல்ல என்றும் தலைவர் பிரபாகரன் அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டாவது மஹிந்த திருந்த வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் கொதி நிலையை ஏற்படுத்தியது.விக்னேஸ்வரன் உரையாற்றியதை அடுத்து அங்கு நின்றிருந்த இளைஞர்களில் பலர் ஆத்திமடைந்து கவலையடைந்தனர். அவாகளிற்சிலர் அவரை தாக்கவும் முற்ப்பட்டனர். நிலைமையை உணாந்த விக்னேஸ்வரன் வாகனத்தில் ஏறி பொலிஸ் பாதுகாப்புடன் நிகழ்விடத்தை விட்டு வெளியேற முற்பட்ட வேளை அவரை இடைமறித்த இறைஞர்கள், தலைவர் பிரபாகரனைப் பற்றிக் கதைப்பதற்கும் உமக்கு என்ன அருகதை உள்ளது? கொழும்பில் இருந்த உமக்கு எமது தலைவனைப் பற்றிக் கதைப்பதற்கு தகுதி உள்ளதா? எனக் கேட்டு விக்னேஸ்வரன் மீது தாக்குதல் நடத்த முற்பட்டிருக்கின்றனர். உடனடியாக விக்னேஸ்வரின் பாதுகாப்புப் பொலிஸார் சம்பவ இடத்திலிருந்து அவரை மீட்டுச் சென்றதாக அங்கிருந்து தமிழ்லீடரின் செய்தியாளர் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு விடையங்களில் மாகாணசபை தலையிட முடியாதாம்?

தேசிய பாதுகாப்பு விடயங்களில் வடமாகாண சபை தலையீடு செய்யக்கூடாது என அரசாங்கம் வடமாகாண சபையின் நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாடுகளில் இயங்கி வரும் 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அரசாங்கம் நீக்க வேண்டும் என வலியுறுத்தி உறுப்பினர் சிவாஜிலிங்கம் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து நிறைவேற்றியிருந்தார். அந்த தீர்மானத்திற்கு ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர் வடமாகாண சபையின் நிர்வாகத்திடம் விளக்கம் கோரியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் சிவாஜிலிங்கம் சமர்ப்பித்து நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானம் தொடர்பாக அரசாங்கம் அதிகாரபூர்வமாக இன்னமும் எதிர்ப்பு வெளியிடவில்லை என தெரியவருகிறது. வடமாகாண சபையினால் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் அரச திணைக்களங்கள் அரச நிறுவனங்களினால் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.