பக்கங்கள்

07 மே 2014

கனடிய பாராளுமன்றில் போர்க்குற்ற நாள் நினைவேந்தல்!

கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் அமைந்துள்ள கனடியப் பாராளுமன்றத்தில் “மே 18” நினைவு தினத்தை அனுஸ்டிக்கும் ஏற்பாட்டை கனடிய மனிதவுரிமை மையம் ஏற்பாடு செய்துள்ளது.2009ம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட சகலரையும், அப் போரினால் அநாதரவாக்கப்பட்டவர்களிற்கான விடிவு வேண்டியும் பாராளுமன்றத்தின் மத்திய கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்விற்கு சகல அரசியற் கட்சிகளைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். மே மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமையாக இருக்கின்ற காரணத்தால் அன்று பாராளுமன்றம் மூடப்பட்டிருக்கும். எனவே அதற்கு முற்கூட்டி, மே மாதம் 14ம் திகதி புதன்கிழமை நன்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 1.30 மணி வரை இந்த நிகழ்வு இடம்பெறும் எனவும் கனடிய மனிதவுரிமை மையம் தெரிவித்துள்ளது. கனடியப் பாராளுமன்றத்தினுள் அமைந்துள்ள பிரபல்யமான “பொதுநலவாய நாடுகள் அறை”யில் அமர்வு இடம்பெறுமெனவும், மதிய உணவு நேர இடைவேளையின் போது இந் நிகழ்வு இடம்பெறுவதால் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றுவார்கள் எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் கட்டமைப்பின் கணிப்பீட்டின் பிரகாரம் இறுதிப் போரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதோடு போரின் போதான தர்மங்கள் ஏதும் கடைப்பிடிக்கப்படவில்லை என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இதனை அனுசரணையாக வைத்து மேற்கொள்ளப்படும் இந்த நினைவு நிகழ்வில் கலந்து கொள்வதற்கான அழைப்பை அனைத்து கனடாவாழ் தமிழர்களுக்கும் விடுத்துள்ள கனடிய மனிதவுரிமை மையமானது, தற்போதைய கனடிய அரசின் முயற்சிகளுக்கு மேலும் வலுச்சேர்க்கும் முகமாக கனடாவிலுள்ள இதர தமிழ் அமைப்புக்களையும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவர்கள் contact@chrv.ca மூலமாகவோ அல்லது 416-644-7287 என்ற தொலைபேசி இலக்கத்தின மூலமாகவோ தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.