பக்கங்கள்

17 மே 2014

கஜேந்திரன் வீட்டருகில் நிலைகொண்டது படை!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளா் செல்வராசா கஜேந்திரனின் வீட்டிற்கு அருகாமையிலுள்ள சிவசக்தி சனசமூக நிலையத்தில் இன்று மாலை 5.00 மணி தொடக்கம் இராணுவம் நிலைகொண்டுள்ளது. குறித்த சனசமூக நிலையம் கந்தா்மடத்திலுள்ள சிவன் -அம்மன் கோவிலின் தெற்குப்புற வீதியில் அமைந்துள்ளது. இன்று பிற்பகல் 4.00மணியளவில் அப்பகுதிக்கு இராணுவத்தினா் வந்துள்ளனா். அருகில் உள்ள வீடுகளில் குறித்த சனசமூக நிலையத்தின் தலைவா் யார் என்று விசாரித்துள்ளனா். நிர்வாக உறுப்பினர் ஒருவரை கண்டுபிடித்து அவாிடம் குறித்த சனசமூக நிலையத்தின் திறப்பினை பெற்றுக் கொண்ட பின்னர் தாம் இரண்டுநாட்கள் அங்கு தங்கப் போவதாக கூறியுள்ளனா். குறித்த நிர்வாக உறுப்பினரும் அச்சம் காரணமாக மறுபேச்சுப் பேசமுடியாத நிலையில் சம்மதித்துள்ளாா். நாளைய தினம் மே 18ம் திகதி இலங்கை அரசாங்கம் யுத்த வெற்றி விழாவினைக் கொண்டாடவுள்ள நிலையில் அந்த நாளை இன அழிப்பு நாள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரகடனம் செய்துள்ளது. நாளைய தினம் நாடு முழுவதும் போா்வெற்றியை கொண்டாடுவதற்கு சிறீலங்கா அரசும் அதன் இராணுவமும் தயாராகி வரும் நிலையில் அந்நாளில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நினைவேந்தல் நிகழ்வை நடாத்த தாயகத்திலும், புலம்பெயா் தேசங்களிலும், தமிழகத்திலும் தன்மானம் உள்ள தமிழா்கள் தயாராகி வருகின்றனா். இந் நிலையில் அக் கட்சியின் பொதுச் செயலாளா் செல்வராசா கஜேந்திரன் வீட்டிலிருந்து 50 மீற்றா் தூரத்தில் அமைந்துள்ள குறித்த சனசமூக நிலையத்தில் இராணுவம் குடிகொண்டுள்ளமை அப்பகுதியில் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.