பக்கங்கள்

10 செப்டம்பர் 2013

தாக்குதலில் இருந்து தப்பினார் அனந்தி!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை தேர்தலிற்கான பெண் வேட்பாளரும் விடுதலைப்புலிகளது திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராகவிருந்து காணாமல் போயுள்ள எழிலனினது மனைவியுமான அனந்தி தாக்குதல் முயற்சி ஒன்றிலிருந்து மயிரிழையில் தப்பியுள்ளார். வழமை போன்று பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு விட்டு சுழிபுரத்திலுள்ள தனது வதிவிடத்திற்கு திரும்பிக்கொண்டிருந்த போதே யாழ்.நகரின் ஐந்து சந்தியில் வைத்து இன்றிரவு அவர் தாக்கப்பட்டுள்ளார். தமது வாகனத்தை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்த படையினரது பாதுகாப்பு வாகனமொன்று தங்களது வாகனத்தினை தாண்டிச்சென்ற சில நொடிகளில் அதனை பின்தொடர்ந்து சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளிலிருந்தே கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். தாக்குதலுக்கு உள்ளான அனந்தி பயனித்த வாகனம் குறித்த பிரச்சார வாகனத்தின் ஓரமாக தான் அமர்ந்திருந்ததாகவும் தன்னை நோக்கி கற்கள் வீசப்பட்டதையடுத்து சுதாகரித்துக்கொண்டு குனிந்தமையினால் தப்பித்துக்கொண்டதாக தெரிவித்த அவர் அடுத்தடுத்து சிறு கற்களும் வீசப்பட்டதாகவும் தெரிவித்தார். தாக்குதலில் அவர் பயணித்த பிரச்சார வாகனம் சேதமடைந்துள்ளது. முன்னதாக சுன்னாகத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பிரச்சாரக்கூட்டமொன்று நடந்து கொண்டிருந்ததாகவும் அதனை தான் தாண்டி சென்று கொண்டிருந்த வேளை பஸில் ராஜபக்ஸ அங்கு பேசிக்கொண்டிருந்ததாகவும் அங்கிருந்து தான் பின் தொடரப்பட்டிருக்கலாமெனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான அனந்தி பயனித்த வாகனம் தாக்குதல் தொடர்பில் கட்சி தலைமையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் நாளை யாழ்.பொலிஸ் நிலையத்திலும் தேர்தல் திணைக்களத்திலும் முறைப்பாடுகளை செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே இத்தாக்குதல் சம்பவத்தினையடுத்து தனது பிரச்சார நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் வாடகைக்கு எவரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிற்கு வாகனங்களை வழங்க மறுத்துவரும் நிலையில் இன்றைய தாக்குதலையடுத்து அவ்வாறான வாகனங்களை பெறமுடியாமையால் பிரச்சாரங்களை இடைநிறுத்த
யோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை காணாமல் போனவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் பசில் ராஜபக்ஸ யாழ்ப்பாணத்தில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசி 24 மணித்தியாலத்துள் இந்த தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.