பக்கங்கள்

14 செப்டம்பர் 2013

சிங்களவர்களுடன் இணையாவிட்டால் தமிழர்களுக்கு வாழ்வில்லை என்கிறார் வாசுதேவ!

சிங்கள மக்களோடு இணைந்து வாழாவிட்டால் தமிழ் மக்களுக்கு எதிர்காலம் இல்லை எனத் தெரிவித்த இடதுசாரி அமைச்சர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனிநாட்டுக் கோரிக்கையை உள்ளார்ந்தமாக வைத்தே தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்துள்ளதாகவும் சாடியுள்ளனர்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரப்புரைக்காக யாழ்ப்பாணம் வந்துள்ள இடதுசாரி அமைச்சர்களான வாசுதேவநாணயக்கார, டியூகுணசேகர,திஸ்ஸவிதாரண ஆகியோர் யாழ். நகரில் யஹாசி ஹோட்டலில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்."வடமாகாண சபைத் தேர்தல் மூலம் இந்த நாட்டின் ஆட்சியை மாற்ற முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிலைப்பாட்டையே தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளிப்படுத்தி உள்ளது.தனிநாட்டுக்கான கோரிக்கையை முன்வைப்பதன் மூலம் மீள் இணக்கச் செயற்பாடுகளில் இருந்து தூர விலகிச் செல்கின்றனர்''என்று அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்." தனிநாட்டைப் பெறுவதற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சி, மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைத்து மாகாணசபை முறையையே இல்லாமல் செய்கின்ற முயற்சி ஆகும்'' என்றும் அவர் கூறியுள்ளார். "கிழக்கு மாகாணசபைத் தேர்தலின்போது குறிப்பிடாத விடயங்களை ஏன் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போது குறிப்பிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்துள்ளது.இவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் தற்போது பொருத்தமற்ற ஒன்று இது 13 ஆவது திருத்தத்தையும் தாண்டிச் செல்கிறது. இந்தியாவையும் தர்மசங்கடப்படுத்தி உள்ளது'' என்று அமைச்சர் டியூ.குணசேகர கூறியுள்ளார். ""நாம் இந்தியாவில் உள்ள இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கெடுக்க வேண்டும்.பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாகச் சிங்களப் பேரினவாதிகளை குசிப்படுத்தும் விதத்தில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர். சிங்கள மக்களோடு இணைந்து வாழா விட்டால் தமிழ் மக்களுக்கு எதிர்காலமே இல்லை.நாங்கள் உங்களுக்குக் கரம் நீட்டத் தயாரக இருக்கின்றோம்.' என்றும் டியூ குறிப்பிட்டார். "எமது பிரச்சினையை நாம் வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லக்கூடாது. பல்வேறு கருத்துக்களை கொண்டிருந்தாலும் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணப்படவேண்டும்.மாகாண சபையில் அதிகாரங்கள் போதாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதற்காக தனிநாடு தீர்வாகாது'' என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுயநிர்ணயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் பிரிந்து போவதற்காகவே இதனைக் கேட்கின்றனர்'' என்று வாசுதேவ மேலும் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட சமஷ்டியை ஏற்றுக்கொள்கிறீர்களா? என்று ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்டதற்கு இல்லை என்று பதில் அளித்தனர் இடதுசாரி அமைச்சர்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் சமஷ்டியைக் கொடுக்க இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தமை தொடர்பில் கேட்டபோது அது அப்போதிருந்த நிலைமை இப்போதுள்ள நிலைமையில் அது சாத்தியமில்லை என்று அவர் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.