பக்கங்கள்

10 செப்டம்பர் 2013

மக்கள் மிரட்டப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது-ஜெர்மனி

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்தித்த மக்கள் அச்சுறுத்தல்களை எதிர்நோக்குகிறார்கள் என எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஜெனிவாவில் இலங்கை உலகநாடுகளின் பலத்த கண்டனத்துக்குள்ளாகியது.ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நேற்றைய அமர்வில் இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக இப்பேரவையின் உறுப்பினர்களில் அநேகர் இலங்கையின் போக்கைக் காரசாரமாக விமர்சித்தனர்.மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை சுமுகமாகக் கையாள்வதற்கு ஐ.நா.அளிக்கும் தொழில்நுட்ப உதவிகளை தக்க வகையில் பயன்படுத்துமாறு இலங்கை அரசுக்கு அமெரிக்கா இதில் அழுத்தம் கொடுத்தது. நேற்று நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 24ஆவது தொடர் அமர்வில் ஜெனிவாவிலுள்ள ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் எலீன் சம்பர்லேய்ன் டொனாஹோ பேசுகையில்,"நவநீதம்பிள்ளையின் சமீபத்திய இலங்கைப் பயணத்தை அமெரிக்காவும் பெரிதும் வரவேற்கின்றது'' எனத் தெரிவித்துக் கொண்டார்.தீர்வு காணப்படாமல் விடப்பட்டுள்ள மனித உரிமைகள், நீதி, ஜனநாயக ரீதியிலான நிர்வாகம் ஆகியவற்றை துலாம்பரமான ஆய்வதில் வல்லவர் நவநீதம்பிள்ளை என்றும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, நவநீதம்பிள்ளையின் சமீபத்திய இலங்கை விஜயத்தை ஐரோப்பிய ஒன்றியமும் பெரிதும் வரவேற்றுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்களுக்கும், நல்லிணக்கப்பாட்டுக்குமான ஆவணக்குழுவின் பரிந்துரைகளையும் காலதாமதமின்றி நடைமுறைப்படுத்துமாறும் இலங்கை அரசுக்கு அது கோரிக்கை விடுத்துள்ளது.பிள்ளையை சந்தித்த மக்கள் மிரட்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என வெளியாகியுள்ள தகவல்கள் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியம் கேள்விகள் எழுப்பியுள்ளது.இலங்கையில் நவநீதம்பிள்ளையைச் சந்தித்த மக்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள் என வெளியான தகவல்கள் குறித்து ஜேர்மன் கருத்து வெளியிடுகையில், "அதிர்ச்சியூட்டக்கூடியவை'' எனக் குறிப்பிட்டுள்ளது.இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாவலர்களும், பத்திரிகையாளர்களும் எந்தளவான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை இந்த மிரட்டல் சம்பவங்கள் துல்லியமாகக் காட்டுகின்றன என ஜேர்மன் தூதுக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.இந்த மிரட்டல் குற்றச்சாட்டுகள், உள்ளூர் மனித உரிமை காவலர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் மீதான தாக்குதல்கள் ஆகியவை குறித்து பதிலளிக்கவேண்டுமென இலங்கை அரசுக்கு ஆஸ்திரேலிய தூதுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.