பக்கங்கள்

24 செப்டம்பர் 2013

தமிழரின் தீர்ப்பை ஏற்று உடன் தீர்வை வையுங்கள்!

“தாயக மண்ணில் தமிழர் ஆட்சியே மலரவேண்டும் என்ற செய்தியை வடக்கு மக்கள் தமது வாக்குரிமை மூலம் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். இதற்கமைய தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வொன்றை உடன் வழங்க மஹிந்த அரசு முன்வர வேண்டும். இல்லையேல், போராட்டம் வெடிக்கும். சர்வதேசம் வரை போராட்டம் விஸ்தரிக்கப்படும்.” இவ்வாறு நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும், சிரேஷ்ட இடது சாரித்தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு தெரிவித்துள்ளார். வடக்குத் தேர்தலில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப் புக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ள விக்கிரமபாகு, கூட்டமைப்புடன் இணைந்து தமிழர் உரிமைகளுக்காகத் தொடர்ந்தும் போராடுவார் என்றும் அறிவித்துள்ளார். “அரசின் அபிவிருத்திச் சலுகைகளை எட்டி உதைத்துள்ள வடக்கு மக்கள் தமது கொள்கையில் உறுதி பூண்டுள்ளனர். இது வரவேற்கத்தக்கது. எனவே, கூட்டமைப்பின் வெற்றியைக் களமாகப் பயன்படுத்தி ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்காக நாம் தொடர்ந்தும் போராடுவோம். அதேவேளை, அரசியல் தீர்வின் முக்கியத்துவத்தை வடக்கு மக்கள் இத்தேர்தலில் வலியுறுத்தியுள்ளனர். தேர்தல் முடிவுகள் வடக்கு மக்களின் மன நிலையை வெளிப்படுத்துகின்றது. தமக்குரிய உரிமைகளையும், தமது தாயக மண்ணில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தையுமே கோருகின்றனர். எனவே, நீடித்து நிலைக்கக் கூடிய தீர்வை அரசு தமிழர்களுக்கு உடன் வழங்க முன் வரவேண்டும். காலம் இழுத்தடிக்கப்படுமானால், வடக்கிலும் தெற்கிலும் போராட்டங்களை முன்னெடுப்போம்; சர்வதேச மட்டத்திலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்போம். அறவழிப் போராட்டத்தில் ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரும் பங்கேற்க வேண்டும்” என்றும் விக்கிரமபாகு கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.