பக்கங்கள்

19 செப்டம்பர் 2013

மந்தனா வடஅமெரிக்காவில் தஞ்சம்!

கொலை அச்சுறுத்தலையடுத்து, சண்டே லீடர் இணை ஆசிரியர் மந்தனா இஸ்மாயில் அபேவிக்கிரம சிறிலங்காவை விட்டு தப்பிச் சென்றிருப்பது, சிறிலங்கா அரசாங்கத்துக்குப் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பம்பலப்பிட்டியில் உள்ள சண்டே லீடர் இணை ஆசிரியர் மந்தனா இஸ்மாயில் வீட்டுக்குள், மூன்று வாரங்களுக்கு முன்னர் நுழைந்த ஆயுதபாணிகள், மந்தனாவைத் தாக்கியதுடன், அவரையும் அவரது குடும்பத்தினரையும் கத்திமுனையில் பயணம் வைத்திருந்தனர். அவர்கள், வீட்டினுள் தேடுதல் நடத்திக் கொண்டிருந்த போது, அங்கு வந்த சிறிலங்கா காவல்துறையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார், ஏனையவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தை அடுத்து, மந்தனா தலைமறைவாக இருந்த வந்த நிலையில், பூட்டப்பட்டிருந்த அவரது வீடு உடைக்கப்பட்டு அங்கிருந்த கணினியும் திருடப்பட்டது. இந்தநிலையில், மந்தனா, தனது கணவரான சண்டே லீடர் வணிகப் பகுதி ஆசிரியர் ரமேஸ் அபேவிக்கிரம, 10 வயது மகளுடன் சிறிலங்காவை விட்டு வெளியேறி, வடஅமெரிக்க நாடு ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார். உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாலேயே அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஏற்கனவே, சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். அவரையடுத்து, சண்டேலீடர் ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிரெட்றிக்கா ஜான்ஸ், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் அச்சுறுத்தலினால், சிறிலங்காவை விட்டு வெளியேறினார். சண்டே லீடர் ஊடகவியலாளர் சௌகத்அலி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவர் படுகாயத்துடன் தப்பினார். இந்தநிலையில், தற்போது மந்தனாவுக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தலை அடுத்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். தாம் சில மாத காலம் தற்காலிகமாக சிறிலங்காவை விட்டு வெளியேறியிருப்பதாகவும் மீண்டும் நாடு திரும்ப விரும்புவதாகவும் மந்தனா தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கம் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் விவகாரம் ஐ.நா உள்ளிட்ட அனைத்துலக அரங்குகளில் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகி வருகிறது. ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் நடந்து வரும் சூழலில், நியுயோர்க்கில் ஐ.நா பொதுச்சபைக் கூட்டம் ஆரம்பமாகியுள்ள சூழலில், கொமன்வெல்த் மாநாட்டை சிறிலங்காவே நடத்தவுள்ள சூழலில் இவர் நாட்டை விட்டு வெளியேறியிருப்பது சிறிலங்கா அரசாங்கத்துக்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.