பக்கங்கள்

28 செப்டம்பர் 2013

உரத்தகுரலில் சிறிலங்காவைத் தாக்கிய கனேடிய வெளிவிவகார அமைச்சர்!

பொறுப்புக்கூறவும், மனிதஉரிமைகள் குறித்த கடப்பாட்டை நிறைவேற்றவும், சிறிலங்கா முன்வர வேண்டும் என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் அழைப்பு விடுத்துள்ளார். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தின் ஒரு பக்க நிகழ்வாக, நேற்று முன்தினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கொமன்வெல்த் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தில் உரையாற்றிய போதே கனேடிய வெளிவிவகார அமைச்சர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்து கொண்ட கூட்டத்தில் வைத்து, சிறிலங்கா குறித்து உரத்த குரலில் கனேடிய வெளிவிவகார அமைச்சர் காட்டமான கருத்துகளை வெளியிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தை முடித்து வெளியே வந்த கனேடிய வெளிவிவகார அமைச்சர், “ சிறிலங்காவின் மனிதஉரிமைகள் விவகாரம் குறித்து மீண்டும் இன்று நான் சத்தமாகவும் தெளிவாகவும் பேசினேன். போர்க்குற்றங்கள் குறித்த தீவிரமான குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூற நடவடிக்கை எடுக்கப்படாமை, தமிழ்ச் சமூகத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கப்படாமை, போர் முடிவுக்கு வந்த பின்னரும் தொடரும் நிகழ்வுகள் குறித்த கவலைகளையும் அங்கு எடுத்துக் கூறியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். கனேடிய வெளிவிவகார அமைச்சர் அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு, உரத்த குரலில் பேசியதை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.