பக்கங்கள்

30 செப்டம்பர் 2013

கூட்டமைப்பினரால் அனந்தி ஒதுக்கப்படுகிறாரா?

தமிழர் தாயகப் பகுதியில் சிறிலங்கா அரசாங்கம் நடத்திய மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றது. இதில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட அனந்தி சசிதரன் விருப்பு வாக்குகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட திரு.விக்கேனஸ்வரனுக்கு அடுத்த படியாக விருப்பு வாக்கினை பெற்ற அனந்திக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தற்போதைய நிலவரப்படி அனந்தி சசிதரனை, கூட்டமைப்பின் தலைமை நிராகரித்து வருவதாக தெரிய வருகிறது. இந்நிலையில் வடக்கு மாகாணசபை, அமைச்சரவையில் அனந்தி சசிதரனுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் ஒதுக்கப்படுவதாக, வெளியான தகவல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில், "அனந்தி ஒதுக்கப்படுவதான இந்தக் குற்றச்சாட்டு தவறானது. அனந்தி மிகவும் இளையவர். வடக்கு மாகாணசபையில் எமக்கு இளையவர்கள் பலரும், அனுபவம் வாய்ந்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற, குறிப்பிட்ட துறைகளில் அனுபவம் மிக்க சிலரும் இருக்கின்றனர். முதலாவதாக, அனுபவம் உள்ளவர்களை கட்சி கவனத்தில் எடுக்க வேண்டும். இளையவர்கள் சிறிதுகாலம் காத்திருக்க வேண்டிய ஏற்படலாம். வயதான, அனுபவம் வாய்ந்தவர்கள், மாகாணசபையின் ஆரம்பக்கட்டத்தை பொறுப்பேற்கக் கூடும். எவ்வாறாயினும் இந்த விவகாரங்கள் எல்லாமே தற்போது, ஆலோசனையில் தான் உள்ளன." என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.